அரை ஏக்கரில் 21 மூட்டை..கில்லி அடிக்கும் கிச்சடி சம்பா..!

 

samba_pannaiyar_com

 

ரசாயன முறை விவசாயம் மற்றும் வீரிய ரக விதைகள் ஆகியவை மட்டுமே உணவுப் பொருள் உற்பத்தியைப் பெருக்கக் கூடியவை. இவற்றில் மட்டுமே அதிக விளைச்சல் சாத்தியம்’ என்று திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், விவசாய விஞ்ஞானிகள் பலர். அதே சமயம், வீரிய ரக மகசூலுக்கு எந்த வகையிலும் சளைத்ததில்லை.. பாரம்பரிய ரகங்களின் விளைச்சல்  என்று இன்னொருப் பக்கம் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், விவசாயிகள். இதோ.. இந்த அருண்கூட  அத்தகையோரில் ஒருவர்தான்!

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகேயுள்ள ஜங்காலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி அருண். கடந்த கார்த்திகை மாதத்தில் அரை ஏக்கரில் கிச்சடி சம்பா நெல்லை நடவு செய்தார். அப்போதைக்கு, அதைப் பார்த்து சந்தேகத்தோடு பேசிய மற்ற விவசாயிகள், தற்போது அவருக்குக் கிடைத்த மகசூலைப் பார்த்த ஆச்சரியத்தில் வாயடைத்துக் கிடக்கின்றார்கள். கொஞ்சம் வருடத்திற்கு முன் நான் ஒரு ரசாயன விவசாயி. பசுமை விகடன் மூலமாக நம்மாழ்வார் அய்யாவின் தொடர்பு கிடைத்தது. அதிலிருந்து ஒரு குண்டு மணி ரசாயனம் கூட  சேர்க்காமல் மஞ்சள், வாழை, நிலக்கடலை, சாமந்தி, நெல் என்று சுழற்சி முறையில் சாகுபடி செய்கிறேன். பொதுவாகவே, எங்க ஏரியா மண்ணில் நெல் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். இந்த நிலையில் நான் கிச்சடி சம்பா நெல்லை நடனும் என்று முடிவு செய்த போது.. என்னோட நண்பர்கள் சிலர் சலனப்படுத்தினாங்க. அதோட, ‘ஆடிப்பட்டம்தான் சம்பா நெல்லுக்குப் பொருத்தமான சீசன். இப்போது விளைச்சல் சிறப்பாக இருக்காது என்று பயமுறுத்தினாங்க. ஆனாலும், எனக்குள் ஒரு வெறி, பழைய நெல் ரகங்கள், நவீன ரகங்களுக்கு ஈடுகொடுத்து விளையாது என்ற கருத்தை உடைக்கணும் என்று நினைத்தேன். அதற்காகவே தீவிரமாக களத்தில் இறங்கி, இப்போது சாதித்தும் காட்டியிருக்கிறேன் என்றார்.

இதுதான் தற்சார்பு விவசாயம்!
எங்க பகுதியில் இருக்கும் கீரைப்பட்டி விவசாயி கோவிந்தராஜ்கிட்ட, 15 கிலோ விதை நெல்லை வாங்கி வந்து நாத்து விட்டேன். நடவுக்கு 25 சென்ட் அளவு கொண்ட இரண்டு வயல்களை  எடுத்துக் கொண்டேன். ஒரு வயலில் கிளரிசீடியா மாதிரியான தழைகளையும், மண்புழு உரத்தையும் மட்டும்தான் போட்டேன். இன்னொரு வயலில் பல தானியச் செடிகளை மடக்கிச் சேர்த்து சேறடித்தேன். இரண்டு வயலிலும் சாரி ( வரிசை) நடவு முறையில், சாரிக்கு சாரி ஒரு அடி இடைவெளியில் நடவு செய்தேன்.

தற்சார்பு விவசாயம்!
பூச்சிகளைக் கட்டுப்படுத்த வயலில் அங்கங்கே பறவைத் தாங்கிகளை அமைத்தேன். வரப்பில் உளுந்து நடவு செய்தேன். இதுபோக, ஒட்டுப் பொறிகளையும் சில இடத்தில் அமைத்தேன். இரண்டு முறை மூலிகைப் பூச்சிவிரட்டி, ஒரு முறை மோர் தேங்காய்ப் பால் கரைசல் என்று தெளித்தேன். ஒரு முறை கோனோவீடர் உருட்டி களைகளை அமுக்கி விட்டேன். இவ்வளவுதான் நெல்லுக்கு நான் செய்த பராமரிப்பு. இப்படி தற்சார்பு முறையில் விவசாயம் செய்ததால்.. எனக்குப் பெரிதாக செலவு எதுவும் இல்லை. மண்புழு உரத்தைக்கூட நானே தயார் செய்து கொண்டேன்.

ஒரு கிலோ அரிசி 70 ரூபாய்!
50 சென்ட் நிலத்தில் 21 மூட்டை ( 80 சிலோ மூட்டை) விளைந்தது. அதாவது 1,680 கிலோ நெல். இதில் 100 கிலோவை அறுவடை செய்தவங்களுக்கு கூலியாக கொடுத்துவிட்டேன். விதை நெல்லுக்காக  120 கிலோ நெல்லை இருப்பு வைத்திருக்கிறேன். 160 கிலோவை விதை நெல்லுக்காக கிலோ 25 ரூபாய் வீதம் விற்றுவிட்டேன். மீதி, 1300 கிலோ நெல்லை, அரிசியாக்கியதில் 650 கிலோ கிடைத்தது. வீட்டுத் தேவைக்கு 300 கிலோ அரிசியை வைத்துக் கொண்டு மீதியை, கிலோ 70 ரூபாய் விலையில் விற்றுவிட்டேன். ஆக மொத்தத்தில் அரை ஏக்கரில் செலவு போக 40 ஆயிரத்திற்கும் மேல் லபாம் கிடைத்தது. பொதுவாக நெல் சாகுபடி நஷ்டம் என்று சொல்வாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் நெல் சாகுபடி லாபமாகத்தான் இருக்கு. இது என்னோட அனுபவத்தில் பார்த்த உண்மை என்றார் அருண். அடுத்ததாக, பாரம்பரிய ரகமான தூயமல்லி நெல்லை நடவு போட்டு, இதே மாதிரி விளைச்சல் எடுக்கணும் என்று தயார் பண்ணிட்டு இருக்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் ரசாயன ஆதரவாளர்களுக்கு நான் விடும் ஒரே கோரிக்கை.. நவீன ரக நெல்லைப் போல் பாரம்பரிய நெல் விளையாது என்று தயவு செய்து பொய் பிரச்சாரத்தை செய்யாதீர்கள் என்றார்.

தொடர்புக்கு
அருண், செல்போன் : 98653 19772.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.