சாணக்கியரின் நேர்மை!

சாணக்கியரின் நேர்மை!

வரலாற்றில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவக் கதை…
இந்திய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற அரசர்களுள் ஒருவர் சந்திரகுப்தன். அவரது குரு, தலைமை அமைச்சர் சாணக்கியர். அவர் அரசியல் மேதை. அர்த்தசாஸ்திரம் என்ற அரசியல் வழிகாட்டி நூலை எழுதியவர்.

ஒருநாள் அரசவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாணக்கியர் தலைமை அமைச்சர் என்ற முறையில் எழுந்து, “மன்னா! நம் மக்களில் பலர் ஏழ்மை நிலையில் கடுங்குளிரால் வாடுகிறார்கள். அவர்களுக்கு அரசு செலவில் கம்பளிப் போர்வை கொடுத்து உதவ வேண்டும்” என்றார்.”தலைமை அமைச்சர் அவர்களே! தங்கள் கருத்தை வரவேற்கிறேன். எல்லா ஏழை எளிய மக்களுக்கும் கம்பளிப் போர்வை வழங்க ஏற்பாடு செய்கிறேன். அந்தப் பொறுப்பைத் தங்களிடமே ஒப்படைக்கிறேன்” என்றார் அரசர்.

அதன்படியே ஏழைகளுக்கு வழங்க வேண்டிய கம்பளிப் போர்வைகளை சாணக்கியர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் சந்திரகுப்தர்.

சாணக்கியர் ஆடம்பரம் இல்லாத சாதாரண வீட்டில் வசித்து வந்தார். கம்பளிப் போர்வை பற்றிய விஷயம் அந்த ஊர் கொள்ளையர்களுக்குத் தெரியவந்தது. கம்பளிப் போர்வைகளைத் திருடி விற்றால் பல ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும் என்று திட்டமிட்டார்கள்.

குளிர்காலம். நள்ளிரவு. சாணக்கியர் வீட்டிற்கு மூன்று கொள்ளையர்கள் சென்றனர். கம்பளிப் போர்வைகள் விதவிதமாக மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.

சற்றுத் தள்ளி ஒரு கிழிந்த கம்பளியைப் போர்த்திக் கொண்டு சாணக்கியர் படுத்திருந்தார். பக்கத்தில் அவரது வயதான தாயாரும் ஒரு பழைய கிழிந்த போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார். அதைப் பார்த்த திருடர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

திருட வந்ததையும் மறந்தனர். தூங்கிக் கொண்டிருந்த சாணக்கியரை எழுப்பினர். கண் விழித்த சாணக்கியர் திகைத்தார். எதிரே மூன்று திருடர்கள். அவர்களில் ஒருவன், “ஐயா! நாங்கள் உங்கள் வீட்டில் உள்ள கம்பளிகளைத் திருட வந்தோம். இவ்வளவு புதிய கம்பளிகள் குவிந்திருக்கும்போது நீங்களும், உங்கள் தாயாரும் கிழிந்து போன பழைய கம்பளியைப் போர்த்திக் கொண்டிருக்கின்றீர்களே… இவற்றில் இரண்டை எடுத்துக் கொள்ளக்கூடாதா?” என்றான்.

அதற்கு சாணக்கியர், “அவை எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. ஏழை எளிய குடிமக்களுக்கு வழங்கப்படவிருக்கும் அரசாங்கப் பொருள்கள். அவற்றை எப்படி என் உபயோகத்துக்கு பயன்படுத்த முடியும்? ” என்றார் சாணக்கியர்.

திருடர்கள் சாணக்கியரின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். “எங்களை மன்னித்து விடுங்கள். இனி பிறருக்குச் சொந்தமான பொருள்களைத் திருடவே எண்ண மாட்டோம்” என்று சத்தியம் செய்தார்கள்.

என்ன இளைஞனே! சாணக்கியரின் செயலைக் கவனித்தாயா? இந்தக் கதையைக் குறிப்பிட்டதன் காரணம், பொது வாழ்க்கையில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குத்தான்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.