கண்ணாடி தத்துவம்…!

கண்ணாடி தத்துவம்…!

அந்தக் கால ஜப்பானில் ஒரு துறவி. அவர் எங்கே சென்றாலும் கையில் ஒரு சிறு கண்ணாடியை எடுத்துப்போவார். இதைப் பார்த்த அவரது சிஷ்யர்கள் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டார்கள். ‘நம்ம குருநாதருக்குத் தான் பெரிய அழகுன்னு நெனப்புடா. எப்பப்பார் கண்ணாடியில தன் மூஞ்சைத் தானே பார்த்து ரசிச்சுகிட்டு இருக்கார்!’ சிஷ்யர்கள் இப்படிப் பேசுவது குருநாதருக்கும் தெரியும். ஆனால் அவர் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

கண்ணாடி தத்துவம்

ஒருநாள், அந்த ஜென் துறவியைப் பார்க்க ஓர் அரசன் வந்திருந்தான். அவன் ஆசிரமத்தினுள் நுழைந்தபோது, துறவி வழக்கம்போல் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த அரசனுக்கு ஆச்சர்யம்.

‘ஐயா, நீங்கள் எல்லாவற்றையும் துறந்த முனிவர். ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் தவிர்க்கமுடியவில்லையா?’ என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.

துறவி சிரித்தார். ‘அரசனே, எனக்கு ஏதாவது பிரச்னை வந்தால், அந்தப் பிரச்னைக்கு யார் காரணம் என்று தெரிந்துகொள்ள இந்தக் கண்ணாடியைப் பார்ப்பேன். அங்கே தோன்றும் உருவம்தான் என்னுடைய தலைவலிக்கு முழு முதல் காரணம் என்று புரிந்துகொள்வேன்!’ ‘அப்புறம், அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டாமா? அதைச் செய்வதற்குப் பொருத்தமான நபர் யார் என்று தேடுவேன், மறுபடியும் கண்ணாடியைப் பார்ப்பேன். அங்கே தோன்றும் உருவம்தான் இந்தத் தலைவலியைத் தீர்க்கக்கூடிய மருந்து என்று புரிந்துகொள்வேன்.’

‘எப்போதும் இந்தக் கண்ணாடி என்னிடம் இருப்பதால், என்னுடைய நல்லது, கெட்டதுகளுக்கு யார் காரணம் என்கிற உணர்வை நான் மறப்பதில்லை. நீ எப்படி?’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline