இயற்கை உரம் பயன்படுத்தி நெல் சாகுபடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனாலும், “கைகொடுத்த’ சாரல் மழை ஈரத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி நெல் சாகுபடியில் 82 ஆயிரத்து 500 ரூபாய் லாபம் கண்டுள்ளார் ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள விவசாயி.
கடந்த ஆண்டில் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் பயிரிடப்பட்ட நெல், போதிய மழையின்றி சாவியாகி வைக்கோல் கூட தேறவில்லை.
ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் குமிழேந்தலை சேர்ந்த விவசாயி ராஜகோபால், முற்றிலுமாக ரசாயன உரங்களை தவிர்த்தார். அவ்வப்போது பெய்த சாரல் மழையின் உதவியோடு மண்புழு உரம், மாட்டுச்சாணம், ஆட்டு புழுக்கைகளை உரமாக இட்டார்.
வறட்சி நிலவிய நேரத்திலும் இவரது வயலில் உள்ள நெல் பயிர்கள் கருகாமல் மகசூலை எட்டியது. நான்கு ஏக்கரில் 50 மூடைகள்(ஒரு மூடை 60 கிலோ) நெல் கிடைத்தது.
இயற்கை உரம் என்றால் என்ன
இவர் கூறியதாவது: எப்போதுமே விதைப்பிற்கு முன், மூன்று முதல் ஐந்து முறை நன்கு ஆழமாக நிலத்தை உழுதுவிட்டு, நெல்லை(டீலக்ஸ் பொன்னி ரகம்) மேலோட்டமாக விதைப்பேன். இயற்கை உரங்களோடு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாக்டிரியாபேஜ் ஆகியவை இட்டதால் நெல் கருகவில்லை.
இயற்கை உரங்கள் பெயர்கள்
மாட்டுச் சாணம்,
ஆட்டுப் புழுக்கை
பசுந்தாள் உரம் – கொழுஞ்சி, சணப்பை, எருக்கு, புங்கம், நுணா, வேம்பு, பூசரவு மற்றும் ஆடாதொடா
இயற்கை உரம் நன்மைகள்
ஒரு மூடை ரூ.1650 வீதம், 50 மூடை நெல்லை 82 ஆயிரத்து 500க்கு விற்றேன். மிஞ்சிய வைக்கோலையும் ரூ.20 ஆயிரத்திற்கு விற்று, இதிலேயே சாகுபடி செலவையும் ஈடுகட்டிவிட்டேன்.
மகசூல் நேரத்தில் லேசான மழை பெய்திருந்தால், ஏக்கருக்கு 50 மூடை வீதம் 200 மூடைகள் கிடைத்திருக்கும். அனைத்து விவசாயிகளும் அகலமாக உழுவதை விட, ஆழமாக உழ வேண்டும். இயற்கை உரங்களை பயன்படுத்தினால் லாபம் அதிகம் கிடைக்கும், என்றார்.