குதிர், சேர், பத்தாயம்..
நெல்லு இல்லாத குதிரு எதுக்கு வீட்ட அடைச்சுகிட்டுன்னு இடிச்சுட்டாங்க. இப்ப குதிரு இருந்த இடத்துல மிக்சின்னும், கிரைண்டருன்னும் பத்தாயம் இருந்த இடத்துல டீவின்னும், ஃபிரிசுன்னும் மாறிப்போச்சு.
கருக்கருவா, வாங்கருவா, களவெட்டு, ஒலவாரம், வரிகயிரு, தாம்புகயிரு, வடகயிரு, பூட்டாத்தல, மோத்தடி, மட்டப்பலக, பரம்புசெட்டு, தாருகுச்சி, கடமலக்குச்சி, இந்த வார்த்தையெல்லாம் மொழி தெரியாத சோசியக்காரன் சொல்றாப் போல ஒரே கொழப்பமா இருக்கா. இதெல்லாம் விவசாயத்துக்கு பயன்படுத்துற தளவாட சாமன்களோட பேருதானுங்க. (சில இடங்கள்ள இந்த பேரு வேற மாதிரியும் இருக்கும்.) இப்ப எந்த சாமானும் பயன்பாட்டுல இல்ல. புழக்கத்துல இந்த வார்த்தைகளும் இல்ல. இப்படி விவசாயிகள் மறந்து போன பொருட்கள்ள ஒண்ணுதானுங்க குதிரு.
குதிருங்கறது கிராமங்கள்ள விவசாயிகள் தானியங்களை சேர்த்து வைச்சுக்க பயன்படுத்துற ஒரு கூடு அல்லது சாதனம். வசதிக்கு தகுந்தாப் போல பணக்காரங்க, ஏழைங்க, கூலிக்காரங்கன்னு தானியங்கள சேமிச்சு வச்சுக்க குதிரு போலவே கூன், பத்தாயம், சேருன்னு பயன்படுத்துனாங்க. முன்னே எல்லாம் கிராமத்துல குதிர் இல்லாத வீடே இருக்காது. இப்ப வலைவீசி வீடு வீடா தேடுனாலும் பார்வைக்கு ஒண்ணு கூட கிடைக்காது.
குதிர் செய்முறை :
இது களிமண்ணு, வரகு வைக்கோல் ரெண்டையும் சேர்த்து பண்ணணும். ஆறடி வரைக்கும் குதிர் செய்யலாம். ஒரு அடி அளவுக்கு உயரம் கொண்ட உருளையா செஞ்சு ஒண்ணு மேல ஒண்ணா அடுக்கி வைக்கணும். மேலே கடைசியா வைக்கும் உருளையின் அகலம் கொஞ்சம் குறைவா கோபுர வடிவம் போல குறுகி இருக்கும். மேல் மட்டத்தை மூடுவதற்கு தட்டு போல வட்டமா மண்ணால செய்து மூடணும். மேல் மட்ட வழியாதான் நெல் கொட்டணும். குதிரின் அடியில் ஒரு சின்ன துவாரம் இருக்கும். இது வழியாதான் தேவையான நெல்ல எடுக்கக்கிட்டு தேங்கா செரட்டையும் மண்ணும் வைச்சு மூடிடணும்.
கூனும், குதிர் போலவேதான் இருக்கும். செய்யற முறைதான் வேற. குதிரு பெரும்பாலும் சிறு விவசாயிக்கிட்ட தான் இருக்குமுங்க.
பத்தாயம் :
மாம்பலகை, பலாப்பலகையில செய்றது. இது செவ்வகம், சதுரம் என ரெண்டு வடிவிலையும் இருக்கும். தனித்தனி பெட்டிகளா செய்து ஒண்ணுமேல ஒண்ணா அடுக்கணும். மேல் மட்டத்துல மூடி தொறக்குற மாதிரி கதவு போல இருக்கும். இதன் வழியா நெல்லைக் கொட்டணும், அடிப்பகுதில சின்னதா ஒரு துவாரம் இருக்கும்.
அதன் வழியா எடுக்கணும். ரெண்டு வழியிலேயும் பூட்டுப் போட்டு பூட்டிக் கொள்ளும் வசதி இருக்கும். தேவைக்கு ஏத்தாப்போல ஒன்னுக்கு மேற்பட்டது வச்சுருப்பாங்க. விதை நெல்லு வச்சுக்கவே சில வீடுகள்ள சின்னதா பத்தாயந்தான் பயன்படுத்துவாங்க. இது பெரும்பாலும் பணக்கார விவசாயிகளிடம் இருக்குமுங்க.
சேரு :
இது வைக்கோலையும், வைக்கோலால் ஆன பிரியாலையும் (கயிறு) செய்றது. இதை வீட்டுக்குள்ள வைக்க முடியாது, தெருவுலதான் வச்சுக்கணும். நெல்லை மட்டும் கசக்கி எடுத்த வைக்கோலை நீட்ட நீட்டமா வட்டமான வடிவத்துல வச்சு, பிரியை அதன் மேல தேவையான உயரம் வரும்வரை சுத்தணும். மாடு திண்ணுடாம இருக்க சாணியால மொழுகணும். மேல் மட்டத்த மூடறதுக்கு பனைமட்டையால குடைபோல செஞ்சு அதாலதான் மூடணும். அடி பாகத்துல கதுமையா வைக்கோலை போட்டு அதன் மேல நெல் கொட்டணும். பனைக் குடையை கீழே இறக்கி வச்சுட்டுத்தான் நெல்லு எடுக்கனும். சேரு பெரும்பாலும் தலித்துக்கள் வீட்லதான் இருக்குமுங்க.
தலித்துகள் சின்ன கூரை வீட்டுலதான் இருப்பாங்க. வீட்டுக்குள்ள நாலு பிள்ளை குட்டியோட முண்டி மொழங்கி படுக்கக் கூட முடியாது, குதிரு எப்படி வச்சுக்க முடியும். அதனால தற்காலிகமா தெருவுலதான் சேரு கட்டிக்குவாங்க. அறுவடைக் காலத்துல அவங்க அறுப்புக்கு போயி கூலியா வாங்கிய நெல்ல இதுல சேமிச்சு வச்சுக்குவாங்க. ஆத்திர அவசரத்துக்கு உதவும், பஞ்சம் பட்டினி வந்தாலும் கைகொடுக்குமுங்க.
சில பணக்காற வீடுகள்ளையும் இந்த சேறு இருக்கும். அதிகமா வெளைச்சல் கண்டு பத்தாயமெல்லாம் நெறைஞ்சு போச்சுன்னா தற்காலிகமா இத கட்டிக்குவாங்க. அறுவடை சீசனெல்லம் முடிஞ்சு கோடை காலத்துல நெல்லு வரத்து கொறஞ்சு போகும் சமயம் பாத்து நெல்லு தரகர்கள் கிட்ட வித்துடுவாங்க. அறுவடை சீசன்ல விக்குற விலைய விட கூடுதல் விலை கெடைக்கும்.
ஒரு குடும்பத்துல அறுவடை முடிச்சதும் நடவு கூலி செலவுக்கு வாங்கிய கடன் எவ்வளவோ அதுக்கு தேவையான நெல்ல மட்டும் வித்துட்டு மத்த நெல்ல சேமிச்சு வச்சுக்குவாங்க. சாப்பாட்டுக்கு தேவையான நெல்ல அப்பப்ப அவிச்சு அரிசியாக்குவாங்க. குடும்பத்துல அவசர தேவைக்கு அப்பா கவலையே படாம குதிரை தொறந்துருவாரு.
சின்ன சின்ன சந்தோசம் :
தெருவுல வர்ற சேலைக் காரர்கிட்ட அம்மா, அப்பாவுக்கு தெரியாம எடுக்கும் சேலைக்கு குதிர தொறந்து நெல்லெடுத்துட்டு, எடுத்த தடம் அப்பாவுக்கு தெரியாம மூடிடுவாங்க. அப்பாவும், அம்மாவும் நெல்ல கடையில விக்கிறதுக்கு இடையில அதுலேர்ந்து பிள்ளைங்கக் கொஞ்ச நெல்லெடுத்து பத்திரப்படுத்திக்கும். ஆளில்லாத நேரத்துல தெருவுல வர்ர ஐஸ்க்காரர்ட முன் முதலீடாக் கொடுத்துட்டு தவணையில பள்ளிக்கூடத்துல ஐஸ் வாங்கிக்குவாங்க. குதிர் குடும்பத்துல உள்ள அனைவர் தேவையையும் அப்பப்ப இப்படி சுவாரஸ்யமாத் தீத்து வச்சுருமுங்க.
நெல் சேமிப்பு :
வசதி வாய்ப்புல எந்த மட்டத்துல உள்ளவங்களா இருந்தாலும் நெல்லு சேமிப்புங்கறப் பழக்கத்த வச்சுருந்தாங்க. மொத வருசம் அறுக்குற நெல்ல மறுவருசம் வரைக்கும் வச்சுக்குவாங்க. வானம் பெஞ்சோ காஞ்சோ விவசாயத்துல மண்ணள்ளி போட்டாலும், வயித்துப் பசிலேர்ந்து கொஞ்சம் தப்பிச்சுக்கலாம். திடீர்ன்னு வர்ர எந்த நல்லது, கெட்டதுக்கும் கலங்கத் தேவையில்ல குதிர்ல இருக்க நெல்லு தைரியத்தக் கொடுக்குமுங்க.
ஐதீகம் :
நல்ல நாள்ள, வளர்பிறையில, ராசி பாத்து தன் பிள்ளைகள் கையால நெல்ல குதிரில் போட்டா சீக்கிரம் நெல்லு கொறையாதுன்னு சொல்லுவாங்க. நெல்லு எடுக்கும் போதும் அதே மாதிரி ஐதீகம் பாப்பாங்க. பொங்கல், சித்திரை திருநாள், நல்லேறு கட்றது இப்படி நல்ல நாள்ளயெல்லாம் குதிருக்கு மஞ்சள் பூசி, பொட்டு வச்சு பூஜை பண்ணுவாங்க. இப்படி நெல்ல பாதுகாத்த விவசாய குடும்பத்துல இப்ப ஒரு படி நெல்லு கூட வச்சுக்கறதில்லிங்க.
காலமாற்றம் :
காலப்போக்குல ஒரு போகமா இருந்த நெல்லு வெள்ளாமை இரண்டு போகம், பிறகு பம்புசெட்டு அதிகம் வர ஆரம்பிச்சதும் மூணு போகம்னு நெல்லு போட ஆரம்பிச்சாங்க. பம்புசெட்டு பெரு விவசாயிகிட்ட தான் இருக்கும். சிறு விவசாயிக அவங்கக்கிட்ட தண்ணி காசுக்கு வாங்கி அடுத்த போகமும் நடவு செஞ்சாங்க. ரெண்டு போகம், மூணு போகமுன்னு விவசாயம் செய்ய முடியாதவங்க, மத்தவங்களுக்கு கூலிக்கு கதிரறுக்க போவாங்க. இப்படி மூணு போகமும் விவசாயம் செஞ்சதால சேமிச்சு வைய்க்கிற பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சு போச்சுங்க.
பாரம்பரியம் ஒழிந்தது ;
ஒவ்வொரு வீடுலயும் நெல்லே இல்லாம சும்மாவே இருந்துச்சு குதிரு. காலப்போக்குல நெல்லு இல்லாத குதிரு எதுக்கு வீட்ட அடைச்சுகிட்டு இருக்குன்னு இடிச்சுட்டாங்க. இப்ப குதிரு இருந்த இடத்துல மிக்சின்னும், கிரைண்டருன்னும் பத்தாயம் இருந்த இடத்துல டீவின்னும், ஃபிரிசுன்னும் மாறிப்போச்சு. வாங்குற கூலிய சேரு செஞ்சு சேமிச்சு வச்சவங்க இப்ப பணமா கூலி வாங்குறாங்க. இந்த பத்து பதினஞ்சு வருசத்துல குதிருங்கறதே வீடுகள்ள இல்லாம போச்சுங்க.
இப்படி நெல்ல சேமிப்ப அழிச்சதுல முக்கிய பங்கு கிராமத்துல தனியார் பள்ளிக்கூடம் நடத்துறவனுக்கு உண்டுங்க. ஊருக்கூரு பெட்டிக்கடை மாதிரி ஆங்கிலப் பள்ளிக்கூடத்த தொறந்து வச்சுருக்கானுவ. காலையில எத்திருச்சா ஏழு மணிக்கெல்லாம் நாய் புடிக்கிறவய்ங்க மாதிரி பத்து பள்ளிக் கூடத்துல இருந்து பத்து வேனு வருதுங்க. கூலிக்கு வேலை செய்றவங்களக் கூட விட்டு வைக்கிறது இல்லீங்க. ஒட்டக் கறந்தர்ரானுக. மக்களும் வயித்தக் கட்டி வாயக் கட்டி விவசாயம் பண்ணி, நம்மளால முடிஞ்சதுன்னு சொல்லி அஞ்சாவது, பத்தாவது வரைக்கும் ஆங்கிலக் கல்வி படிக்க வைக்கிறாங்க.
கூலிக்கு வேலைக்குப் போயி மொத்த நெல்லையும் வித்துட்டு தனியார் பள்ளிக்குத் தான் கொட்டிக் குடுக்குறாங்க. கூலி விவசாயி கூட எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வரைக்குமாவது படிக்க வைக்கிறாங்க. நாமதான் இப்படி கஷ்டப்படுறோம் நம்ம பிள்ளைகளாவது நல்லா இருக்கட்டும், அப்படிங்கறாங்க.
பணம்மே பிரதானம் :
விவசாயம் செஞ்சு ஒண்ணும் முன்னேற முடியாது. நம்ம பட்ட பாடு நம்மளோடவே போகட்டும் நம்ம பிள்ளைகளாவது நல்லா இருக்கட்டும் என்ற எண்ணத்தோடு பிள்ளைகளை காசை கொட்டி கல்லூரியில படிக்க வைக்கிறாங்க. நம்ம சத்துக்கு இவ்வளவுதான் தாக்குப் பிடிக்கும் என்றில்லாமல் அதிக வட்டிக்கு வாங்கி போட்டி போட்டுக் கொண்டு படிப்பு வராத பிள்ளைகளைக் கூட தொழில் கல்விப் படிக்க வைக்கிறார்கள். அதற்கு அறுவடை முடிந்ததும் மொத்த உழைப்பையும் வியர்வையையும் காசாக்கி கல்லூரிகளுக்கு கொட்டுகிறார்கள். பொருளாதாரத்தை தேடி போட்டிப் போட்டு மற்றவர்களை முந்திக் கொண்டு ஓட வேண்டிய கட்டாயத்தில் மக்கள் இருக்காங்க.
“இரண்டு ரூபாய்க்கு அரிசி, இலவச அரிசின்னு ரேசன்ல கொடுக்குறாங்க எதுக்கு நெல்லு”ன்னு வித்துர்றாங்க. டி.வி.-இல் வர்ர விளம்பரமோ கண்டதையும் வாங்க தூண்டுது. அவங்க விளைவிச்சத அவங்களே சாப்பிட முடியாம பணத்தேவைக்காக வித்துட வேண்டியிருக்கு. அன்னன்னைய தேவைக்கே கடையில வாங்கி உலையில போட்ற பழக்கத்துக்கு மாறிட்டாங்க.
சார்த்து வாழும் முறை :
விவசாயிகள் தன் சொந்த தேவைக்கு விவசாயம் பண்ணி தன்னோட தேவைகளை பூர்த்திப் பண்ணிகிட்டாங்க. சொந்த வெள்ளாமையில இருந்தே விதை நெல்லு எடுத்துகிட்டாங்க. விவசாயத்துக்கு தேவையான சாமான்களும் அவர்களே வச்சிருந்தாங்க. விவசாயத்துக்கு அடுத்தவங்கள சார்ந்து இல்லாமல் சொந்த உழைப்பையே நம்பியிருந்தவங்க காலப்போக்கில் விதை நெல்லு, பூச்சி மருந்துன்னு ஆரம்பிச்சு, விவசாயத்துக்கு ஆலோசனை வரைக்கும் எல்லா தேவைகளுக்கும் மத்தவங்கள சார்ந்து இருக்க வேண்டிய நிலைமைக்கு மாறிட்டாங்க.
ஆடம்பரம் என்னும் அரக்கன் :
விவசாயத்துல நவீன முன்னேற்றம் நல்ல விசயமா முறையா இருந்தாலும், கிராமத்துல நகரத்து ஆடம்பரத்த கொண்டு வந்துருச்சு. சேமிப்பு பழக்கத்த ஒழிச்சு, போட்டிப போடும் ஆடம்பர கலாச்சாரத்தை, கௌரவத்துக்காக செய்ய வச்சுருச்சு. இதனால விவசாயிகளுக்கு மிஞ்சுனது அவங்க பாடுபட்டு உழைச்ச வெள்ளாமையை கூட சாப்புட முடியாம போனதுதானுங்க.
நன்றி : நண்பர்க்கும்