இயற்கை சார்ந்த வாழ்வியல் என்றால் என்ன ?

இயற்கை சார்ந்த வாழ்வியல் என்றால் என்ன ?

அதன் அவசியங்கள் என்ன ?

அதனை திரும்ப அடையும் வழிகள் என்னென்ன ?

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தொல் தமிழர்கள் ஒரு காலகட்டத்தில் நாகரீகம் அடையத் தொடங்குகின்றனர்.அப்போது அவர்கள் முதன் முறையாக நிலையான,சமூக வாழ்வை மேற்கொள்கின்றனர்.இந்த சூழ்நிலையில் இதனை ஒட்டி அவர்கள், தனி மனித அளவிலும்,சமூக அளவிலும் பல பிரச்சனைகளை எதிர் கொள்ளத் தொடங்குகின்றனர்.இவ்வாறு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.இத்தகைய பிரச்சனைகளுக்கு, தீர்வுகளை தேடி பின்வருமாறு தேடல்களும்,ஆராய்ச்சிகளும் தொடங்குகின்றன.

முதலில் அவர்கள் இயற்கையை கூர்ந்து கவனிக்கத் தொடங்குகிறார்கள்.பிறகு மெல்ல மெல்ல இயற்கையைப் பற்றி நல்ல புரிதல் ஏற்படுகின்றது.மனிதனால் அடிப்படையில் எதையுமே புதிதாக படைக்க முடியாது என்பதை அறிகின்றனர்.மனிதன் தனது ஒவ்வொரு தேவைகளுக்கும்,இயற்கையை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்திருப்பதை அறிந்து கொள்கின்றனர்.உடல் இயங்கத் தேவையான வெப்பம்,காற்று,குடிநீர்,உணவு ஆகியன இயற்கையிலிருந்தே பெறப்படுவது புரிகின்றது.இது தவிர மனிதன்,தன் செயல்பாடுகளுக்கு பல்வேறு வகையிலும் தாவரங்கள்,விலங்குகள் மற்றும் பிற சிறிய, பெரிய ஜீவராசிகளை அறிந்தோ,அறியாமலோ சார்ந்திருப்பதை தெரிந்து கொள்கின்றார்கள்.இந்த அம்சம் மனிதனை போன்றே, மற்ற எல்லா உயினங்களுக்கும் பொருந்துவது தெரிய வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு உயிரினமும்,பிற உயிரினங்களுடன் கொண்டுள்ள உயிரியல் தொடர்புகளை உணர்ந்து கொள்கின்றார்கள்.இவைகளை அடிப்படையாக் கொண்டு, சமூக வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, இயற்கையிடமிருந்தே பெற முனைகின்றனர்.மேலும் இதே வழியில், அன்றாட பணிகளை சிறப்பாக செய்து முடிக்கும் வழிமுறைகளையும் கண்டறிகின்றனர்.

இந்த அடிப்படையில் பல ஆண்டுகள் ஆராய்ந்து,நன்கு திட்டமிட்டு தமக்கான வாழ்வியலை வடிவமைக்கின்றனர்.அது பல்வேறு துறைகளை உள்ளடக்கி முற்றிலும் இயற்கை சார்ந்ததாக அமைகின்றது.அவைகள் இயற்கை சார்ந்த வானியல்,இயற்கை சார்ந்த உணவுமுறைகள்,இயற்கை சார்ந்த மருத்துவம்,இயற்கை சார்ந்த வேளாண்மை,இயற்கை சார்ந்த தமிழ் மொழி,இயற்கை சார்ந்த uஉடற்பயிற்சி முறைகள் ,இயற்கை சார்ந்த நீர் மேலாண்மை முறைகள்,இயற்கை சார்ந்த கலைகள் மற்றும் பிற இயற்கை சார்ந்த அறிவியல் முறைகள் என்றவாறு பட்டியல் நீள்கின்றது.இவ்வகையான வாழ்வியலை பின்னர், சில ஆயிரம் ஆண்டுகள் வரை சிறப்பாக கடைபிடித்து வந்துள்ளனர்.இந்த அமைப்பே இயற்கை சார்ந்த வாழ்வியல் என்பதாகும்.இவை அனைத்தும் எந்த வகையிலும் இயற்கைக்கு ஊறு விளைவிக்காத, முற்றிலும் இயற்கை சார்ந்த, அறிவு பூர்வமான வழிமுறைகள் ஆகும்.

சரி, மேற்சொன்னவைகளுக்கு என்ன ஆதாரம் ?.தமிழில் உள்ள அற இலக்கியங்களின் ஒவ்வொரு வரிகளுமே இதற்கு சான்றாக அமைகின்றன.இவ்வாறான ஒரு அமைப்பு இல்லையென்றால் இப்படியெல்லாம் சிந்தித்திருக்கவே முடியாது.மேலும் தொல்தமிழர்கள் பல்வேறு துறைகளிலும் இயற்கை சார்ந்து சிறந்து விளங்கியதைக் குறிப்பிடலாம்.எஞ்சியுள்ள சான்றுகளாக சென்ற தலைமுறைவரை இருந்த வாழ்வியலைக் கொள்ளலாம்.மற்றபடி ஏராளமான ஆதாரங்களை கால ஓட்டத்தில் நாம் இழந்து விட்டோம்( அப்ப நடுவுல நிறைய பக்கத்த காணோமா??!!!! ).இனி வருங்கால ஆராய்ச்சிகள் தேவையான ஆதாரங்களை கண்டெடுக்கும் என நம்புவோம்.

ஆனால் வருந்தக் கூடிய விஷயமாக இன்றைய நிலையில் நாம் இயற்கை சார்ந்த வாழ்வியல் என்பதை விடுத்து,இயற்கையை விட்டு விலகிய வாழ்வியல் என்ற நிலையையும் கடந்து,இயற்கைக்கு எதிரான வாழ்வியல் எனும் நிலையை அடைந்து விட்டோம்.பெருமளவு காடுகளை அழித்து விட்டோம்;ஓசோன் படலத்தில் ஒட்டையை ஏற்படுத்தி விட்டோம்;புவி வெப்பத்தை அதிகரித்து விட்டோம்;எல்லா வகையிலும் இயற்கையை சீரழிக்கத் தொடங்கி விட்டோம்;இதன் பலனை பல்வேறு நோய்களாகவும்,அழுத்தம் நிறைந்த,மகிழ்ச்சி குறைந்த வாழ்க்கையாகவும் நாம் அனுபவித்து வருகின்றோம்;இன்னும் அனுபவிக்க போகின்றோம்.மேலும் நம் முன்னோர்கள் இயற்கை வளங்கள் நிறைந்த பூமியை நமக்கு பரிசாக கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.ஆனால் நாம் நமக்கு பின்வரும் சந்ததியினர்க்கு, மிக மோசமாக சீரழிக்கப்பட்ட இயற்கை வளங்களைக் கொண்ட ஒரு பூமியினை பரிசாக கொடுக்கும் சூழ்நிலையினை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில், இயற்கை சார்ந்த வாழ்வியல் என்பது இன்றைக்கு மிக அவசியமாகின்றது.

ஆனால் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் நாம், ஒவ்வொரு துறையிலும் Nano technology
என்ற அளவுக்கு மிக நுணுக்கமாக வளர்ந்து வருகின்றோம்.இத்தகைய சூழ்நிலையில் இயற்கை சார்ந்த வாழ்வியலைப் பின்பற்றுவது, பல நூற்றாண்டுகள் வளர்ச்சியில் பின்னோக்கி செல்வது போல் ஆகாதா என நீங்கள் கேட்கலாம்.நாம் இன்று, வளர்ச்சியில் Nano ( பத்து லட்சத்தில் ஒரு பங்கு ) அளவுக்கு நுணுக்கமாக முன்னேறினால், எதிர் கொள்ளும் பிரச்சனைகள் Tera ( பத்தாயிரம் கோடி ) அளவுக்கு பெருகி விடுகின்றன.

மேலும் இயற்கை ஏராளமான வளங்களை நமக்கு அள்ளி அள்ளி தருகின்றது.இயற்கை அளிக்கும் இத்தகைய எண்ணற்ற நன்மைகளை முழுமையாக பயன்படுத்தி கொள்வதே சிறந்த வாழ்வியலாக அமையும்.வானம் பொழிகின்றது;பூமி விளைகின்றது.நாம் வெறும் பயன்பாட்டாளர்களே.எனவே நம்முடைய உயர்ந்தபட்ச குறிக்கோளே,இயற்கையின் சிறந்த பயன்பாட்டாளர் என்ற நிலையை அடைவதாகத்தான் இருக்க முடியும்.இதுதான் நம் வாழ்க்கையை வளப்படுத்தும்;மேலும் இயற்கைக்கு நாம் திருப்பி செலுத்தும் கைம்மாறாகவும் அமையும். ஆகையால் இயற்கை சார்ந்த வாழ்வியல் என்பது தவிர்க்கவே முடியாதபடி அவசியமாகின்றது.இதுவே நம் முன்னோர்கள், இன்றைய வணிகம் சார்ந்த சூழ்நிலையில் நமக்கு விட்டு சென்ற செய்தியாக அமையும் என்றால் அது மிகையாகாது.

சரி, இயற்கை சார்ந்த வாழ்வியலை எவ்வாறு திரும்ப அடைவது? நம் முன்னோர்கள் பல ஆண்டுகள்,பல மனித ஆயுட்காலங்களை செலவழித்து தங்கள் வாழ்வியலை வடிவமைத்தனர்.இப்போது அதனை மீட்டெடுக்க, நாமும் அவ்வாறு பல ஆண்டுகளை செலவு செய்ய முடியாது. ஆகவே தொல்தமிழர்களின் வாழ்வியலை தொடர்ந்து ஆராய்ந்து, அதனை சிறிது சிறிதாக நம் வாழ்க்கையில் நடைமுறை படுத்துவதுதான் மிகவும் எளிமையான,சிறந்த தீர்வாக அமைய முடியும்.

இவ்வகையில்,

• முதல் படியாக நாம் இயற்கையை புரிந்து கொள்ளத் தொடங்க வேண்டும்.

• நாம், நம் அன்றாட வாழ்க்கையை சிறிது சிறிதாக இயற்கை சார்ந்து வாழ ஆரம்பிக்க வேண்டும்.

• அடுத்த்தாக இதனை சிறு ,சிறு குழுக்களாக இணைந்து சமூக அளவில் நடைமுறைப் படுத்த வேண்டும்.

• இன்று நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு தனி மனித மற்றும் சமூக பிரச்சனைகளுக்கும், முன்னோர்களின் வழிமுறைகளை துணைக் கொண்டு, அவற்றுக்கான தீர்வுகளை இயற்கையிலிருந்து பெற வேண்டும்.

• நம் முன்னோர்கள் தங்கள் அனுபவ அறிவின் மூலமே இயற்கையின் ஒவ்வொரு கூறுகளையும் உறுதி செய்தனர்.ஒவ்வொரு முறையும், நாமும் நம் அனுபவ அறிவைக் கொண்டு வழிமுறைகளை உறுதி செய்ய வேண்டும்.

• இந்த வகையில் நம் முன்னோர்கள் பேரறிவு கொண்டவர்கள்;அவர்களுடன் ஒப்பிடும் போது இன்றைய நிலையில்,நாம் சிற்றறிவு படைத்தவர்களே.எனவே நம் அனுபவத்தால் அறிந்து கொள்ள முடியாத செய்திகளை அறிவியலின் துணை கொண்டு உறுதி கொள்ளலாம்.

• இயற்கையை நாம் எவ்வளவுதான் சீரழித்துவிட்டாலும்,மீண்டும் அவற்றை ஓரளவுக்கு புதுப்பிக்க முடியும்.இந்த அடிப்படையில் இயற்கையை அழிவிலிருந்து காத்து, கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையை வளங்களை மேம்படுத்த வேண்டும்.

• இந்த முயற்சிகளின், அடுத்தடுத்த கட்டங்களை வருங்காலம் தீர்மானிக்கும் என நம்புவோமாக.

எது எப்படியிருந்தாலும், இன்றைய நெருக்கடி நிறைந்த,பற்றமான வாழ்க்கைச் சூழலில் இயற்கை பற்றிப் பேசுவது இன்பம்;படிப்பது இன்பம்;சிந்திப்பது இன்பம்;எழுதுவது இன்பம்;மொத்தத்தில் இயற்கையோடு தொடர்பில் இருத்தல் மன அமைதியைத் தரும்.

இந்த அடிப்படையில் இனி வரும் காலங்களில், இந்த பக்கத்தில் இயற்கை சார்ந்த வாழ்வியலை திரும்ப மேற்கொள்வதில் உள்ள சாத்தியக் கூறுகளைப் பற்றி விவாதிக்கலாம்;நாம் இயற்கையை சீரழித்ததை நினைத்து குற்ற உணர்ச்சியில் வருந்தலாம்;இயற்கையையும்,அதனை சிறப்பாக பயன்படுத்திய நம் முன்னோர்களின் அறிவையும் எண்ணி,எண்ணி வியக்கலாம்;இதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், சிறிய எல்லைக்குள்ளேயே முரண்படலாம்;நம்மை நாமே ஊக்கப்படுத்தி கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline