இயற்கை சார்ந்த வானியல் மற்றும் தமிழ் நாட்காட்டி

இயற்கை சார்ந்த வானியல் மற்றும் தமிழ் நாட்காட்டி – ஓர் எளிய அறிமுகம்.

நம் முன்னோர்களின் வானியல் முற்றிலும் இயற்கை சார்ந்தது ஆகும்.இந்த அடிப்படையில் தமிழ் நாட்காட்டியும் இயற்கை சார்ந்தே அமைக்கப்பட்டுள்ளது.
இனி தமிழ் நாட்காட்டி உருவான விதம் பற்றி காண்போம்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொல் தமிழர்கள் நாகரீகம் அடையத் தொடங்கும்போது தமிழ் நாட்காட்டியை வடிவமைக்கின்றனர்.அப்பொழுது பின்வருவனவற்றை கருத்தில் கொள்கின்றனர்.

• பூமியின் வடதுருவத்தில் குளிர் காலம் நிலவும் போது, தென் துருவத்தில் கோடைக்காலம் நிலவுகின்றது.இரு துருவங்களிலும் முற்றிலும் வெவ்வேறான பருவ நிலை நிலவுகின்றது.

• அதே போல அமெரிக்காவில் குளிர்காலம் நிலவும்போது, ஆஸ்திரேலியாவில் கோடைக்காலமாக அமைகின்றது.

• இவ்வாறாக பூமியின் வட மற்றும் தென் அரைக்கோள பகுதிகளில் வெவேறான பருவநிலை நிகழ்கின்றது.

• இதனால் பருவநிலையை பொறுத்து பூமிக்கு வட அரைக்கோளத்தை சார்ந்து ஒரு நாட்காட்டியும்,தென் அரைக்கோளத்தைச் சார்ந்து ஒரு நாட்காட்டியும் அமைகின்றன.

இதில் தமிழர்கள், வட அரைக்கோளத்தை சார்ந்த நாட்காட்டியை தேர்ந்தெடுக்கின்றனர்.மேலும் வட அரைக்கோளமே, தென் அரைகோளத்தை விட அதிக நிலப்பரப்பு உடையது.

தமிழ் நாட்காட்டியின் நான்கு முக்கிய பகுதிகள் :

தொல் தமிழர்கள் பகல் நேர வான்வெளியில் சூரியனின் தோற்றத்தையும்,இரவு நேர வான்வெளியில் சந்திரன், கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் தோற்றங்கள்,நகர்வுகளையும் பொருத்தி நாட்காட்டியை வடிவமைக்கின்றனர்.இத்தகைய நான்கு பகுதிகளையும் ஒவ்வொன்றாக காண்போம்.

1. சூரிய பகுதி :

இதில் சூரியன் முதல் நாள் உச்சியில் தோன்றியதிலிருந்து, மறுநாள் உச்சிக்கு வரும்வரை உள்ள கால அளவு ஒரு நாள் என குறிக்கப்படுகின்றது.

அடுத்ததாக ஒரு நாள் என்பது ஆறு சிறுபொழுதுகளாக பிரிக்கப்படுகின்றது.அவை வைகறை,காலை,நண்பகல்,எற்பாடு,மாலை,யாமம் என்பனவாகும்.

மேலும் ஒரு ஆண்டு என்பது ஆறு பெரும்பொழுதுகளாக பிரிக்கப்படுகின்றது.அவை இளவேனில்,முதுவேனில்,கார்,கூதிர்,முன்பனி,பின்பனி என்பனவாகும்.

2. சந்திர பகுதி :

இதில் தினமும் இரவில் நிலவின் தோற்றம் ஆராயப்படுகின்றது.இதன் அடிப்படையில் வளர்பிறை ,தேய்பிறை என்ற இரண்டு நிலைகள் (பட்சம்) கொள்ளப்படுகின்றது.

ஒவ்வொரு பட்சமும் பின்வரும் 15 திதிகளை கொண்டிருக்கும்.

வளர்பிறை திதிகள் : 1.பிரதமை 2.துவிதியை 3.திரிதியை 4.சதுர்த்தி 5.பஞ்சமி 6.ஷஷ்டி 7.ஸப்தமி 8.அஷ்டமி 9.நவமி 10.தசமி 11.ஏகாதசி 12.துவாதசி 13.திரயோதசி 14.சதுர்த்தசி 15. பௌர்ணமி

தேய்பிறை திதிகள் : முன்சொன்ன 14 திதிகளுடன் இறுதியாக அமாவாசை திதி அமையும்.

பொதுவாக தமிழ் நாட்காட்டியில் மேற்சொன்ன திதிகள் உட்பட பல சொற்கள், முதலில் தமிழ் மொழியிலிருந்து பின்னர் சமஸ்கிருத சொல்லாக மாறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தவிர நிலவு, பூமியை சுற்றும் பாதையில் அமைவதை பொறுத்து பின்வரும் நாட்கள் குறிக்கப்படுகின்றன.அவை,

1.மேல்நோக்கு நாள்
2.கீழ்நோக்கு நாள்
3.சமநோக்கு நாள் என்பன ஆகும்.

3.நட்சத்திர பகுதி :

ஆண்டு முழுவதும் காணும், இரவு வானை ஆராய்கின்றார்கள்.இதனை 12 பகுதிகளாக பிரிக்கின்றனர்.அதில் ஒவ்வொன்றிலும் பிரகாசமாக தெரியும் ஒரு நட்சத்திர கூட்டத்தை எடுத்துக்கொண்டு, அவற்றுக்கு அதனதன் உருவ அடிப்படையில் பின்வருமாறு பெயரிடுகின்றனர்.

1.மேஷம் 2.ரிஷபம் 3.மிதுனம் 4.கடகம் 5.சிம்மம் 6.கன்னி 7.துலாம் 8.விருச்சகம் 9.தனுசு 10.மகரம் 11.கும்பம் 12.மீனம்.

இது தவிர, தினமும் இரவில் உச்சியில் தோன்றும் நட்சத்திரங்களில், பிரகாசமான 27 நட்சத்திரங்களை குறித்துகொள்கின்றனர்.அவை முறையே

1.அஸ்வினி 2.பரணி 3.கார்த்திகை 4.ரோகிணி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகரம் 11. பூரம் 12. உத்திரம் 13.ஹஸ்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்திராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி ஆகும்.

இதில் தினமும் ஒரு நட்சத்திரம் இரவில் உச்சியில் தோன்றும்.இதுவே அன்றைய நாளுக்கான நட்சத்திரமாகும்.ஆனால் எல்லா நட்சத்திரமும் தினமும் ஒரே நேரத்தில் உச்சியில் தோன்றாமல், வெவ்வேறு நேரங்களில் உச்சியில் தோன்றும்.

கோள்கள் பகுதி :

புதன்,வெள்ளி,செவ்வாய்,வியாழன்,சனி போன்ற கிரகங்களின் தோற்றங்களையும் குறித்து வைத்துள்ளனர்.

நாட்காட்டியின் பயன்பாடு :

தொன்மைக் காலத்தில் நாட்காட்டி பல்வேறு வானியல் நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளும் குறிப்பேடாக இருந்துள்ளது.இதனை பயன்படுத்தி வானியல் அமைப்புகள், பூமியில் உள்ள பொருட்கள் மற்றும் உயிரினங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை அறிந்து கொண்டனர்.இதனை ஒட்டி,இயற்கை சார்ந்து தங்கள் வாழ்வியலை வடிவமைத்து பல நன்மைகளை அடைந்தனர்.

இதற்கு சான்றாக அமாவாசை , பௌணர்மி போன்ற நாட்களை ஒட்டி கடலில் உயரமான அலைகள் ( Spring Tides ) எழுவதையும், மற்ற அரை நிலவு காலங்களை ஒட்டி தாழ்வான அலைகள் ( Neap tides ) தோன்றுவதையும் கூறலாம்.

இதே போல் உயிரினங்களின் Circadian rhythm போன்றவற்றுடன், பூமியின் தற்சுழற்சி ( 24 மணி நேரம் ) நேரடித் தொடர்புடையது. Circadian rhythm என்பது உயிரினங்களின் அடிப்படை இயக்கங்களுடன் தொடர்புடைய ஒன்றாகும்.

மேலும் வேளாண்மையில் இதனை ஒட்டிய பயன்பாடுகள் மிக அதிகம் உள்ளன.

நாட்காட்டி பயன்பாட்டின் எல்லை :

தொல்தமிழர்கள் நாட்காட்டியை வானியல் நிகழ்வுகளை அறியும் அளவில் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர்.மற்றபடி தங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு, தங்கள் அறிவை கொண்டே தீர்வு கண்டுள்ளனர்.

இதனால்தான் வள்ளுவர், “அறிவற்றங் காக்கும் கருவி” என்கிறார்.இதன் பொருள், அறிவு அழிவிலிருந்து காக்கும் கருவி என்பதாகும்.மேலும் ”அறிவுடையார் ஆவதறிவார்” என்கிறார்.இதன் பொருள், அறிவுடையவர்கள் நிகழப்போவதை முன்கூட்டியே அறிவார்கள் என்பதாகும்.

நாட்காட்டி பயன்பாட்டின் விலகல் :

முற்றிலும் அறிவுப்பூர்வமாக இருந்த நாட்காட்டி பயன்பாடு, பின்வரும் காலங்களில் உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கை சார்ந்தும் மாறுகின்றது.

இன்றைய நிலை :

நம் முன்னோர்கள் 27 நட்சத்திரங்களையும் வானில் அடையாளம் காண தெரிந்திருந்தனர்.ஆனால் நாம் இன்று இந்த அறிவை முற்றிலும் இழந்து விட்டோம்.

இனிவரும் காலங்களில் முற்றிலும் இயற்கை சார்ந்த வானியலை வடிவமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline