கோழி வளர்ப்பில் குவியும் வருமானம்

கோழி வளர்ப்பில் குவியும் வருமானம்

1003821_498111570279112_1079209822_n

ஆடு, பிராய்லர் கோழி, மீன் என பல்வேறு இறைச்சி வகைகள் இருந்தாலும், அசைவ பிரியர்கள் அதிகம் விரும்புவது நாட்டுக் கோழியை தான். அதன் சுவையே தனி. பண்ணை அமைத்து இக்கோழிகளை கவனத்துடன் வளர்த்தால், நல்ல லாபம் குவிக்கலாம்’ என்கிறார் ஈரோடு நஞ்சை ஊத்துக்குளி ரூஸ்டர்ஸ் கேட்சர்ஸ் நிர்வாக இயக்குனர் பாலு. அவர் கூறியதாவது: நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால் தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாக மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும்.

பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்ல பார்க்கலாம். கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 3 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம்.

முட்டையாக வாங்கி, கருவிகள் மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின் (ரூ.2 லட்சம்), அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் (ரூ.75 ஆயிரம்) தேவைப்படும். புதிதாக தொழில் துவங்குபவர்கள் குறைந்த முதலீட்டில் குஞ்சுகளாகவே வாங்கி வளர்ப்பது எளிதானது.

பராமரிப்பு முறைகள்

பண்ணை வைக்கும் இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது. அந்நிய பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாது. செடி, கொடிகள் இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது. பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால், மற்ற சத்தங்கள் கோழிகளை பாதிக்காது.
முதல் 48 நாட்களுக்கு புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும்.

48 நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையை பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசியும் அதிகரிக்கும்.

வளர்ப்பது எப்படி?

அதிகம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உள்ள கெட்டியான தகடால் வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும். குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காக, வளையத்துக்குள் ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும். வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்பு மூன்றும், குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும். வட்டத்துக்குள் 2 இஞ்ச் உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பி, அதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும். அதனுள் தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும். அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம். தினசரி பேப்பரை மாற்ற வேண்டியது அவசியம்.

அறையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர், நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்ற வேண்டும். அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகி விடாமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும். கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும். இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும். மொத்தமாக 80 நாட்கள் பூர்த்தியானதும், சேவல்களை உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம். கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள் வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மேல் வளர்த்தால் தீவனச் செலவு அதிகமாகும்.

குஞ்சு பொரிப்பு

பண்ணையில் வளர்க்கப்படும் தாய்க்கோழி இடும் முதல் 2 முட்டைகள் குஞ்சு வளர்ப்புக்கு தகுதியற்றது. இதர முட்டைகளில் எடை குறைவு, ஒழுங்கற்ற அமைப்புள்ள முட்டைகளை தவிர்க்க வேண்டும். மற்ற முட்டைகளை இன்குபேட்டர் மெஷினில் 19 நாட்கள் 100 டிகிரி சென்டிகிரேடு வெப்பம், 90 டிகிரி சென்டிகிரேடு ஈரப்பதம் உள்ளவாறு வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் 15 ஆயிரம் முட்டைகளை வைக்கலாம். பின்னர் கேட்சர் மெஷினில் 3 நாள் வைத்தால் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும்.

கட்டமைப்பு

ஆயிரம் கோழி வளர்க்க ஆயிரம் சதுர அடி கொண்ட ஷெட் அமைக்க ரூ.70 ஆயிரம், தீவன பக்கெட் மற்றும் தண்ணீர் பக்கெட் 10க்கு ரூ.1000. குஞ்சுகள் ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, புதூர், சாலைப்புதூர், திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலூர் மற்றும் கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கிடைக்கின்றன. இன்குபேட்டர் மற்றும் கேட்சர் மெஷின் ஐதராபாத்திலும், பண்ணை மற்றும் தீவனப்பொருள்கள் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் வாங்கலாம்.

முதலீடு

ஆயிரம் கோழி குஞ்சுகள் ரூ.28 ஆயிரம், 3.5 டன் தீவனம் ரூ.66,500, பராமரிப்பு கூலி ரூ.15 ஆயிரம், மின்கட்டணம் ரூ.12 ஆயிரம் என 3 மாதத்துக்கு ஒரு முறை மொத்த செலவாக ரூ.1.22 லட்சம் ஆகிறது. கோழிப்பண்ணை அமைக்க வங்கிகளில் கடனுதவி பெறலாம்.

வருமானம்

ஆயிரம் கோழிகள் வளர்த்தால் 30 கோழிகள் வரை இறக்க வாய்ப்பு உள்ளது. 970 கோழிகள் நல்லமுறையில் வளரும். 80 நாள் வளர்த்தபின் விற்பனைக்கு தயாராகும். அப்போது ஒரு கோழியின் சராசரி எடை 1 கிலோ 400 கிராம் வீதம் 1358 கிலோ எடையுள்ள கோழிகளை விற்கலாம். ஒரு கிலோ சராசரியாக ரூ.125க்கு குறையாமல் விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.1.7 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில் லாபம் ரூ.48 ஆயிரம். சராசரியாக மாத லாபம் ரூ.16 ஆயிரம்.

சந்தை வாய்ப்பு

இறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கி செல்வார்கள். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், விழாக்கள், விசேஷங்களுக்கு மொத்தமாகவும் வாங்குவார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் எடுத்து சப்ளை செய்யலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline