ஆதிநாளில் காலத்தை அளக்க

காலத்தை அளக்க இன்று கடிகாரத்தை பயன்படுத்தி வருகிறோம். ஆதிநாளில் தமிழர்கள் காலத்தை அளக்க நாழிகைக் கல், நாழிகைத் தூம்பு, நாழிகைப்பறை, நாழிகைவட்டம் நாழிகைவட்டில் என்று பல்வேறு முறைககளை பயன்படுத்தி நேரத்தை அளந்தனர். இப்படி நேரத்தை அளந்து சொல்பவர் நாழிகை கணக்கர் என்று அழைக்கப்பட்டனர். நேரத்தை அளக்க நாழிகை வட்டில் என்பதே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. நாழிகையின் அளவைத் தெரிவிக்கும் இந்தக் கருவியானது மெல்லிய செம்புத் தகட்டால் வட்டில் ஒன்று உருவாக்கப்பட்டு அந்த வட்டிலின் அடிபாகத்தில் நடுவாக ஒரு ஊசி முனையினும் சிறிய துவாரமிட்டு நீருள்ள தொட்டியில் மிதக்கவிடின் அதன் சிறு துளைவழியே நீர் வட்டிலில் நிரம்ப வட்டில் நீரில் அமிழும். வட்டில் நிரம்பி நீரில் மூழ்க எடுத்துக் கொள்ளும் நேரமே ஒரு நாழிகையாகும். இப்படி 60 நாழிகை கொண்டது தான் ஒரு முழு நாள். இது தான் நமது முன்னோர்கள் கடைபிடித்து வந்த நடைமுறை. மேலும் இந்த நாழிகை வட்டிலை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்றும் ஒரு விதிமுறையினையும் உருவாக்கியிருந்தனர். 


“வன்செம்பு பத்து பலமாகிய செம்புவட்டிற் கொட்டி இடத்து மட்டு நாலு விரல் விட்டம் 32 விரல் இப்படி கொட்டின வட்டிலுக்குத் துவாரம் விடுவதற்க்கு 36 மாப்பொன்னாலே நான்கு விரலளவு செய்து அந்த ஊசியால் துவாரம் இட்டு அந்த துவாரம் வழியாக நீர் புகுந்து நீர் நிரம்பி வட்டில் நீரில் அமிழ்திடின் அதுவே ஒரு நாழிகையாம்” இது தான் அந்த விதிமுறை. அதாவது கலப்படமில்லாத சுத்தமான பத்து பலம் எடை கொண்ட செம்பில் நாலு விரல் உயரமும் 32 விரல் விட்டமும் கொண்ட வட்டில் ஒன்றை செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்யப்பட்ட வட்டிலில் 36 மாப்பொன் எடையுள்ள தங்கத்தில் நான்கு விரல் நீளத்திற்கு ஓர் ஊசி செய்து அதன் கூர்முனையினால் செம்பு வட்டிலின் அடிபாகத்தில் மையமாக ஒரு துளையிட வேண்டும் இப்படி துளயிட்ட வட்டிலை ஒரு தொட்டியில் நிரப்பியிருக்கும் நீரில் மிதக்க விட வேண்டும். வட்டிலின் சிறு துளை வழியாக கொஞ்சம் கொஞ்சமாக நீர் வட்டிலின் உட்புகுந்து வட்டில் நிறைய அது நீரினுள் அமிழும். இப்படி நீர் நிறைந்து வட்டில் நீருள் அமிழ எடுத்துக் கொள்ளும் நேரமே ஒரு நாழிகையாகும். நாழிகை வாய்பாடு:
60 தர்பரை= 1வினாடி,
60வினாடி=1நாழிகை,
60நாழிகை=1நாள்(24 மணி).
இதுவே நமது முன்னோர்களின் காலக் கணக்கீட்டு அளவு. பழந்தமிழர்கள் காலத்தை அள்விட பல்வேறு அள்வு முறைகளை கையாண்டனர். அதாவது மொழி, மருத்துவம், காலம், இசை என்று ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அளவு முறையினை பயன்படுத்தினர். அதனால் தான் இலகு, துரிதம், துடி,
நிமையம், காட்டை, இலபம், கணம், மாத்திரை, யாமம், நாழிகை, விநாழிகை, தர்ப்பரை என பல்வேறு காலநுட்ப அளவுகளின் பெயர்கள் தமிழ் மொழியில் புழக்கத்தில் இருந்தன. இவ்வாறு காலத்தையும் அதன நுட்பத்தையும் பலவாறு பகுத்து கையாண்டு வந்திருக்கின்றனர்

நன்றி : Raman Iyengar ( Facebook )

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.