எலி ஒழிப்பில் இயற்கை உத்திகள்
எலிகளின் வாழ்க்கை முறை: நன்செய் மற்றும் புன்செய் நிலங்களில் காணப்படும்
சிறிய பெருச்சாளிகள் முதுகுப்பகுதி கரும்பழுப்பு நிறத்துடன் சிறிய வாலுடனும்
காணப்படும். இவைகளில் கருத்தரிக்கும் காலம் 4 நாட்கள் ஆகும். கருத்தரித்த 22
நாட்களில் 1 முதல் 11 குட்டிகளை ஈணும். எலிக்குட்டியானது பிறந்த 3 மாதத்திற்கு
உள்ளாகவே கருத்தரிக்க தயாராகி விடுகிறது. கதிர் முற்றும் மற்றும் அறுவடைக்
காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் அதிகமான அளவில் இனச்சேர்க்கை செய்து குட்டிகளை ஈணுகிறது. சராசரியாக ஒரு ஆண்டிற்கு 100 குட்டிகள் வரை இனப்பெருக்கம்
இருக்கும்.
எலி ஒழிப்பு உத்திகள்
வயல் வெளியில்:பயிர் அறுவடை முடிந்தவுடன் எலி வளைகளை வெட்டி எலிகளை
அழிக்கலாம்.
* ஆழமாக உழுவதன் மூலம் எலிவளைகளை அழித்து எலிகளை ஒழிக்கலாம்.
* வயல்களில் குறுகிய வரப்புகளை அமைத்து எலிகள் வளைகளை அமைப்பதை தவிர்க்கலாம்.
* வயல்களுக்கு அருகிலுள்ள புதர்களை அழித்து எலிகள் தங்குவதை தவிர்க்கலாம்.
* வைக்கோல் படப்புகளையும் பருத்தி மார் போன்றவைகளையும் வயல்களுக்கு அருகில் வைக்கக்கூடாது.
* ஆந்தைகள் எலிகளை பிடித்து இரையாக உண்ணும். எனவே, அவைகள் வயல்களில் அமர்ந்து எலிகளை பிடித்து உண்பதற்கு ஏதுவாக “டி’ வடிவ குச்சிகளை நட்டு வைக்க வேண்டும்.
* தண்ணீர் அதிகம் பாய்ச்சி வளைக்குள் இருக்கும் எலிகளை மூச்சுத்திணறச் செய்து
விரட்டியடிக்கலாம்.
* இரவு வேளைகளில் விளக்குகளை பயன்படுத்தி விளக்கின் வெளிச்சத்தினால் ஓடாமல் நிற்கும் எலிகளை அடித்துக் கொல்லலாம்.
* எலிகளை பாம்புகள் பிடித்துத் திண்பதால் பாம்புகளை அழிப்பதை தவிர்க்கலாம்.
* கிட்டிகள் வைத்து எலிகளை பிடித்து அழிக்கலாம்.
* வாய் அகன்ற பானைகளில் சாணம் கலந்த நீரை நிரப்பி மேற்பரப்பில் சோறு
போட்டுவைத்தால் அவற்றை உண்ணவரும் எலிகள் அந்த சாண நீரில் வீழ்ந்து மூழ்கி
இறந்துவிடும்.