”மாடியில் மட்டுமல்ல, வீட்டில் எந்தெந்தப் பகுதிகளில் சூரிய ஒளி கிடைக்கிறதோ… அங்கெல்லாம் காய்கறிச் செடிகளை வளர்க்க முடியும். வீட்டுத் தோட்டத்தை இரண்டு முறைகளில் அமைக்கலாம். நிழல் வலை (Shade Net) குடில் அமைத்து தோட்டம் போடுவது ஒரு முறை. வழக்கமான முறையில் திறந்த வெளியில் அமைப்பது மற்றொரு முறை. நிழல் வலைக்குள் செடிகளை வளர்க்கும்போது… தண்ணீர் எளிதில் ஆவியாவதில்லை. அதோடு, பூச்சிகளும் தாக்க முடியாது.
பொதுவாக, திறந்த வெளியில் வளர்ப்பதைத்தான் பலரும் விரும்புகிறார்கள். சாதாரண ‘பாலிதீன்’ பைகளில் செடிகள் வளர்க்கும்போது நாளடைவில் அவை வெப்பத்தால் இளகி, வளைந்து நீர்க்கசிவை ஏற்படுத்தும். ஆனால், ‘யூவி பாலிதீன்’ என்ற பிரத்யேக பைகள், மூன்றாண்டுகள் வரை தாக்குப் பிடிக்கக் கூடியவை என்பதால், அவற்றைப் பயன்படுத்தலாம். கோயம்புத்தூர், சேலம்… போன்ற பகுதிகளில் இந்தப் பைகள் கிடைக்கின்றன. நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்களில் இந்தப் பைகளும் தேவையான விதைகளும் விற்கப்படுகின்றன.
வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்து காய்கறிகளையும் வீட்டுத் தோட்டத்திலேயே சாகுபடி செய்ய முடியும். இதற்கு அதிகளவில் இடமும் தேவையில்லை. 200 சதுரடி பரப்பளவுள்ள இடம் இருந்தாலே போதுமானது. வீட்டுத் தோட்டம் அமைக்க, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் வரை கடனும் கிடைக்கிறது. சொந்தமாக வீடு மற்றும் அதையட்டிய இடம், மொட்டை மாடி இருக்கவேண்டும் என்பது, இதற்கு முக்கியமான விதிமுறையாகும்!
வீட்டுத் தோட்டத்தில், மறந்தும்கூட ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால்… வீட்டுத் தோட்டம் என்பதன் அடிநாதமே அடிபட்டு போய்விடும். பூச்சிவிரட்டி, பயிர் வளர்ச்சி ஊக்கிகள் என்று அனைத்தையுமே இயற்கையான முறையில் நீங்களே தயாரிக்கலாம். அல்லது, தரமான கடைகளில் வாங்கியும் பயன்படுத்தலாம். சொட்டுநீர் அமைப்பதை விடுத்து, நாமே தினமும்
தண்ணீர் விடும்போது… நமக்கும் செடிகளுக்குமான உறவு பலப்படும். கூடவே மனதுக்கு உற்சாகம், நிம்மதி கிடைப்பதோடு உடற்பயிற்சியாகவும் அமைந்து உடலுக்கு வலு சேர்க்கும். இவையெல்லாம் ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபணமான உண்மைகள்