இது எங்கள் வாழ்வியல் முறை. இப்படி கொள்கை வகுத்துக் கொண்டு இந்த மண்ணாங்கட்டிக்குள்ள தான் வாழ வேண்டும் என்ற எந்த இலட்சியமும் இல்லை. கொள்கை, கட்டுப்பாடு, ஒழுக்கம், விதி, பண்பாடு, கலாச்சாரம், சாதி, மதம், மொழி, இனம், கல்வி, வேலை, திருமணம் இதில் எந்த சொல்லும் எனக்கு எப்போதும் பிடித்ததில்லை. இப்படி ஒரு மானங்கெட்ட வாழ்க்கையை வாழ்ந்ததை மறுபடியும் நினைத்து பார்க்கக் கூட பிடிக்கவில்லை. இது நேற்றைய கனவு மற்றும் ஒரு அனுபவம்.
தினம் என் தோட்டத்திற்கு வந்து செல்லும் அந்த தேன்சிட்டு எனக்குக் கொஞ்ச நேரத்தில் எவ்வளவு விஷயங்களை கற்று கொடுத்து விட்டும், மகிழ்ச்சியையும் கொடுத்துவிட்டல்லவா செல்கிறது. அதற்குத் தெரியுமா மேலே சொன்ன இந்த மனிதர்களின் கொள்கைகளும் ஒழுக்கங்களும்.
இந்த தேன்சிட்டு போல சுதந்திரமாக வாழவே விரும்புகிறேன். ஆம் அதிகபட்ச பொறுப்போடு கூடிய சுதந்திரம். அதை தான் இந்த தேன்சிட்டும் செய்கிறது. அதனால் எந்த தொந்தரவும் எனக்கில்லை. எந்த பிரதிபலனும் இல்லாமல் என்னை மகிழ்வித்து விட்டு செல்கிறது. இதை புரிந்து கொள்வது மிகவும் கடினம். புரிந்தால் வாழ்வது மிக எளிமை. வள்ளுவர் சொன்னார், ஔவையார் சொன்னார் என்பதெல்லாம் இந்த வாழ்வியலுக்கு கொஞ்சங்கூட ஒத்து வராது. சிந்தனை என்ற ஆறாம் அறிவை கொண்டு உருப்படியாக சிந்திக்க இந்த மனித இனம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை, அதனால் தான் இத்தனை சீரழிவு என நம்புகிறேன்.
அதிகபட்ச பொறுப்போடு கூடிய சுதந்திரந்தோடு வாழ அதிக மெனக்கிட வேண்டியுள்ளது. பழகிய பல கெட்ட பழக்கங்களை விட்டு வெளியே வர கடுமையாக போராட்ட வேண்டியுள்ளது. எனவே ஒரு பைத்திய மனநிலையில் தான் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சரி விஷயத்திற்கு வருகிறேன் இரண்டு வருடத்திற்கு முன் எனது சம்பளம் வருடத்திற்கு 6 இலட்சம். அந்த 6 இலட்சத்திலிருந்து நான் அறுவடை செய்தது கடுமையான மன உளச்சல் மட்டுமே. மிகப் பெரிய நிறுவனம் எல்லா வசதிகளும் எனக்கு இருந்தன. வேலையை சரியாக செய்தாலும் செய்யாவிட்டாலும் மாத கடைசியில் எனது வங்கி கணக்கில் சம்பளம் வந்து விழுந்துவிடும். விழுந்த பணம் வீட்டுக்கு வட்டி, காப்பீடு, என எனக்கு தெரியாமலேயே அந்தந்த தேதிகளில் தானாக எடுக்கப்பட்டுவிடும். மீதமிருப்பதை எவ்வாறு செலவு செய்வது என எனது மூளை கசக்கப்படும். ஷாப்பிங், வார இறுதிநாள் பயணங்கள், ஏதாவது பொழுதுபோக்கு தேவைப்பட்டது. என் ஞானத்திற்கு கொஞ்சம் பெருசாக புகைப்படக்கலை என தோன்றியது. அந்த சாதனங்கள் வாங்க ஒரு தொகையை செலவிடப்பட்டது. இன்னும் கொஞ்சம் நல்ல கூடுதல் வசதிகளுடன் கூடிய ஒரு சாதனம் என அதன் செலவு நீண்டு கொண்டே போனது. எப்போதும் ஒரு diversion வேண்டும் என மனம் கேட்டுக்கொண்டே இருந்தது. எதிலும் மனம் அமைதி கொள்ளவில்லை. முக்கியமாக இரண்டு வேலை மட்டுமே செய்து கொண்டிருந்தேன். சம்பாதித்தேன், அதை செலவு செய்து கொண்டிருந்தேன்.
இன்று எனது வருமானம் எனக்கே தெரியாது. எப்போதாவது வரும் வராமலும் போகலாம். அதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒவ்வொரு வேலையையும் நானே கற்றுக்கொண்டு இப்போதைக்கு உடல் உழைப்போடு சில ஆராய்ச்சி அடிப்படையில் பல்நோக்கோடு சில செயல்கள் செய்யப்படுகிறது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் ஓரளவு நிறைவாக வாழ்ந்துவிடலாம்.
கடந்த இரண்டு வருடங்களில் நான் அறுவடை செய்தது மனநிறைவை மட்டுமே. ஒவ்வொரு நாளும் புதிதாக பலவித அனுபவங்களுடன் எங்கள் நாட்கள் கழிகிறது. விதைகள் முளைப்பதும், பூக்கள் பூப்பதும், காய் காய்ப்பதும், கோழி குஞ்சி பொரிப்பதும், ஆடு குட்டி போடுவதும் என எங்கள் குடும்பம் பெரிதாகி கொண்டே போகிறது. இப்போது எனக்கு எதற்கு diversion அல்லது பொழுதுபோக்கின் தேவை?
எங்கள் வீட்டில் தொலைக்காட்சி கிடையாது. செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கை தொந்தரவுகளும் கிடையாது. எனவே எந்த தேவையில்லாத டென்ஷனும் இல்லை. இந்த இணையம் மட்டும் கொஞ்சம் தொந்தரவாக இருக்கிறது. சில தேவைகளின் பொருட்டு வைத்திருக்கிறேன். அந்த தேவையும் தீர்ந்த பின் ஒரு நாள் இதுவும் தேவையில்லாமல் போகலாம். அந்த நேரத்திற்குத் தான் காத்துக்கொண்டிருக்கிறேன்.
(குறிப்பு: மேலே எழுதப்பட்டவை தூங்க முடியாத என் இரவுகளில் என் சிந்தனைகள் மூலம் வெளியேற்றப்படும் விந்தணுக்கள். அவை உயிராகிறதா அல்லது கழிவறையில் கழுவப்படுகிறதா என்பதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை.)
நிம்மதி நீட்டும், குடும்பம் இன்னும் பெரிதாட்டும்