கடலுக்குச் செல்லும் காவிரி நீர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

காவிரி நீர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

 

“கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக” காவிரியிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கும் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. சரி, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படியாவது நடப்பார்கள் என்று எதிர்பார்த்த சிலருக்கும் ஏமாற்றமே பதிலாகக் கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் கூறிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே மத்திய அரசும், கர்நாடக அரசும் தயக்கம் காட்டி வருகின்றன. தற்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், “காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தாலுமே இந்தப் பிரச்னை முடிவுக்கு வராது” என்கின்றனர் நீரியல் வல்லுநர்கள்.

How to Save water in kaveri

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், நீர் நுட்ப மையத்தின் முன்னாள் இயக்குநர் இரா.க. சிவனப்பன். இவர், சொட்டு நீர்ப் பாசன முறையின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். கோவை சாய்பாபாகாலனியில் சிவனப்பனைச் சந்தித்தோம்.

“இந்தியாவில் தண்ணீர் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், அவற்றை நாம் முறையாகப் பயன்படுத்துவதில்லை. நம் நாட்டில் 20 பெரிய நதிகள் உள்ளன. இந்த அனைத்து நதிகளிலும், மத்திய அரசின், சென்ட்ரல் வாட்டர் கமிஷன், கடந்த 1993-ம் ஆண்டு ஆய்வு செய்தது. அதன்படி, 20 நதிகளிலும் மொத்த நீர் சுமார், 186.97 ஹெக்டர் மீட்டர் எனக் கணக்கிட்டுள்ளனர். குறிப்பாக, 20 நதிகளிலும் கிடைக்கும் நீரில், சுமார் 35 சதவிகிதம்தான் பயன்படுத்தப்படுத்த முடியும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 65 சதவிகிதம் பயன்படாத நீராகக் கடலில் கலக்கின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் நதிகள் இணைப்பு என்பது இன்றியமையாத ஒன்று. தேசிய நீர்வள மேம்பாட்டுப் பாதுகாப்பு அமைப்பு, இந்தியாவில் உள்ள அனைத்து நதிப் பள்ளத்தாக்குகளில் உள்ள நீரின் அளவை ஆய்வு செய்தது.

மேலும், இந்த அமைப்பு, கடந்த 30 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பொறியியல் வல்லுநர்களால் புள்ளி விவரங்களைச் சேகரித்து, தென்னக நதி நீர் இணைப்பு சாத்தியமானது என்று திட்டவட்டமாக அறிவித்தது. அவற்றை நிறைவேற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும், 10 ஆண்டுகளுக்கு முன்பே படங்களுடன் அந்த அமைப்பு, மத்திய அரசுக்கு அறிக்கைக் கொடுத்துள்ளது.

கடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்…

அதன்படி, மகாநதியின் உபரி நீரான 280 டி.எம்.சி மற்றும் கோதாவரியின் உபரியான 530 டி.எம்.சி-யும் என மொத்தம் 810 டி.எம்.சி நீர் அந்தப் பள்ளத்தாக்குகளின் தேவைக்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதைத் தெற்கில் எடுத்துவந்து காவிரி மற்றும் வைகை ஆறுகளுடன் இணைக்கலாம் எனவும் பரிந்துரை செய்தது, இவ்விணைப்பின் மூலம் காவிரியின் கல்லணைக்கு, 180-200 டி.எம்.சி நீர் கிடைக்கும். இந்த மொத்தத் திட்டத்தையும் நிறைவேற்ற, 3,716 கி.மீ நீளப் பெரிய மற்றும் சிறிய வாய்க்கால்களைத் தோண்டி, சுமார் 1,000 டி.எம்.சி நீரை வடக்கிலிருந்து தெற்குப் பகுதிக்கு அனுப்ப 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் கேரளாவில் ஓடும் நீர் வளத்தை ஆராய்ந்து, சுமார் 1,000 டி.எம்.சி நீர் உபரியாக உள்ளது என அறிவித்துள்ளது. இதில் 500 டி.எம்.சி நீரைக் கிழக்கில் திருப்பி விட்டால், குறைந்தது 50 லட்சம் ஏக்கர்களில் பாசனம் செய்ய முடியும். கேரளாவில் ஓடும் பம்பை மற்றும் அச்சன்கோயில் நதிகளின் உபரி நீரின் ஒரு பகுதியை 22 டி.எம்.சி தமிழகத்தின் வைப்பாற்றில் திருப்பிவிட்டால், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 2.26 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்ய முடியும். அதற்கு 1,397 கோடி ரூபாய் ஆகும் என்றும், இத்திட்டத்தை 8 ஆண்டுகளில் முடிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதை நிறைவேற்றக் கேரள அரசின் அனுமதி மட்டுமே தேவை. இந்தத் திட்டத்தால் கேரளாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

அதேபோல, பாண்டியாறு – புன்னம்புழா இவ்விரு ஆறுகளும் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கிப் பாய்ந்து, யாருக்கும் பயனில்லாமல், அரபிக்கடலில் கலந்து வீணாகின்றன. தமிழ்நாட்டில் பெய்யும் மழையினால், இந்த ஆறுகளில் கிடைக்கும் சுமார் 10-12 டி.எம்.சி நீரைக் கிழக்கே திருப்பிவிட்டால், கோவை, ஈரோடு மாவட்டங்களில் சுமார் 1.20 முதல் 1.50 லட்சம் ஏக்கர் நிலத்தில் பாசன வசதி செய்ய முடியும்.

கர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும், அரபிக் கடலுக்கும் இடையே உள்ள 13 சதவிகித நிலப்பரப்பில் பெய்யும் மழையில் 60 சதவிகிதம், யாருக்கும் பயனில்லாமல் அரபிக் கடலில் கலக்கிறது. இவ்வாறு வீணாகும் நீரின் அளவு 2,000 டி.எம்.சி. ஆனால், நமது மேட்டூர் அணையின் கொள்ளளவே 93 டி.எம்.சிதான். இந்த நீரின் ஒரு பகுதியைக் கிழக்கே திருப்பிவிட்டால், கர்நாடகா மாநிலத்தின் நீர்த்தட்டுப்பாட்டைச் சமாளித்து, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள சண்டைகளையும் சுமுகமாகத் தீர்த்துவிட முடியும். அதே நேரத்தில், தமிழ்நாட்டின் நீர்த் தேவையையும் சமாளிக்க முடியும். இந்தத் திட்டத்தைச் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு இன்றியும், சிக்கனமாகவும் நிறைவேற்ற நல்லவிதத் தொழில்நுட்பம் தற்போது உள்ளது. நான் கூறிய மற்ற திட்டங்கள் எல்லாம், தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் ஆராய்ந்து நல்ல திட்டங்கள் எனப்பரிந்துரை செய்துள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகா மட்டுமல்ல ஆந்திராவிலும் ஆண்டுக்கு 4,000 டி.எம்.சி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. குறிப்பாக, நம் தமிழகத்திலும் 177 டி.எம்.சி நீரைக் கடலுக்கு அனுப்புகிறோம். இந்த நீரை வைத்து, தெற்கு மாநிலங்களின் தண்ணீர் மற்றும் எரிசக்தி பிரச்னைகளைத் தீர்க்க வழிவகை செய்ய வேண்டும். இவை அனைத்தையுமே, மத்திய, மாநில அரசுகளுக்கு நான் அனுப்பியுள்ளேன். தற்போதைய பிரதமர் மோடிக்கும் அனுப்பிவைத்தேன். இவற்றையெல்லாம் நிறைவேற்றுகிறேன் என்று பதில் கடிதம் போட்டார். ஆனால், எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. இவர்களுக்கு எல்லாம் அக்கறை இல்லை. நான் சொன்னால் அமெரிக்காக்காரன் கேட்பான்.. ஆனால், நம்ம ஆளுங்க கேட்க மாட்டாங்க. எனக்கும் வயசாகிவிட்டது. முன்பு போல ஆக்டிவாக வேலை செய்ய முடியவில்லை. அதனால், இவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை” என்றார் விரக்தியுடன்.

பின் குறிப்பு: நீர் பிரச்னைக்கு இத்தனை தீர்வுகளைக் கூறும் சிவனப்பன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், நீர் நுட்ப மையத்தின் இயக்குநராகப் பணியாற்றி, கடந்த 1986-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர். அதன் பிறகு இந்திய மற்றும் உலக நாடுகளுக்கு நீர் நுட்ப ஆலோசகராக சேவை செய்தவர். உலக வங்கி, FAQ, SIDA எனப் பல்வேறு அமைப்புகள் மூலமாக உலகின் பல நாடுகளுக்கு ஆலோசகராகச் சென்று அறிவுரை வழங்கியவர். மேலும், வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா, ஜிம்பாப்வே, டான்சானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பாசன நீர் வளத்துறையில் ஆலோசகராகப் பணியாற்றியவர். இந்தியாவிலும், தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீஹார் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு ஆலோசகராக இருந்துள்ளார். தமிழ்நாடு திட்டக்குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 50-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவரின் புத்தகங்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வெளியிட்டுள்ளன.

ஆனால், இவ்வளவு பணிகள் செய்தும், தன்னுடைய சொந்த நாடே, தன்னுடைய ஆலோசனைகளைக் கண்டுகொள்வதில்லை என்ற ஆதங்கம் அந்த 91 வயது முதியவரின் முகத்தில் கொதிக்கிறது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline