ஒரே நாளில் கும்பகோணத்தை சுற்றியுள்ள நவக்கிரக கோயில்களையும் அதிக செலவில்லாமல் தரிசிக்க முடியுமா?

 

அதுவும் வெறும் 500 ரூபாயில்… பேருந்தில் மட்டுமே பயணம் செய்து, ஆடம்பரமாக செலவழிக்காமல் சிக்கனமாக திட்டமிட்டால் நிச்சயம் முடியும்.

ஆனால் கும்பகோணத்திலிருந்து அதிகாலை ஐந்துமணிக்கு தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் இரவுக்குள் நவக் கிரக கோயில்களையும் தரிசித்து திரும்ப முடியும். பட்ஜெட் சுற்றுலா என்பதால் அலைச்சலும், சவுகரிய குறைவுகளும் நிச்சயம் அதிகமாக இருக்கும்.

நேரம் ரொம்பவே முக்கியம். பராக்கு பார்த்து நேரத்தை வீணடிக்கக்கூடாது. இறைநினைவு மட்டுமே இருந்தால் இதை எளிதில் செய்யலாம்.

இதை சாத்தியமாக்க நீங்கள் செய்யவேண்டியது என்னென்ன…

1 – சந்திர பகவான்

திங்களூரிலிருந்ந்து முதலில் தொடங்கவேண்டும். கும்பகோணத்திலிருந்து திங்களூர் 33 கிமீ தொலைவில் உள்ளது. இங்கே செல்வதற்கு ஏகப்பட்ட பேருந்துகள் கிடைக்கிறது. ஐந்து மணிக்கு பஸ் ஏறினால் ஆறுமணிக்கு போய் சேர்ந்துவிடலாம். கைலாசநாதர் கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு 7 மணிக்கு கும்பகோணத்திற்கு திரும்பிவிடவேண்டும்.

2 – குருபகவான்

காலை 8.30க்கு கும்பகோணத்திலிருந்து ஆலங்குடிக்கு பஸ் பிடிக்க வேண்டும். கும்பகோணத்திலிருந்து ஆலங்குடி 17 கிலோமீட்டர். அரைமணிநேர பயணத்தில் ஆலங்குடியை அடைந்துவிடலாம். ஶ்ரீ ஆபத் சகாயேஸ்வரர் கோயிலில் அரைமணிநேரம் தரிசனம் முடித்துக்கொண்டு மீண்டும் கும்பகோணம் திரும்பிவிடவேண்டும்.

3.- ராகு பகவான்

10-45க்கு கும்பகோணத்திற்கு மிக அருகிலேயே இருக்ககக்கூடிய ஸ்தலம் இது. ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருநாகேஸ்வரம். பதினைந்து நிமிடங்களில் சென்றுவிடலாம். நாகநாதசுவாமி ஆலயத்தில் தரிசனம் முடித்து திரும்ப அரைமணிநேரம் ஆகும். 11.30 க்குள் கும்பகோணம் திரும்பிவிடவேண்டும்.

4 – சூரிய பகவான்

12 மணிக்கு புறப்பட்டால் 12.30 க்குள் சூரியனார் கோயிலை அடைந்துவிடமுடியும். இது கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிவசூரியநாராயண கோவில் மற்ற கோயில்கள் போல இருக்காது. இது சூரியனுக்காக மட்டுமே இருக்கிற கோயில். இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் ஒரு மணிக்கெல்லாம் அங்கிருந்து கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

5 – சுக்ர பகவான்

சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் மிக அருகிலேயே இருக்கிறது. ஐந்து கிலோமீட்டர்தான். அங்கிருந்து பேருந்துகள் கிடைக்கும். 1-30 மணிக்கு முன்பாகவே அங்கே சென்றுவிட முடியும். இங்கே 1.20 க்குள் நடை சாத்திவிடுவார்கள் என்பதை மனதில் கொள்ளவும். நவக்கிரக கோயில்கள் அனைத்திலுமே 1.30க்கு நடை சாத்தப்பட்டு, அடுத்து நான்கு மணிக்குதான் திறப்பார்கள். எனவே கஞ்சனூரிலிருந்ந்து மயிலாடுதுறைக்கு பேருந்தில் புறப்படவேண்டும்.

6 – செவ்வாய் (அங்காரகன்) பகவான்

கஞ்சனூரிலிருந்து 20 கிலோமீட்டடர் தொலைவில் இருக்கிறது வைத்தீஸ்வரன் கோயில். இங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு 3 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புறப்படவேண்டும். அங்கிருந்தே பேருந்துகள் கிடைக்கும். 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

7 – புதன் பகவான்

வைத்தீஸ்வரன் கோயிலிருந்து 4.30க்கு கிளம்பினால் அங்கிருந்து பேருந்திலேயே 16 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை அடைந்துவிடலாம். ஸ்வேதாரன்யேஸ்வரர் கோயிலில் புதன் பகவானை தரிசித்துவிட்டு 5.30க்கு கிளம்பலாம்.

8 – கேது பகவான்

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது கேதுபகவான் அருளும் கீழ்ப்பெரும்பள்ளம் கோயில். திருவெண்காட்டடிலிருந்தே பேருந்துகள் உண்டு. அரைமணிநேரத்தில் அடைந்துவிடலாம். கேது தோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து கேது தோஷம் நீங்க பிரார்த்திக்கலாம்.

9 – சனி பகவான்

நம்முடைய கடைசி இலக்கு சனிபகவான் வீற்றுள்ள திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து 6.30க்கு கிளம்பினால் அங்கிருந்து சுமாராக 40 கிமீ தூரத்தில் இருக்கிற திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்தில் எட்டலாம். அங்கே சனிபகவானை தரிசித்துவிட்டு. எட்டு மணிக்கு ஊர் திரும்பலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline