அரியன்னூர் ஜெயச்சந்திரன்

அரியன்னூர் ஜெயச்சந்திரன் பட்டதாரி விவசாயி மட்டுமல்ல. படித்த அறிவைச் செழுமையாகப் பயன்படுத்தும் ஒரு தலைவரும்கூட. பதினைந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக அரியன்னூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தும்கூட தனக்கென வாழாத பண்பாளர். தலைவர் என்ற பந்தா இல்லாதவர். கட்சி சார்பற்றவர். மக்களால் மிகவும் மதிக்கப்பட்டு போட்டி இன்றி தேர்ந்தடுக்கப்பட்ட உன்னத தலைவர். அவரை அவரது ஊரில் இரண்டு முறை சந்தித்து பேட்டி எடுத்த அனுபவம் உண்டு. சென்னையில் படித்துவிட்டு அரசு வேலைக்கு விண்ணப்பிக்காமல் தனது கிராமத்தில் தனது முன்னோர் செய்த உழவுத் தொழிலை இயற்கை முறையில் செய்து வருகிறார்.
இவர் வாழும் வீடே ஒரு அதிசயம். இவரது அப்பா காலத்தில் சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மெட்ராஸ் டைல் ஹவுஸ். சுவர்களில் விரிசல் விழுந்து விட்டாலும் மனதில் விரிசல் இல்லாதவர். பழைய நிலபிரபுத்துவப் பின்னணி இருந்தாலும் அப்படிப்பட்ட தற்பெருமையோ ஆடம்பரமோ இல்லாத ஒரு காந்தியவாதி. இயற்கை விவசாயமாகட்டும், சுற்றுச் சூழலாகட்டும், இவை குறித்த தகவல்களின் சுரங்கம். நல்ல படிப்பாளி. பல்வேறு ஆங்கில நாளிதழ், மாத இதழ்களில் வெளிவந்த அறிவியல் தகவல்களை ஏகப்பட்ட கோப்புகளில் சேகரித்து வைத்துள்ளார். அவற்றில் எனது தினமணி கட்டுரைகள் சிலவும் உண்டு.

படித்து முடித்தபின் சென்னையிலிருந்து அரியன்னூர் வந்ததும் இவர் முதலில் செய்தது நஞ்சான பசுமைப்புரட்சி விவசாயமே. அரியன்னூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ளது. சென்னையிலிருந்து கல்பாக்கம் வழியாகவும் அரியன்னூர் வரலாம், மதுராந்தகம் வழியாகவும் வரலாம்.

“வையம் பெறினும் பொய்யுரைக்காதவர் தொண்டை நாட்டினர்” என்ற வாய்மொழியின் இலக்கணமாயுள்ள ஜெயச்சந்திரன், 1975ஆம் ஆண்டில் நெல் சாகுபடியில் இறங்கியபோது பசுமைப்புரட்சியின் உச்சக்கட்டம். இவர் அனுபவமும் சுந்தரராம ஐயர் அனுபவமும் ஒன்றே. இவரும் பசுமைப்புரட்சி காலகட்டத்தில் சாதனை புரிந்தவரே. ரசாயனப் பயனாய் முதலில் விவசாயம் ஓகோ என்று தொடங்கினாலும் பின்னர் படிப்படியாகக் குறைந்தபோது மண் வளமிழந்து வருவதையும் உணர்ந்து நீடித்த விவசாயத்துக்கு வழி காட்டும் இயற்கை விவசாயம் பற்றி யோசிக்கும் வேளையில் – அதாவது 1997க்குபின் தன்னை வழிகாட்டி முழுமையாக இயற்கையில் தடம் பதிக்க வைத்த மூன்று குருமார்களில் முதலாவதாக இவர் கூறுவது ஞானி நம்மாழ்வாரைதான். இரண்டாவதாக அரு. சோலையப்பன். மூன்றாவதாக அடியேன் ஆர்.எஸ். நாராயணன்.

அரு. சோலையப்பனைப் பற்றி சில வரிகள். சோலையப்பன் ஜெயச்சந்திரனுக்கு மட்டுமல்ல, முகுந்தனுக்கும் உந்து சக்தி வழங்கியவர். தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் முன்னாள் உயிரியல் ஆய்வு மைய விஞ்ஞானியும்கூட. தமிழ்நாட்டில் பஞ்சகவ்யத்தைத் தயாரித்து முதலில் பயன்படுத்தியவர் கொடுமுடி டாக்டர் நடராஜன் என்றாலும் அப்பயனை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து துணிவுடன் ஒரு செய்தி வெளியிட்டார்: “வேளாண்துறை வழங்கும் நுண்ணுயிரிகள் கரிப்பொடியில் கலந்து வழங்கப்பட்டு சேமித்து வைக்கப்படும்போது, அவை நாட்பட நாட்பட இறந்துவிடுவதாகவும் பஞ்சகவ்யத்தில் உள்ள நுண்ணுயிரிகள் திரவ வடிவில் உள்ளதால் 2,3, மாதங்கள் அவை அழியாமல் பயன்படுகின்றன”. நுண்ணுயிரிகள் பெருகி வளர்வதையும் குறிப்பிட்டு தினமும் திறந்து மூடி ஒரு குச்சியால் சுழற்றிவிடுவது அவசியம் என்று கூறியதும் இந்த விஞ்ஞானியே.

ஜெயச்சந்திரனிடம் நஞ்சை புஞ்சை 25 ஏக்கர் வரை உள்ளது. ஆறு ஏக்கரில் பாரம்பரிய நெல் வகையான ஆற்காடு கிச்சடியுடன் பொன்னி தவிர புஞ்சையில் மா, முந்திரி போன்ற பழம் பருப்புடன் வேர்க்கடலை, காய்கறி சாகுபடியும் உண்டு. இவர் கடைபிடிக்கும் சில உழவியல் தொழில்நுட்பங்களை அறிவது பயனுடைத்து.

டாக்டர் நடராஜனின் அதே பார்முலாப்படி பஞ்சகவ்யம். எனது சிபாரிசும் அதுவே : கோமயம் (பசுவின் சாணி) – 5 கிலோ, கோஜலம் (பசுவின் மூத்திரம்),  பசுந்தயிர் 2 லிட்டர், பசும்பால் 2 லிட்டர், பசுநெய் 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, இளநீர் 3 லிட்டர், வாழைப்பழம் ௧ சீப்பு, 3 லிட்டர் கள் அல்லது ஈஸ்ட் 25 கிராம். முதலில் பசுஞ்சாணத்தை காய்ச்சி ஆற வைத்த நெய்யுடன் பிசைந்து 2 நாட்கள் மூடி வைக்க வேண்டும். மூன்றாவது நாள் 3 லிட்டர் கோஜலம் கலந்து மேலும் மூன்று நாட்கள் மூடி வைக்க வேண்டும். தினம் காலை மாலை 2 வேளை குச்சியால் சுழற்றிவிட வேண்டும். ஆறாவது நாள் தயிர், பால், மூன்று லிட்டர் தண்ணீரில் 1 கிலோ வெல்லம் கலந்த பானகத்தையும் ஒன்றாகக் கலந்து கூடவே மூன்று லிட்டர் இளநீர் கலந்து கள் அல்லது ஈஸ்ட் போட்டு பிசைந்து ஒருவகை பஞ்சாமிர்தம் செய்து அதை கோமயம், கோஜலம், நெய் கலவையில் சேர்த்து தினமும் குச்சியால் கலக்கி விட்டுக் கொண்டு வந்தால் 21ஆம் நாள் பஞ்சகவ்யம் ரெடி. இப்படிப்பட்ட பஞ்சகவ்யத்தை 3 சதவிகிதம் (100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யம்) 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பதால் / ஸ்ப்ரே செய்வதால் பழம் பெரிதாகும், நெல்லில் பதர் இல்லாமல் கதிர்களில் மணி வைக்கும்.

இவ்வாறே மூலிகைப் பூச்சி விரட்டியை வேம்பு, நொச்சி, புங்கன், பிரண்டை சேர்த்து கற்றாழை இடிக்கப்பட்டு கோ ஜலத்தில் ஊற வைத்து 10 சதவிகிதம் வழங்குகிறார்.

யூரியாவின் மாற்றாக மீன் குணபம் “மச்ச குணப ஜலம்” என்ற பெயரில் வழங்குகிறார். ஒரு கிலோ மீன் வாங்கி ஒரு சின்ன மீன் பானையில் இட்டு மூடி மண்ணில் புதைத்து, பின் ஒரு கிலோ வெல்லத்தைத் தூள் செய்து மூன்று நாட்களுக்குப் பின் அப்பானை மீனுடன் கலந்து 20 நாட்கள் கழித்து எடுத்துப் பார்த்தால் தேன் போன்ற, மணமுள்ள திரவம் கிட்டும்.இதை 1/2 சதவிகிதம் அல்லது 1 சதவிகிதம் (100 லிட்டருக்கு 1 லிட்டர்) ஸ்ப்ரே செய்யலாம். மோர் கலந்த மூலிகை கரைசலும் தயாரிக்கிறார்.

இவ்வளவுக்கு மேல் ஜெயச்சந்திரனின் சிறப்பு பயோடைனமிக் (உயிராற்றல்) வேளாண்மை. இந்திய பஞ்சாங்கம் இந்தியாவிலிருந்து பிரான்ஸ் சென்று மீண்டும் இந்தியாவுக்கு வந்தது போல் தோன்றுகிறது. உயிராற்றல் வேளாண்மை என்று கிறுகச் சுழற்சியுடன் கோள்களின் ஆற்றல்களை வேளாண்மைக்குள் புகுத்தியவர் ருடால்ஃப் ஸ்டைனர். 18-19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த பிரஞ்சு மேதை 1924ல் இறந்துவிட்ட பின்னர், 1984ல் “உயிராற்றல் விவசாயம்’ நூல் வடிவம் பெற்றது. தமிழ் நாட்டில் உயிராற்றல் விவசாயத்தைப் பரப்பியவர்களில் முதலாவது பி. விவேகானந்தன், வத்தலகுண்டு அருகில் உள்ள கெங்குவார்ப்பட்டி அருகில் உள்ள மேட்டுப்பாளையம் குறிஞ்சிப்பண்ணை நவநீதகிருஷ்ணனும் அரியன்னூர் ஜெயச்சந்திரனும் தங்கள் நிலங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர்கள்.

இவர்கள் உயிராற்றல் வேளாண்மை பயிற்சியை விவசாயிகளுக்கு எளிய முறையில் வழங்குகிறார்கள். இதுபற்றி சுருக்கமாகக் கூறினால், கொம்புச்சாண உரம் தயாரிப்பது. கம்போஸ்ட் செய்த தொழுவுரத்தை பசுமாட்டுக் கொம்புகளில் அடைத்து நுனி வெளியே தெரியும்படி புதைத்துவிட்டு மறு ஆண்டு பயன்படுத்துவது. கிரகங்களில் சக்தியை பசுமாட்டுக் கொம்பு கிரகித்துக் கொண்டு கம்போஸ்ட் உரத்தை வீரியப்படுத்துகிறது. தவிர, 501, 500 + CPP திரவ உரம் உண்டு. கிரகங்களின் ஆற்றல்களை ஏற்கும் திரவங்களின் சாறுகள் அவை. இவற்றை உயிராற்றல் வேளாண்மைச் சங்கம் (குறிஞ்சிப்பண்ணை, கொடைக்கானல்) மூலம் பெறலாம். சில சொட்டுகள் விட்டால் போதுமாம்.

இந்த வேளாண்மை வெற்றி பெற உயிராற்றல் வேளாண்மை பஞ்சாங்கத்தை விவேகானந்தன் ஆண்டுதோறும் வெளியிடுகிறார். மேல்நோக்கு நாள்  கீழ்நோக்கு நாள் (வளர்பிறை, தேய்பிறை) என்று திட்டமிட்டு அதன்படி விதைத்தல், நடுதல், தெளித்தல் செய்ய வேண்டும். உயிராற்றல் வேளாண்மை உணவுக்கு கூடுதல் ருசி வழங்குகிறது.

ஜெயச்சந்திரன் பெருமையாகக் கூறும் விஷயம் அரியன்னூர் ஆல மரங்கள். அரியன்னூரின் தனிச்சிறப்பு பறவைகளால் உருவாக்கப்படும் பல்லுயிர்ப் பெருக்கத்தால் ஏரிகளில் நீர் வற்றுவதில்லை. எல்லாம் திறந்தவெளிக் கிணறுகளே. அந்த ஊரில் யார்ம ஆழ்துளை கிணறு இறக்காமல் மழை நீர் செமிப்பால் கிணறுகள் ரீசார்ஜ் ஆகின்றன. இவர் தலைவராயிருந்தபோது  அரியன்னூர் உயிர்ச்சூழல் கிராமமாக அறிவிக்கப்பட்டு மாநில அரசு பாராட்டு பெற்றுள்ளது.நல்ல தலைவன் இருந்தால் நாடு முன்னேறும் என்ற எண்ணம் ஜெயச்சந்திரனைப் பார்த்தால் ஏற்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline