ஆமணக்கு ( கொட்டமுத்து )

ஆமணக்கு

Ricinus_communis3_pannaiyar

கை வடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண் பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள மூன்று விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டைமுத்து எனப்பெறும். தமிழகமெங்கும் விளைவிக்கப்படுகிறது. இலை, எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலை வீக்கம் கட்டி ஆகியவற்றைக் கரைக்கக் கூடியது. ஆமணக்கு நெய் மலமிளக்கும், தாது வெப்பு அகற்றும்.

1. இலையை நெய்தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டிவரப் பால் சுரப்பு மிகும்.

2. இலையைப் பொடியாய் அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்துக் கட்டி வர மூலக்கடுப்பு, கீல்வாதம், வாத வீக்கம் ஆகியவை தீரும்.

3. ஆமணக்குத் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கித் தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும்.

4. ஆமணக்கு இலையுடன் சமனளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து 30 கிராம் காலை மட்டும் மூன்று நாள் கொடுத்து நான்காம் நாள் பேதிக்குச் சாப்பிடக் காமாலை தீரும்.

5. 30 மி.லி. விளக்கெண்ணெயுடன் சிறிது பசும்பால் கலந்தோ இஞ்சிச் சாறு கலந்தோ கொடுக்க நான்கைந்து முறை பேதியாகும். பசியின்மை, வயிற்றுவலி, சிறுநீர்ப்பாதை அழற்சி, வெட்டை, நீர்க்கடுப்பு, மாதவிடாய்க் கோளாறுகள், இரைப்பிருமல், பாண்டு, ஆறாத கட்டிகள், தொண்டை அழற்சி, மூட்டுவலி ஆகியவை தீரும்.

6. கண் வலியின் போதும் கண்ணில் மண், தூசி விழுந்த போதும் ஓரிருதுளி விளக்கெண்ணெய் விட வலி நீங்கும்.

7. தோல் நீக்கிய விதையை மெழுகு போல் அரைத்துப் பற்றுப்போட ஆறாத புண்கள் ஆறும், கட்டிகள் பழுத்து உடையும். மூட்டுவலி, கணுச்சூலை ஆகியவற்றில் தோன்றும் வீக்கம் குறையும்.

8. வேரை அரைத்துப் பற்றுபோட பல்வலி நீங்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline