ஒருங்கிணைந்தப் பண்ணையில் கலக்கும் தம்பதி…

ஏழு ஏக்கர்… நாலு லட்சம்…

ஒருங்கிணைந்தப் பண்ணையில் கலக்கும் தம்பதி…

விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் பலரும் நீண்ட நெடுங்காலமாக, ‘ஒருங்கிணைந்தப் பண்ணையம்தான் விவசாயிகளை வளமாக வாழ வைக்கும்’ என்று சொல்லி வருகிறார்கள். அதை நிரூபிக்கும் வகையில் பல விவசாயிகள் வெற்றிகரமாக ஒருங்கிணைந்தப் பண்ணையம் அமைத்து வெற்றியும் கண்டு வருகிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலூகா, நிம்மேலி வட்டம், சம்புராயர் கோடங்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த திலகர்-கற்பகாம்பாள் தம்பதி, அத்தகைய வெற்றி விவசாயிகளின் வரிசையில், ஒருங்கிணைந்தப் பண்ணையம் மூலம் நிறைவான வருமானம் பார்த்து வருகிறார்கள்.
”எங்களுக்கு ஏழு ஏக்கர் நிலம் இருக்கு. இதுல பத்து வருஷத்துக்கு முன்னவரைக்கும் ரசாயன முறையில நெல் சாகுபடிதான் செஞ்சுக்கிட்டு இருந்தோம். அப்போ, எங்களுக்கு இயற்கை விவசாயத்தைப் பத்தியெல்லாம் தெரியாது. 2002-ம் வருஷம் கடுமையான புகையான் தாக்குதலால, மொத்த மகசூலும் போயிடுச்சு. அதுல வயலை சுத்தப்படுத்தற செலவுக்குக் கூட மகசூல் கிடைக்கலை. அதுக்கப்பறம், சீர்காழியில இருக்கற இந்திய பாரம்பரிய அறிவியல் மையத்தை அணுகி, எங்க பிரச்னையைச் சொன்னோம்.

அந்த மையத்துலதான் எங்களுக்கு இயற்கை விவசாயம் பத்தி சொல்லிக் கொடுத்தாங்க. அந்த முறையில விவசாயம் செய்தா… பூச்சி, நோய் தாக்குதல் இல்லாம விவசாயம் பண்ண முடியும்னு அவங்க சொன்னதால, இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டோம். அடுத்தடுத்து நல்ல பலன் கிடைச்சாலும், மனசு நிறைவடையல. அதனாலதான், நெல் சாகுபடியோடு மட்டும் நின்னுடாம, ஆடு, மாடு, கோழி, மீன்னு கால்நடை வளர்ப்புலயும் இறங்கி… ஒருங்கிணைந்தப் பண்ணையமா உருவாக்கிட்டோம்.
ஒன்றின் கழிவு… இன்னொன்றின் உணவு… இதுதான் ஒருங்கிணைந்தப் பண்ணையத்தோட அடிப்படை சூத்திரம். பெரும்பாலும் அதிக விலை கொடுத்து, எதையும் வெளியில் இருந்து வாங்க வேண்டியதில்லை. முழுமையா இயற்கையோடு இயைந்து இருக்கறதால, பயிர், கால்நடைனு எல்லாமே நோய் எதிர்ப்பு சக்தியோட வளர்ந்து, லாபம் கொடுக்குது” என்று முன்னுரை கொடுத்த திலகர் தொடர்ந்தார்.
”முழு ஒருங்கிணைந்தப் பண்ணையமா மாறி நாலு வருஷம் ஆகுது. 6 ஏக்கர்ல இரு போகம் நெல்லும்… ஒரு போகம் உளுந்தும் சாகுபடி செய்றோம். 70 சென்ட்ல மீன் குளம் இருக்கு. குளத்துல பரண் அமைச்சு, கொட்டகை போட்டு கோழி வளக்குறோம். குளத்துக்கரையில பசுந்தீவனம், தென்னை, வாழை, மா.. இப்படி பலதரப்பட்ட மரங்களும் இருக்கு. 5 சென்ட்ல காய்கறித் தோட்டம். இதைச் சுத்தி நொச்சி, எருக்கன், நுனா, வேம்பு, ஆடாதொடை…னு மூலிகைச் செடிகள் இருக்கு. மீதியுள்ள 25 சென்ட்ல ஆடு, மாடுகளுக்கான கொட்டகை, உலாவுறத்துக்கான இடம், வைக்கோல் போர், அசோலா மற்றும் மண்புழு உரம் தயாரிப்புக்கான படுக்கைகள்னு எல்லாம் இருக்கு.

நெல் விவசாயம் செய்றதுனால மாடுகளுக்கான வைக்கோலும் இங்கேயே கிடைச்சுடுது. கால்நடைகளின் கழிவுகள், பயிர்களுக்கு உரமாகுது. மூலிகைகளை வெச்சே, பூச்சிவிரட்டிகளைத் தயார் பண்ணிக்கிறோம். கோழிகளோட எச்சம், மீனுக்கு உணவாகுது. மாட்டுக் கொட்டகை, ஆட்டுக் கொட்டகையில இருந்து வர்ற கழிவுநீரும் குளத்துல கலந்துடும். இதுல தண்ணீரை நிரப்பி, ரெண்டு நாட்களுக்கு ஒரு முறை குளத்துல இருந்து பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவோம். மீன்கள் வெளியேறாம இருக்க, வாய்மடையில வலை கட்டியிருக்கோம். நுண்ணுயிரிகள் நிறைஞ்ச குளத்து தண்ணீரை பாய்ச்சுறதுனால, பயிர்களோட வளர்ச்சியும் நல்லா இருக்கு” என்ற திலகர், ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக விளக்கினார்.

மீன் வளர்ப்பில் 70 ஆயிரம்!
”5 அடி ஆழத்துல குளம் இருக்கு. எப்பவும் 4 அடி உயரத்துக்கு தண்ணி இருக்கற மாதிரி பராமரிக்குறோம். கட்லா, ரோகு, மிர்கால் எல்லாம் கலந்து வருஷத்துக்கு ஆயிரம் குஞ்சுகள் விடுவோம். தினமும் ஒரு கிலோ அசோலாவையும் உணவா கொடுக்கிறோம். 6 மாசத்துக்கு ஒரு தடவை மீன்களைப் பிடிச்சு வித்துடுவோம்.
வருஷத்துக்கு சராசரியா 750 கிலோ அளவுக்கு மீன்கள் கிடைக்கும். ஒரு கிலோ 100 ரூபாய்னு விக்கிறோம். அது மூலமா, வருஷத்துக்கு 75 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மீன் குஞ்சுகள், மீன்பிடிக்கிற செலவு போக வருஷத்துக்கு 70 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது. தீவனத்துக்குனு தனியா செலவு கிடையாது.

குளத்தின் மேல் கோழி!
குளத்துக்கு மேல அஞ்சடி உயரத்துல 10 அடி உயரம், 16 அடி நீளம், 8 அடி அகலத்துல பரண் அமைச்சு கொட்டகை போட்டு…
12 நாட்டுக்கோழி, 2 சேவல், 18 ஒயிட் லகான் கோழிகளை வளக்கிறோம். அகத்தி, முருங்கைக்கீரை, அசோலானு உணவு கொடுக்கிறோம். அதோட அடர்தீவனத்தையும் நாங்களே தயாரிச்சு தினமும் ரெண்டு வேளை கொடுக்கிறோம்.

அடர்தீவனத்துக்கு அரிசியும், தவிடும் எங்ககிட்டயே இருக்கும். மீதி தானியங்களை வெளியில வாங்கிக்குவோம். முட்டை, கோழி விற்பனை மூலமா வருஷத்துக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. தீவனச் செலவெல்லாம் போக 5 ஆயிரம் லாபம் கிடைக்கும்.

ஒரு ஆடு 5 ஆயிரம்!
தரையில இருந்து 3 அடி உயரத்துல பரண் அமைச்சு… 12 அடி நீளம், 10 அடி அகலத்துல கொட்டகை போட்டு ஆடு வளக்குறோம். பரண்ல வளர்க்குறதால, ஆடுக எப்போதும் சுகாதாரமா இருக்கு. எல்லாமே தலச்சேரி ஆடுகள்தான். எப்பவும் 5 தாய் ஆடுகள்,
10 குட்டிகள், ஒரு கிடாவும் இருக்குற மாதிரி பராமரிக்குறோம். இந்த 5 பெட்டை ஆடுகள் மூலம், வருஷத்துக்குக் குறைந்தபட்சம் 10 குட்டிகள் கிடைக்கும்.
இந்தக் குட்டிகளை ஒரு வருஷம் வரைக்கும் வளர்த்து, இளம் ஆடு 5 ஆயிரம் ரூபாய்னு விக்கிறோம். இது மூலமா வருஷத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். செலவே இல்லாமல், லாபம் கிடைக்குதா? என்று ஆச்சர்யப்படலாம். ஆடுகளுக்கு என்று தீவனம் வாங்குவதில்லை. இலை, தழைகளைத் தின்றே வளர்ந்து நிற்கின்றன. இந்த ஆடுகள் மூலம் கிடைக்கிற எருவைப் பயிர்களுக்கு உரமாக்கிடுறோம். ஆடு, மாடுகளுக்காக கோ-3, கோ-4, கிளரிசீடியா, சவண்டல், அகத்தினு சாகுபடி செய்றோம்.

ஒரு லிட்டர் பால் 20 ரூபாய் !
ஒரு ஹெச்.எஃப் கலப்பின மாடு, ஒரு நாட்டு மாடு, இதோட கன்னுக்குட்டி ஒண்ணும் இப்ப இருக்கு. இப்போதைக்கு நாட்டு மாடு தினம் மூன்றரை லிட்டர் பால் கறக்குது. கலப்பின மாடு இப்ப சினையா இருக்கு. இது கன்னு போட்ட பிறகு, தினம் 10 லிட்டர் பால் கிடைக்கும்னு எதிர்பாக்கிறோம். ஒரு லிட்டர் பால் 20 ரூபாய்னு விக்கிறோம். மாடுகளுக்கும் தீவனத்துக்குப் பிரச்னை கிடையாது. மாடுகளோட சாணத்தை வயல்ல உரமாக்கிடுறோம். அதோட அசோலா, மண்புழு உரம் தயாரிக்கறதுக்கும் பயன்படுத்திக்கிறோம்.

ஏக்கருக்கு 28 மூட்டை நெல் !
ஒற்றை நாற்று முறையிலதான் நெல் சாகுபடி பண்றோம். குறுவையில ஆடுதுறை-43 ரகத்தையும், தாளடியில வெள்ளைப் பொன்னியையும் சாகுபடி பண்றோம். ஏக்கருக்கு சராசரியா 28 மூட்டை (60 கிலோ) நெல் மகசூல் கிடைக்குது. சீர்காழியில இருக்குற இயற்கை விவசாயிகள் சங்கத்து மூலமாத்தான் நெல்லை விற்பனை செய்றோம். அதனால சந்தை விலையைவிட, அதிக விலை கிடைக்குது. வெள்ளைப் பொன்னி ஒரு மூட்டை ஆயிரம் ரூபாய்க்கும், ஆடுதுறை- 43 ரகம் ஒரு மூட்டை 750 ரூபாய்க்கும் விக்கிறோம்.
குறுவையில ஆடுதுறை-43 ரகத்துல 6 ஏக்கர்லயும் சேத்து, 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. தாளடியில வெள்ளைப் பொன்னி மூலமா 6 ஏக்கருக்கும் சேத்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. எல்லா செலவும் போக மொத்தம், இரண்டு போக நெல் மூலமா… 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை லாபம் எடுத்துடலாம்.
தாளடி அறுவடை முடிஞ்சதும், உளுந்து விதைச்சுடுவோம். அதுல ஏக்கருக்கு 300 கிலோவுக்குக் குறையாம மகசூல் கிடைக்கும். 6 ஏக்கர்ல மொத்தம் 18 குவிண்டால் உளுந்து கிடைக்கும். ஒரு குவிண்டால் 4 ஆயிரம் ரூபாய் வீதம், 72 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவு போக எப்படியும், 50 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்.
5 சென்ட் நிலத்துல வெண்டை, கத்திரி, கொத்தவரை, புடலை, அவரை, பாகல், பூசணி, சுரை, பரங்கி, பீர்க்கன்னு… மாத்தி மாத்தி காய்கறிகளை சாகுபடி செய்றோம். தினமும் எல்லா காய்கள்லயும் சேர்த்து 5 கிலோவுக்கு குறையாம மகசூல் கிடைக்குது. சராசரியா ஒரு கிலோ 10 ரூபாய்னு விக்கிறோம்.
இதன் மூலமா வருஷத்துக்கு 18 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது” என்று பட்டியலிட்ட திலகர் நிறைவாக,
”ஒட்டுமொத்தமா, மீன், கோழி, ஆடு, மாடு, நெல், உளுந்து, காய்கறிகள்னு எல்லாம் சேர்த்து ஏழு ஏக்கர்ல வருஷத்துக்கு 4 லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைக்குது” என்றார், மகிழ்ச்சியாக!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline