கருணைக் கிழங்கு

கருணைக் கிழங்கு

இந்தக் கிழங்கை அடிக்கடிச் சாப்பிடுவதன் மூலம் சிலவகை நோய்கள் நம்மைத் தாக்காதவாறு காத்துக் கொள்ளலாம்.

10464047_948437798529429_4579233932594869228_n

கருணைக் கிழங்கில் இரண்டு வகைகள் உண்டு. அவை.

(1) காரும் கருணை
(2) காராக் கருணை என்பவைகளாகும்.

காரும் கருணையைப் பிடிகருணை என்றும், காராக் கருணையைச் சேனைக்கிழங்கு என்றும் கூறுவர். இரண்டுமே சாப்பிடுவதற்கு உகந்தது தான்.

முதல் வகை பெயருக்கேற்பக் காரும் தன்மை உடையது. அது காராக் கருணையை விடக் கைக்குள் அடங்கும்படி, நீண்ட உருளை வடிவில் இருக்கும்.

சாதாரணமாகச் சமைத்துச் சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். அதனால் இக்கிழங்கை நன்றாக வேக வைத்துப் பின்பு தோலை உரித்து, புளி சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள காரல் நீங்கும்; அரிப்பு இருக்காது.

சிலர் அரிசி கழுவிய நீரில் காரும் கருணையை வேக வைப்பதும் உண்டு. இதனாலும் காரல், நமைச்சல் மட்டுப்படும்.

ஜீரண மண்டல உறுப்புகளில் சிறப்பு வேலை செய்ய வல்லது காரும் கருணை. சீரண சக்தியைத் துரிதப்படுத்தும்; அதோடு அந்த உறுப்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும்.

உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் இருந்தாலும் நீங்கும். மலச்சிக்கலையும் போக்கும். நாட்பட்ட காய்ச்சல் இருந்தாலும் குணமாகும்.

பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் நோய்களில் வெள்ளைப்பாடு என்ற நோய்க்குக் கைகண்ட மருந்தாக உதவுகிறது இந்தக் கிழங்கு. உடல்வலி இருந்தால் கூடப் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது. மூல நோய்க்கு மருந்தாகும் இந்த லேகியம் தயாரிக்க,இந்தக் கிழங்கு தான் பிரதானமாகப் பயன்படுகிறது.

காராக் கருணை பெரிய அளவில் ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். அதன் மேல்பாகம் கரடு முரடாக இருக்கும். இதைச் சேனைக் கிழங்கு என்று சொல்லுவார்கள். இந்தக் கிழங்கில் காரல் இருக்காது.

இதில் மாவு மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. அத்துடன் சிலவகை வைட்டமின்களும் உள்ளன.

இதன் மேல் தோலைச் சீவி விட்டு நறுக்கிச் சமைக்கலாம். இதை வைத்து குழம்பு, பொரியல், பருப்பு சேர்த்துக் கூட்டாகச் செய்யலாம். அல்லது எண்ணெயில் வறுத்துச் சிப்ஸாகச் சாப்பிடலாம். இது சாப்பிட ருசியாகவும் இருக்கும்.

காரும் கருணைக்கு இருப்பது போன்ற மருத்துவக் குணங்கள் இதற்கும் உண்டு.

source : Facebook

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline