ஆடிப் பட்டத்திற்கேற்ற சிறு தானியப் பயிர்களான சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளத்தைக் குறைவான நீரைப் பயன்படுத்தி பயிரிட்டு அதிக வருவாய் ஈட்டலாம்.
செய்திக் குறிப்பு: உடல் நலத்திற்கு சிறுதானியங்களின் பங்கு முக்கியமாகி விட்டதை மக்கள் உணர்ந்துள்ளதால், தற்போது அதற்கு மவுசு அதிகரித்துள்ளது.
கம்பு: மானாவாரியிலும், இறவையிலும் செம்மண், குறுமண் மற்றும் இருமண் நிலங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. ஆடிப் பட்டத்தில் கோ 7, கோ (சியு) 9, எக்ஸ் 7 மற்றும் ஐசிஎம்வி 221 ஆகிய ரகங்கள் சிறந்தவை. நிலத்தை இரும்புக் கலப்பை மற்றும் நாட்டுக் கலப்பைக் கொண்டு இரு முறை உழுது, நிலத்தில் கட்டிகள் இல்லாமல் தயார் செய்ய வேண்டும்.
ஏக்கருக்கு உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் 4 பொட்டலம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 4 பொட்டலம் ஆகியவற்றை மக்கிய தொழு எருவுடன் கலந்து மண்ணில் இட வேண்டும். 45 செ.மீ. இடைவெளியில் பாத்திகள் அமைக்க வேண்டும் அல்லது நீர் அளவைப் பொறுத்து 10 அல்லது 30 செ.மீட்டர் பாத்திகள் அமைக்க வேண்டும்.
ராகி: கோ 12, கோ 13, ஜிபியு 28, ஜிபுயு 67 ரகங்களைப் பயிரிடலாம். சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்துவது நல்லது. வறட்சியைத் தாங்கி வளர, பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமுடன் ஒரு லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை ஆறு மணி நேரம் ஊறவைத்து, நிழலில் உலர்த்திய பின் விதைத்தால் வறட்சியைத் தாங்கி வளரும்.
விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு பொட்டலம் அசோஸ்பைரில்லம், ஒரு பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களைத் தேவையான அளவு ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து, ஏக்கருக்கு 4 கிலோ விதையுடன் கலக்கி நன்கு நிழலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும். மண் பரிசோதனை முடிவுகளின்படி உரமிடுதல் சிறந்தது. இல்லையெனில், பொதுப் பரிந்துரையான ஏக்கருக்கு 16:8:8 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களைத் தரும் உரங்களான 35 கிலோ யூரியா, சூப்பர் பாஸ்பேட் 50 கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஸ் 13 கிலோ இடலாம்.
மக்காச்சோளம்: நீர்த் தேவை அதிகமுள்ள அனைத்துப் பயிர்களுக்கும் சிறந்த மாற்றுப் பயிராக மக்காச்சோளம் பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்த காலத்தில் விவசாயிக்கு உடனடி வருவாயை இந்தப் பயிர் அளிக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் 90-100 நாள்களில் உயர் விளைச்சலும், கூடுதல் வருவாய் பெற நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும்.
மானாவாரியில் ஆடிப் பட்டத்திலும், இறவையில் ஆடி, புரட்டாசி மற்றும் தைப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். கோ 1, கோ.எச்.3, கோ.எச்.4 ரகங்கள் அனைத்துப் பகுதிகளிலும் பயிரிட ஏற்றதாகும். ஏக்கருக்கு ரகங்களுக்கு 8 கிலோ விதை, வீரிய ஒட்டு ரகங்களுக்கு 6 கிலோ போதுமானது. விதைகளை செடிக்கு செடி 20 செ.மீ. மற்றும் பாருக்கு பார் 45 செ.மீ இடைவெளி இருக்கும் வகையில் 4 செமீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.
சாமை: வறட்சியைத் தாங்கி உயர் விளைச்சல் தரக்கூடிய சாமை ரகங்களான கோ 3, கோ (சாமை) 4, பையூர் 2 மற்றும் கே 1 ஆகிய ரகங்களைச் சாகுபடி செய்ய வேண்டும். ஏக்கருக்கு 5 கிலோ விதை போதுமானது. பயிரின் வளர்ச்சி ஒரே சீராக இருக்க விதைப்பான் மூலம் வரிசை விதைப்புச் செய்ய வேண்டும்.
இதன்மூலம் அதிக பரப்பளவில் மண் ஈரம் காய்வதற்கு முன் விதைப்புச் செய்யலாம். விதைகளை 2.5 செ.மீ. ஆழத்தில் வரிசைக்கு வரிசை 25 செ.மீ. இடைவெளியும், பயிருக்கு பயிர் 10 செ.மீ. இடைவெளியும் இருக்கும் வகையில் விதைக்க வேண்டும்.