இயற்கை AC , நகரத்து மாடி தோட்டம்

இயற்கை AC , நகரத்து மாடி தோட்டம்
————————–————————–

மொட்டைமாடித் தோட்டம், மழைநீரைக் குடிநீராக்கும் ஏற்பாடு, கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் எனத் தன் வீட்டுத் தேவைகளை ஆரோக்கியமான முறையில் நிறைவேற்றிக்கொள்கிறார் இந்திரகுமார்.

”நல்ல காற்று, நல்ல உணவு, நல்ல தண்ணீர் இந்த மூன்றும்தான் மனித வாழ்வுக்கு அடிப்படை. இவற்றை நம் வீட்டிலேயே செய்துகொள்ள முடியும். முதலில் தண்ணீர். ஒரு தொட்டி அமைத்து மழை நீரைச் சேகரிக்கலாம். மழை நீரைச் சாக்கடைக்குள்விட்டு, அது கடல் நீரில் கலந்து, அப்புறம் கடல் நீரைக் குடிநீராக்கும் கூத்துக்குப் பதிலாக, முறையாக மழை நீரைச் சேகரித்தாலே தண்ணீர் பிரச்னை தீர்ந்துவிடும். மிகக் குறைந்த பரப்புள்ள மொட்டை மாடி இருந்தாலே, ஆறு ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்கலாம்.

வெட்டிவேரைத் தண்ணீர் உள்ள தொட்டிக்குள் போட்டுவைத்தால், எல்லா அசுத்தங்களும் அடங்கித் தெளிவடைந்துவிடும். அதைச் செப்புப் பாத்திரத்தில் எடுத்து தேற்றான்கொட்டைகளைப் போட்டால்,
குடிநீர் தயார். யுரேனியத்தையே சமநிலைப்படுத்தும் தன்மை உள்ள தேற்றான்கொட்டைகள் நம் ஊரில் சாதாரணமாகக் கிடைக்கின்றன. இது எல்லாம் இடவசதி குறைவான நகரத்து வீடுகளுக்குத்தான்.

இதுவே கிராமம் என்றால், ஒரு கிணறு வெட்டி மொத்த மழைநீரையும் அதற்குள் விட்டுவிடலாம். அதில் இருந்து எடுத்து செப்புப் பாத்திரத்தில் வைத்து குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்தலாம். என் வீட்டில் இப்படித்தான் செய்கிறேன்.

கேன்களில் அடைக்கப்பட்ட நீர் எத்தனை மாதங்கள் பழையது என்றுகூடத் தெரியாத நிலையில், இந்த எளிய முறையைச் சாத்தியமுள்ள எல்லோரும் செய்தால் தண்ணீர் பிரச்னையும் தீரும், நல்ல ஆரோக்கியமான நீரும் கிடைக்கும். 100 சதுர அடி மொட்டை மாடி இருந்தாலே வருடத்துக்கு 10 ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்க முடியும்.

100 அடி சுற்றளவுகொண்ட வீட்டு மொட்டைமாடியில் பாதைக்கு 5 அடி விட்டுவிட்டால் மிச்சம் 95 அடிகள் கிடைக்கும். இது சதுர அடி கணக்கில் 155 சதுர அடி வரும். சென்னைக்குள் 155 சதுர அடி நீளத்தில் நீங்கள் விவசாயம் செய்யலாம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? 800 சதுர அடி பரப்புள்ள என் வீட்டு மொட்டை மாடியில் 40 மூலிகைகள் உள்பட 150 வகையான செடிகள் இருக்கின்றன. மொட்டைமாடித் தோட்டம் என்றதும் எல்லோரும் பயப்படும் முதல் விஷயம் தண்ணீர் பிரச்னை!

ஐந்து பேர்கொண்ட குடும்பத்தில் சமையல் அறையில் மட்டும் நாள்தோறும் 30 முதல் 40 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. இதை முறைப்படுத்தினாலே கழிவு நீரை மாடித் தோட்டத்துக்குப் பயன்படுத்த முடியும். மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரை ஒட்டியதுபோல ஒரு தொட்டி அமைத்து அதற்குள் மண் பரப்பி எந்தச் செடியையும் வளர்க்க முடியும்.

புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டும்போதே இதற்கான ஏற்பாட்டைச் செய்வது நல்லது. இதுக்கூடச் சிரமம் என்றால் மிக எளிய வழி, பானையில் செடி வளர்ப்பது. 20 சதுர அடியில் பானைத் தோட்டம் போட்டாலே, ஒரு குடும்பத் துக்குப் போதுமானது. கத்தரி, வெண்டைக்காய், தக்காளி, கொத்தவரங்காய், மிதி பாகற்காய், காராமணி என நம் ஊர்க் காய்கறிகள் அனைத்தும் விளையும். என் வீட்டு மாடியில் தலைகீழ் பிரமிடு வடிவத்தில் ஒன்றின் மீது ஒன்றைக் கட்டி அதில் அடுக்குமாடிக் கீரைத் தோட்டம் அமைத்து இருக்கிறேன்.

சரி, இதற்கு உரம் வேண்டும் இல்லையா? அதற்கும் எங்கும் போக வேண்டாம். ஒவ்வொரு வீட்டிலும் நாள்தோறும் உருவாகும் மக்கும் கழிவுகளை இரண்டு பூந்தொட்டிகளில் போட்டு வந்தால் அதுவே சிறந்த உரம். அதை ஒரு கைப் பிடி அளவு போட்டாலே, காய்கறிகள் செழித்து வளரும்.

குளியலறைக் கழிவு நீர் வெளியேறும் இடத்தில் கல்வாழை, சேப்பங்கிழக்கு செடிகளை வைத்தால் அந்த சோப்புத் தண்ணீர் சுத்தமாகி விடும். இப்படி எல்லாவற்றையும் ரீ-சைக்ளிங் செய்வதுதான் இந்த முறையின் முக்கியமான அம்சம். இப்படி ரீ-சைக்ளிங் செய்ய ஆரம்பித்தால், கழிவு நீர் என்பதே இருக்காது. கழிவு நீர் இல்லை என்றால் கொசு இருக்காது. இதை எல்லாம் செய்தால் வீட்டில் எப்போதும் குளிர்ச்சி இருக்கும்.

நம் வீட்டுக் கிணற்றில் மார்கழி அதிகாலையில் தண்ணீர் எடுத்தால் வெது வெதுப்பாகவும், சித்திரை வெயிலில் தண்ணீர் எடுத்தால் குளிராகவும் இருக்கும். என்ன அர்த்தம் என்றால், தண்ணீரின் குளிர் எப்போதும் அப்படியேதான் இருக்கிறது. வெளிப்புற வெப்பம் கூடி, இறங்கும்போது நமக்குத் தண்ணீர் குளிராகவும், வெப்பமாகவும் தெரிகிறது. மேற்சொன்ன மாடித் தோட்டத்தையும், வீட்டைச் சுற்றி உரிய மரங்களும் வளர்த்தால், வீட்டின் வெப்பம் எப்போதும் குளிர்ச்சியான நிலையில் சீராக இருக்கும்!”என்கிறார் இந்திரகுமார்.

2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.