Site icon பண்ணையார் தோட்டம்

எனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்

இது எனது கனவு இல்லம் / தோட்டம் :

தற்சார்பு வாழ்க்கை வாழ ஒரு இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை காண முயற்சி

எனது சொந்த உழைப்பில் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில்  வாங்கிய நிலத்தில் எனது தோட்டம் . இதில் எனக்கென்ற சில கனவுகள் உண்டு அவைகளை நிச்சயம் நிறைவேற்றுவதற்கு தீராத முயற்சிகள் நடந்து  கொண்டு உள்ளது. இன்னும் பல படிகள் தாண்டவேண்டும் . எனது திட்டங்களை/கனவுகளை  இங்கு பகிர்த்து கொண்டு உள்ளேன்  .மேலும் இதில் உள்ளது போலவே அனைத்தும் அமைக்கவேண்டும் ஆனால் களத்தில் செய்யும் பொழுது மாற்றங்கள் நிறைய இருக்கும் .

குறிப்பு: இதில் பயன்படுத்தி உள்ள அனைத்து படங்களும் வலைத்தளத்தில்  இருந்து  திரட்டியது . இதுபோன்றஅமைப்பை நான் செயல்படுத்தவேண்டும் என்று தேடியபொழுது கிடைத்தவை .நிச்சயம் நாமும் பயன்படுத்த முடியும் சிறிது மாற்றங்களுடன்அல்லது நமது ஊரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு நமக்கு தகுந்தற்போல சில மாற்றங்களுடன் செயல் முறைபடுத்த முடியும் .

நிலத்தில் அமைப்பு :

வடக்கு தெற்கில் நீளமாகவும் ( 410 அடி )  , கிழக்கு மேற்கில் அகலம் குறைந்த ( 45அடி ) நிலம்.மொத்தம் நிலத்தில் அளவு 18500 சதுர அடி ( கூட குறைய இருக்கும் )

அளவீடு மற்றும் வேலி :

அரசாங்க பதிவேட்டின் படி அரசாங்க அதிகாரிகள் மூலம் அளவீடு செய்து நிலத்தை சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும் . இது சிறிது செலவு பிடிக்கும் வேலை . ஆனாலும் மிகவும் அவசியமானது .நிலத்தின் ஒரு ஒரு திருப்பத்திலும் நமது பட்டா /சிட்டா / FNB  உள்ளது போல் குறைந்தது 5 அடி உயர கல்கால் ( 3 அடி வெளியில் தெரிய வேண்டும் )  நடுவது சிறந்தது .மேலும்  சிமெண்ட் பயன்படுத்தி நிலத்திற்குள் 2 அடி ஆழம்  வரை  நட்டு   வெள்ளை அடித்து வைக்கவும் .

  1.  அரசாங்க பதிவேட்டின் படி அளவீடுகள்
  2. நிலத்தில் திருப்பத்தில் கல்கால் நடுதல்
  3. பட்டா /FNB வரைபடம்

நிலம் சமன் செய்தல் :

தெற்கு பகுதியை உயரமாகவும் வடக்கு பக்கம் உயரம் குறைவாகவும் ( இந்த நிலத்தை குறைந்த செலவில் சமன்படுத்த ) நிலத்தை  3 அல்லது 4 பகுதிகளாக பிரித்து கொள்ளவேண்டும் .இங்கு நான் நிலத்தை பகுதிகளாக பிரித்து உள்ளேன் .   1.வீடு  2. தோட்டம்  3. கால்நடை வளர்ப்பு  4. வயல்வெளி

  1. நிலத்தின் மேடு பள்ளங்கள் சமன் செய்யும் வேலை
  2. சேற்று வரப்பு நடுவில் கல் வைத்து கட்டுதல்

தண்ணீர் வசதி & தண்ணீர் சேமிப்பு

தண்ணீர் வசதி வருடத்தில் பத்து மாதங்கள் கிடைக்கும் . சுற்றுப்புறமும் நன்கு  பசுமை கட்டிய இடம்.மேலும்  மழை நீர் சேகரிப்பு ( உதவிக்கு ‘மழை நீர் பொறியாளர்’ கி.வரதராஜன் – திருவாரூர் ) அமைப்பை ஏற்படுத்தி பாதுகாப்பாக வீட்டின் போர்டிகோ   கீழ் நிலத்தடி தொட்டியில் சேமிப்பது ( 3,000 லிட்டர் முதல்  10,000 லிட்டர் வரை  )  நீரையும்  இடத்தையும் சேமிக்கலாம்.இந்த நிலத்தடி தொட்டியில் சிறிய அளவில் தாமிரம உலோகம்  இருக்கும் படி அமைக்கவேண்டும் . (  வருங்காலத்தில் அதிகம் தண்ணிர்  தட்டுப்பாடும், தேவையும்  வரலாம் என்பதால் வரும்முன் காப்போம் என்ற நோக்கத்தில்  )

 வீடு + போர்டிகோ + சிறிது பல பயன்பாடு கொண்ட  இடம் : ( 3000 சதுர அடி )

வீட்டின் அளவு 1000  முதல் 1200 சதுர அடி போதுமானது . கட்டுமானம் செய்ய Compressed earth block (CEB) or pressed earth block  முறையில்  பயன்படுத்தும் எண்ணம் உள்ளது .  இரண்டு குதிர்கள்  வைக்க இடமோ அல்லது தனியான ஒரு அறையோ தேவை . இரண்டு படுக்கை அறை கொண்ட வடக்கு நோக்கிய வாசல் வைத்த வீடு .

வீட்டை சுற்றி  6 முதல் 10 அடி  இடம் இருக்க வேண்டும் நன்கு காற்றோட்டவசதிக்கும்   + மரங்கள் +  பூ செடிகள் வைக்கலாம்  ( மனையாளின் விருப்பம் –  ரோஜா வகை , மல்லிகை வகை  ,மருதாணி ,கனகாம்பரம் வகைகள் , கோழி கொண்டை, வாடாமல்லி , சம்பங்கி ,மனோ ரஞ்சிதம் ,செம்பருத்தி ,சாமந்தி, அரளி, சூரியகாந்தி,பிச்சிபூ ,தெற்றிப்பூ ,நந்தியார் வட்டம்,மற்றும் பல  )  .

  1. 3000 சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டு நிலத்தைவிட உயரமாக இருக்கும்படி மண் கொட்டும் வேலை

மொட்டைமாடியில் … ?

 

தலைவாயில் : ( போர்டிகோ ) 

 

இதன் அளவு அதிகம் இருக்குமாறு அமைக்க எண்ணம் . குறைந்த அளவு 400 சதுர அடிகள்.கிழக்கு ,வடக்கு பகுதிகளில் 2 அல்லது 3 அடி உயர சுற்றில் கைப்பிடி சுவர் போல கட்டுமானம் செய்து அதன் உள் பகுதியில்  வசதியான முறையில் திண்ணை அமைப்பும் ( கிழக்கு ,வடக்கு ” L ” வடிவில்  ) இருத்தல் அவசியம் . இங்கு அமர்ந்து பார்த்தல் தோட்டமும் , சிறு அருவியும்  குளமும் தெரியும் .இதன் மேற்கூரை வளைவாக இருக்குமாறு அமைத்தால் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க முடியும் .

கிழக்கு பக்கம் கைப்பிடி சுவருக்கு வெளிப்பக்கம் vertical Garden அல்லது சிறிது வாய்க்கள் போன்ற அமைப்பில  அழகு  பூ செடிகள் இருக்கும், வடக்கு  பகுதியில் வீட்டின் வாசலுக்கு நேராக ஒரு சிறிய வாசல் வைத்து தோட்டத்திற்கு செல்ல வழி அமைக்க வேண்டும் .

 

 

 

 

நாய் வீடு – 30 சதுரஅடி

சிறிய வீடு போன்ற அமைப்பை இரண்டு அல்லது நான்கு அறைகளும் கதவுகளும் ஏற்படுத்த வேண்டும் . தனியான வேலி மூன்று அடி உயரம் கொண்டதாகவும் ஒரு கதவு  இருத்தல் அவசியம் . தேவையான தண்ணிர் மற்றும் உணவு தட்டுகளும் இருக்கவேண்டும் . அகன்ற மேல்பகுதி கொண்ட மரம் வைத்து பராமரிக்கலாம். நிழல் கிடைக்கும் .

சமையல் அறை :

பாத்திரம் கழுவும் தண்ணீர் வெளியேறும் இடத்தில கற்றாளை,சேப்பங்கிழக்கு,வாழை மரங்கள்  நடலாம் வீட்டுக்காய்கறி கழிவுகள் கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம் .

புகை போக்கி  , விறகு அடுப்பு ஒன்று , புகை வெளியேற்றும் காத்தாடி ( Exhaust Fan ), அம்மி,குழவி , செக்கு  வைக்க இடம்

குளியல் அறை தண்ணிர் :

குளியலறை நீரில் வெளியேறும் இடத்தில கற்றாளை , வாழைமரம் , கல்வாழை , செடிகள் , வெட்டிவேர்  போன்றவைகளை நட்டு இயற்கையான முறையில் நீர் சுத்திகரிப்பு செய்யலாம் .குளியலுக்கு பயன்படுத்தும் பொருட்களும் இயற்கையானதாக இருக்கலாம் .

 

மின்சாரம்:

சூரிய ஒளி தகடுகள் ( இதில் இரண்டு விஷயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் முதலில் அமைக்கும் செலவும் , பராமரிப்பும் அதிகம் ) வழியாக வீட்டிற்கு தேவையான  மின்சாரம் உற்பத்தி செய்து   மின்கலன்களில் சேமித்து குறைந்த அளவு மின்சாரம் தேவைப்படும் மின் விளக்குகள்  ( LED )  அமைத்து பயன்படுத்தல் வேண்டும்.அரசாங்க மின் பகிர்வு அமைப்பும் பெற்றுக்கொள்ள வேண்டும்.மேலும் சமையல் எரிவாயுவை கொண்டும் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்தலாம் .

வாய்ப்பு கிடைத்தால் சிறிய காற்றாலை அமைப்பும் ஏற்படுத்தலாம் .

 

 

சமையல் எரிவாயு (Bio Gas Plant) : ( 250 சதுர அடி )

 

சாண எரிவாயு கலன் அமைப்பின் வழியாக பெறுதல் .அரசு கொடுக்கும் எரிகலன் அவசியம் தேவை  .இந்த அமைப்பு பசு தொழுவத்திருக்கு அருகில் அமைந்தால் மேலும் சிறப்பாக அமையும் .இதில் இருந்து வெளியேறும் சாண கரைசலை அமிர்த கரைசல் தயாரிக்க பயன்படுத்தலாம்.

 

 

 

 

நிலம் தயார் படுத்தல் :

தேவையான பொருட்கள் :

வீட்டுத்தோட்டம் : ( 250  சதுர அடி  )

செடி வகை  காய்கறிகள் :   கத்தரி   வகைகள் ,வெண்டைவகைகள் , மிளகாய் வகைகள்  ,தக்காளி வகைகள் .இதில் இருப்பது போல சாதாரண சணல் சாக்கில் செய்து கொள்ள முடியும் .இந்த அமைப்பு பயன்படுத்தினால் குறைந்த இடத்தில்  நிறைய செடிகள் வைக்க முடியும்  .கிழே காட்டப்பட்டு உள்ளது போல 5 அல்லது 6 அமைப்புகளை வைக்க முடியும் .

 

கொடி வகை பந்தல்  காய்கறிகள்( 400 சதுரஅடி ) :

 

அவரை வகைகள்,பாகல் வகைகள்  ,புடலை வகைகள்  ,சுரைக்காய் வகைகள்   ( 20 X 20 )

இந்த இடத்தின் ஒரு பக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு  தேனீ பெட்டி இருக்கும் . அதனை மிகவும் பாதுகப்பான முறையில்  நிழலில் வைக்க வேண்டும் .

 

நிழலில் வளரும் உணவு தாவரங்கள் :

மிளகு ,வெற்றிலை ,ஜாதிக்காய் ,கிராம்பு ,சக்கரை வள்ளி ,ஏலக்காய்,மிளகு ,பீட்ரூட் ,காரட். இவை அனைத்தும் கொடி வகை பந்தலின் நிழலில் பயிரிடபடவேண்டும் .

பண்டைய  நீர் மேலாண்மை :

பழங்காலத்தில் நமது முன்னோர்கள்  பயன்படுத்திய பானையை நிலத்தில் குழி அமைத்து அதன் வாய் பகுதியை  மூடி , அதில் தண்ணிர் உற்றிி வைப்பதன் மூலம் நிறைய தண்ணீரை சேமிக்க முடியும் .


இது பலவகையில் பயன் படுத்த முடியும்  .  பானையை சுற்றிலும் , இரண்டு வரிசை என்று அமைக்கலாம் அல்லது வட்டம்போல் செடிகள் நடலாம் .இதற்கான பானை அடிபாகம் பெரிதாகவும் , வாய் பகுதி குறுகி நீளமாகவும் இருக்க வேண்டும் .இதன் மூலம் அதிகமான நீர் ஆவியாகாமல் தடுக்க முடியும் .மூடியும் இருந்த மிகவும் நல்லது . இதில்  துளை இட வேண்டிய அவசியம் இல்லை .

“Micro sprinkler ” இரண்டு அல்லது மூன்று சொட்டுநீர் பாசனம் அமைப்பதன் மூலம் இடத்தின் தட்பவெப்ப வெப்பநிலை கட்டுபடுத்தி வைக்க முடியும்  . தண்ணிர் அதிகம் கிடைக்கும் காலத்தில் பாம்பு போன்ற நெளிந்து செல்லும் வகையில் சிறு வாய்கால் அமைப்பு .

 

 

 

 

 

கொடி வகை தரை காய்கறிகள் :

வெள்ளரிகொடி, நாட்டுபூசணி , தர்பூசணி ,வெள்ளை பூசணி, கோவக்காய்,பெரிய பாகல், நீள புடலை,சிறுபுடலை,பீக்கன்காய் ,மிதி பாகல் , சாம்பல் பூசணி ( 500 சதுரஅடி ) . இதன் உயரம் அதிக அளவு  6 அடி இருக்க வேண்டும்

 

தற்சார்புடைய வாழ்வியலில்  தேவையான கிழங்கு வகை :

கருணை கிழங்கு ,குச்சிக்கிழங்கு, சக்கரவள்ளி கிழங்கு , உருளை   கிழங்கு , முள்ளங்கி , சேனை கிழங்கு ,ராஜவல்லி கிழங்கு , பீட்ருட் ,காரட் , வெங்காயம் , பூண்டு , இஞ்சி போன்றவை ( 800 சதுரஅடி ) பயிரிலாம்.இடம் இருக்கும் பகுதிகளில்   தட்டை பயறு, பச்சை பயறு ,துவரை, அவரை  வகைகள்  போன்ற தானிய செடிகளை முடாக்கு போன்று பயன்படுத்தி கொள்ளலாம் .இதன் மூலம் நமக்கு தேவையான தானியங்கள் கிடைக்கும் .

 

இதில் சில வகை கிழங்கு பயிர்களை வளர்க்க மண் மிகவும் பொது பொதுப்பான ( உதிரி தன்மை )  வகையில் இருக்கவேண்டும் .அதற்கு கிழே உள்ளது போல பயன் படுத்தலாம் .இந்த அமைப்பு காரட் , உருளை ,சக்கரைவள்ளி கிழங்கு வகைகளுக்கு மிகவும் ஏற்றது .மேலும் இதன் பக்க பகுதிகளில் தக்காளி போன்ற காய்கறிகளையும் பயிர் செயயலாம் .குறைந்த இடத்தில அதிகமான பயன்பாடு கொண்டதாக இருக்கும் .

 

 

 

 

 

மூலிகை செடிகள் :

தூதுவளை ,சிறியாநங்கை, பெரியாநங்கை,கறிவேப்பிலை , துளசி,சக்கரை கொல்லி ,கற்பூரவல்லி, மருதாணி ,பிரண்டை, வெற்றிலை ,சதகுப்பைனு செடி ,கருணொச்சி மேலும்  பல  மூலிகைகள் . வட்டவடிவ அமைப்பு கொண்ட அமைப்பு அதிகமான இடம் சேமிப்பை கொடுக்கும் . ( 250 சதுரஅடி )

 

 

 

 

 

கீரை வகைகள் :

 

சிறு கீரை , முளைக்கீரை ,தண்டு கீரை ,வெந்தய கீரை,பசலை கீரை,புளிச்ச கீரை,கொத்தமல்லி,புதினா,சிவப்பு தண்டுகீரை,வல்லாரை ,பொன்னக்கண்ணி , கரிசலாங்கண்ணி ,தவசிக் கீரை , புளிச்ச கீரை   ,முடக்கத்தான் போன்றவைகளை மேட்டு பாத்தி முறையில் பயிரிட வேண்டும் . ( 400 சதுரஅடி ).

 

இந்த பகுதிகளை பிரிக்கும் வகையில் உயிர் வேலிகள் அமைக்க வேண்டும் . மேலும் கீழே உள்ளது போல கயிறுகளை இணைத்து கொடி ( கோவக்காய் ,பிரண்டை ) வகைகளை படர விட்டு மேலும் பயன் பெற முடியும் .இந்த அமைப்பு கிழக்கு மேற்கில் இருக்கும் படி அமைக்க வேண்டும் . இதற்கு 5 அடி அகலம் தேவை .

அழகு/சிறு அருவி  மீன் குளம் : ( 300  சதுர அடி )

இந்தக்குளத்தில் அழகு மீன்கள் வளர்க்கலாம் , சிறு அருவிபோன்ற அமைப்புக்கு அருகில்  நிழல் தருவதற்கு முள்ளில்லா மூங்கில் + வேம்பு + புங்கன் மரங்களை  நட்டு வைக்கலாம். இந்த மரங்கள் மிக அதிகமான அளவு பிராணவாயுவை உற்பத்தி செய்யும் .சுற்றுபுறத்தை குளிர்ச்சியாக வைத்து இருக்கும் . இந்த இடத்தில இருக்கும் மரங்களை சரியான முறையில் தேவையான அகல,உயரத்தில் இருக்குமாறு  பராமரித்து வர வேண்டும் .

இங்கு சிட்டுக்குருவிகள் தங்கும் வகையில் 5 முதல் 10 மர பெட்டிகள் வைக்க வேண்டும் .மரங்களிலோ அல்லது தனியாக வைக்கலாம் . சிட்டு குருவிகளை கவர அதற்கு  தேவையான உணவும் ,தண்ணீரும் வைக்கலாம் .சில இடங்களில் திணை , கம்பு போன்ற தனிய பயிர்களை வைத்து விடலாம் .இது நிறைய பறவைகளை ஈர்க்கும் . சிட்டுக்குருவிகள் மனதிற்கு இதமான இயற்கையான சூழலையும் கொடுக்கும் , பூச்சிகளையும் கட்டுபடுத்தும் .

இந்த குளம் சிறிதும் பெரிதுமாக  வட்ட வடிவில்  முதல் வட்டம் 5 அடி ,இரண்டாவது வட்டம் 3 அடியும்  ( எட்டு  வடிவில் ) இருக்கும் 3 முதல் 5  அடி அழம் வரை இருக்கும் .இந்த குளம் அழகு மீன்அல்லது உணவிற்கான மீன்களை  வளர்த்து அதனை இனபெருக்கம் செய்யவும் பயன்படுத்தலாம்  ,இரண்டு அடி உயரத்தில் இருந்து சிறுஅருவி இருக்குமாறு அமைக்க வேண்டும் . இந்த அருவி அமைப்புக்கு சிறிய மோட்டார் தேவை படும் .அதற்கு தேவையான மின்சாரம் அமைப்பும் இருக்க வேண்டும் .சிறு அருவியில் நீர் விழும் ஓசை சுற்றுபுறத்தை ஒரு இயற்கையான சுழலை கொடுக்கும் .குளத்தின் ஒரு வட்ட பகுதியில் நீருக்கு oxygenation கொடுக்கும் புல்வகைகளை   நடவேண்டும் .

இந்தகுளம் போர்டிகோ  பகுதிக்கு வடகிழக்கில் அமைந்து இருக்கும். போர்டிகோவில்இருந்து நேரடி பார்வையில் படும் படி அமைந்து இருக்கும் .இதன் ஓரத்தில் தோற்றாங்கோட்டை மரம் , சரக்கொன்றை மரம்,முள்ளிலாமூங்கில் மரம் .மாலை நேரத்தில் அமர்ந்து கொள்ள 5  பேர் வரை அமரும் வகையில் வசதியான இருக்கை வசதியும்  , வெளியில் வைத்து சமைக்கும் அமைப்பு ( BBQ Pit )  . மின்விளக்குகளும் இருக்க வேண்டும் .

சிறிய வேலி போன்ற அமைப்பை ஏற்படுத்தி ஆடுகள் , பசுக்கள் தோட்டத்திற்குள் வராமல் பாதுகாப்பான அமைப்பை கொடுக்க வேண்டும் .ஆனால் கோழிகள் , வாத்துகள் வருவதற்கு வழி ( தேவைக்கு பயன்படுத்த )  இருக்க  வேண்டும் .

 

மீன் வளர்ப்பு குளம் : ( 500 சதுர அடி ) + கோழி ( 70 No.s ) + வாத்து ( 10 No.s )  + காடைகள்  ( 10 No.s )

மீன் குளம்  2௦அடி நீளம்  15அடி அகலம்  6 அடி அழம் கொண்ட குளம் . .இதற்குள் நமக்கு உணவுக்கு தேவையான மீன்களை வளர்க்கலாம்.. இதன் அடிபகுதியில் கரம்பை மண் , ஓரங்களில் செங்கல் அல்லது Hallow Block  கொண்டு ( மண்ணின்  இயல்பை பொருத்து ) கட்டுமானம் செய்ய வேண்டும் .ஒரு ஓரத்தில்  படிகள் போன்று கட்டவேண்டும் .இந்த படி அமைப்பில்  oxygenation கொடுக்கும் புல்வகைகளை   நடவேண்டும்  .குளத்தின் ஓரங்களில் வாழை பயிர்செய்து நிழலான அமைப்பை ஏற்படுத்தலாம் .

இந்த குளத்தில் இருந்து வெளியேறும் அல்லது வெளியேற்றும் தண்ணிர் தோட்டத்தில் இருக்கும் பயிர்களுக்கும் செல்லும் வகையில் அமைப்பு இருக்கவேண்டும் .

தேவைக்கு வளர்க்கும் குளத்தில் வளரும்  மீன்கள் :
குளத்தின் அடிபகுதியில் :விரால் ,வாளை
நடுகண்டத்தில் :ரோகு,மிர்கால்
மேல் தட்டு வகை :கெண்டை ,கட்லா

இந்த குளத்தில் மேல் பகுதில் 10 அடி X 10 அடிX 1௦ அடி  அளவில் கோழிகள் அடைக்கும் கொட்டகை. இதன் கூரை தென்னை கீற்றுகள் கொண்டு அமைத்து கொள்ளலாம் . மேலும் வெப்பம் அதிகம் தாக்காத வகையில் இருக்க வேண்டும் .

கோழி கொட்டகையின் உள்பகுதியில் இதில் கீழே உள்ள படத்தில் காட்டி உள்ளதுபோல அமைப்பை கிடைக்கும் மரக்குச்சிகளை கொண்டு ஏற்படுத்தினால் குறைந்த இடத்தில நிறைய கோழிகளை இரவில் தங்க வைக்க முடியும் .கோழி கழிவுகள் கீழ்வரிசையில்  இருக்கும் கோழி மேல் விழாமல்  இருக்குமாறு  சரிவை சரியான அளவில்  அமைக்கவேண்டும் .ஒரு மின்சார விளக்கு பொருத்தவேண்டும் .

கோழிகள் முட்டையிட/அடைகாக்க  பாதுகாப்பான  தனியாக ஒரு பகுதியும்  வாயிலும் இருக்க வேண்டும் .இங்கு இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் அல்லது உடைந்த  மண் பானைகளை பயன்படுத்தலாம் .கீழே இருக்கும் படம்  புரிதலுக்கு மட்டுமே .

கோழி வகைகள்:சுத்தமான நாட்டுக்கோழி , கடக்நாத் கோழி ,வான்கோழி, கினி கோழி

வாத்து கொட்டகை

 

வாத்து கொட்டகை 10 அடி X 10அடிX 10 அடி  அளவில் குளத்தின் மேல் பகுதியில்          கூரை அமைக்க வேண்டும் . கூரை அமைப்பில் மேல் பகுதியில் இருக்கும்  காடை கழிவுகள் வாத்து கொட்டகையில் விழாமல் இருக்க வேண்டும் .ஓரங்களில் சுற்றிலும் கம்பி வலை அடித்து அதில்  100% Shade net கொண்டு கட்டி விடலாம்  .

வாத்து வகைகள் : பங்களா வாத்து,மாஸ்கோவி வாத்து ,காக்கி காம்பெல்

காடை வளர்ப்பு :

காடைகளுக்கான இரும்பில் செய்த பெட்டிகளும் அதற்கு நிழல் தரும் வகையிலும் , ஈரம் படாமலும் , நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும்  இருக்கும் வகையில்  அமைக்கவேண்டும்.கடைகளுக்கு வெப்பம் தேவை எனவே மின்சார விளக்கு பொருத்தும் அமைப்புகள் தேவை . .கழிவுகளை எளிதாக சுத்தம் செய்யும் படி இருக்க வேண்டும் .

கோழி + வாத்து  மேய்ச்சல் பகுதி  + பட்டி முறையில் ஆடு வளர்ப்பு ( 5 )   +  2 பசுகளுக்கான தொழுவம்  : (1500  சதுர அடி )

கோழிகளுக்கு மண் குளியல் ( 3 அடி X 3 அடி X 1அடி )  தொட்டியை ஈரம் படாதவாறு பந்தல்அமைப்பு 5 அடி X 5 அடி  X 3 அடி அளவில் அமைக்கவேண்டும் .

பந்தலில் தண்ணிர் முனை அமைப்பு , சிறிது தீவனம் வைக்க வேண்டும் .

கோழிகளின் மேய்ச்சல் நிலத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் புழு /பூச்சிகள் உற்பத்தி செய்யும் வகையில் தோட்ட கழிவுகள் , சமையலறை கழிவுகள் கொட்டி சிறிது பசுவின் சாணமும் ( சமையல் எரிவாயு கலனில் இருந்து வெளியேறும் கழிவு சாணம் இந்த பகுதில் வெளியேறுமாறு  வைத்து விட்டால் இன்னும் சிறப்பு ) கலந்து விட்டால் கோழிகளுக்கு அருமையான இயற்கையான உணவு உற்பத்தியாகும் .இதிலிருந்து நமக்கு தேவையான இயற்கை உரமும் கிடைக்க பெறலாம் .கோழி மண் குளியல் தொட்டி அமைப்பை வெட்ட வெளியிலும் அமைக்க வேண்டும் .

100 சதுர அடியில் கோழி குஞ்சுகளுக்கான 75% shade net + கம்பி வலை  அமைப்பு  மர நிழலில் அமைப்பது சிறந்தது .

ஆடுகளுக்கு தேவையான  பட்டி முறையை  சிறிது மேடான ( ஆடுகளுக்கு ஈரம் இல்லாத தரை பகுதி  எல்லா காலங்களிலும் இருக்க வேண்டும் ) பகுதியில்/பகுதியை  அமைத்து , தென்னை நார் கழிவுகள் பரப்பி வைக்கலாம் . ஆடுகள் மழை அல்லது பனியில்இருந்து பாதுகாப்பாக  இருக்க இதன் ஒரு பகுதியில் சிறிய கூரை ( 10அடி  X 5 அடி ) போன்ற அமைப்பை ஏற்படுத்தல் வேண்டும் .இந்த பட்டி அளவு  10 அடி  X 10 அடி  இருக்கலாம் .இவை அனைத்தும் தேவையான இடதிருக்கும் மற்றும் வகையில் இருக்கவேண்டும் .

ஆடு வகை :மோலை ஆடு ,கன்னி , கொடி வகை ( எங்கள் பகுதிக்கு உரித்தான நாட்டு வகைகள் )

பசுக்கள் சிறு பந்தல் : 10 அடி X 20 அடி

மேடான பகுதியாக இருக்க வேண்டும் அதற்கு .தரை செம்மண் + சட்டு மண் அல்லது சிமெண்ட் கலந்து இரும்பு போல 1 இன்ச் அளவு சரிவாக அமைக்க வேண்டும் . சிறு பந்தல் அமைப்பை  சுற்றிலும், தடுப்புக்கு  கிடைப்பதை  கொண்டு அமைக்கவேண்டும் .அருகில்  அகன்று வளர்த்து நிழல்தரும் மரம் வைத்து பராமரிக்கலாம் ( வேம்பு , புங்கன் )   . தீவனம் இடும் தொட்டியை தண்ணிர் படாத இடத்திலும் , தண்ணிர் தொட்டியில் Flush Valvu அமைத்து  எப்பொழுதும் புதிய தண்ணிர் கிடைக்கும் வகையில் மேல்நிலை தொட்டியுடன் இணைப்பு இருக்கும் வகையில் அமைக்கவேண்டும் .  கோ-மூத்திரம் சேமிப்பு தொட்டியில் குறைந்த அளவு 500 லிட்டர் வரை சேமிக்கும் அளவு இருக்க வேண்டும் .

இந்த பசு கொட்டகை சமையல் எரிவாயு கலனுக்கு அருகில் இருந்தால் நலம் .எரிவாயு கலனுக்கு அருகில் அமிர்தகரைசல் தயாரிக்கும் உர தொழிற்சாலை அமைப்பது சால சிறந்தது.

பழ/ல மரங்கள் : ( 1000 சதுர அடி ) .

 

குறைந்தது இரண்டு வருடங்களுக்கு முன் வைத்து பாதுகாக்கவேண்டும் .

நிலத்தின் ஓர  பகுதியில் +  கோழி + வாத்து  மேய்ச்சல் பகுதி ஒட்டிய படி 1000 சதுரஅடி அளவில் பழ/ல மரங்கள் இருக்க வேண்டும் .இதன் மூலம் அதிகமான அளவு கோழிகளுக்கு மேச்சல் நிலம் கிடைக்கும் .இதில் பல/ழ மரங்களான கொய்யா , எலுமிச்சை ,சபோட்டா ,மாதுளை ,விளாம்பழம்,கொடுக்காபுளி மரம் , சீத்தா பழம்,முருங்கை,பப்பாளி, சிறு /பெரு நெல்லி , முள்ளு சீத்தா பழம், நுணா ,வில்வம், வேம்பு ,குமிழ் , புங்கன்  ,தேக்கு ,கொடாம்புளி, மலைவேம்பு , நவகொஞ்சி , ,அழிஞ்சி,நாவல்,நெட்டிலிங்க மரம் ,மகாகோணிமரம் , நெய்கொட்டான் மரம்,மகிழம்,பலா ,வேர் பலா , மஞ்சள் ,

பாம்பு கொல்லி ,கொக்கு மந்தாரை,  அந்தி மந்தாரை, சர்வ சுகந்தி மரம் ,செஞ்சந்தனம் ,மாஞ்சியம் மரம் ,கடுக்காய் மரம் , நெற்பவளச் செடி,ஈர பலா,கருங்காலி (எ) வைஜயந்தி,அசோகமரம்,செண்பகமரம்,கடம்பமரம் ,வைக்கவேண்டும் .

நடுவில் அங்கே அங்கே வெட்டிவேர் மற்றும் கற்றாழை  பயிரிட வேண்டும் . ( வெட்டிவேர் அதிக அளவு நீரை வேரில் சேமித்து வைக்கும் இயல்பு உடையது. இதன் மூலம் மரத்திருக்கு மிகவும் குறைவான தண்ணிர் கொடுத்தால் போதும் )

உயிர் வேலி மரங்கள் : ( 4100  சதுர அடி )

நமது நிலத்தின் வேலியில் இருக்கும் கல்கால் அமைப்பில் இருந்து 8 அடி நமது நிலத்தில் உள்பக்கமாக  கீழ்க்கண்ட தீவன /புல் வகைகளை வைக்கலாம் . 6 அடி முடிவில் பயன் தரும் மரங்களை வைக்கலாம் . 1அடி இடம் விட்டு மலைவேம்பு போன்று நேராக வளரும் மரங்களையும் வைக்கலாம்.

மேலும் ஆந்தை , பறவைகள் அமர ” T ” வடிவ குச்சிகள் இரண்டு அல்லது மூன்று இடத்தில நட்டு வைக்கவேண்டும்.காரணம் நமது இடத்தில இருக்கும் எலிகளை கட்டுபடுத்த முடியும் . இவை தங்க சரியான இட அமைப்பை பல/ழ மரங்களில் அவை நன்கு வளர்ந்த பின்பு மரங்களின் கிளைகளில் அமைக்கவேண்டும் .

தீவன மரங்கள்/புல்வகைகள்  :

 

தாய்லாந்து சூப்பர் நெய்பிர் ,சுபாபுல் ,  மல்பெர்ரி , அகத்தி ,சூப்பர் நேப்பியர் , செங்கரும்பு, கரும்பு ,செம்மங்குச்சி, மக்கா சோளம் , குதிரை மசால், கிளரிசீடியா , கிளுவை, கொழுக்கட்டைபுல்,முருங்கை. கரும்பு ,செங்கரும்பு ,

பயன் தரும் மரங்கள் :

 

பனை மரம் ( 30 No.s )  8 அடிக்கு ஒன்றும் ( யாழ்ப்பாண பனை வகை தேடுகிறேன் ) ,  தென்னை மரம் ( 15 No.s )   வைக்க வேண்டும் . கிழக்கு மேற்காக இருக்கும் வரப்பில் வைத்தால் எண்ணிக்கை குறையும் .

  மீதி இருக்கும் நிலத்தில்  ?

இன்னும் என்ன செய்ய இயலும் என்ற முயற்சியில் …

 

****************கனவுகள் தொடரும் ***************

நான் இது வரை எதிர் கொண்ட கேள்விகள் :

  1. எதற்கு மரம் வைத்து 1000  சதுர அடி வீணாக போக வேண்டும் ?இதன் முலம் நமக்கு தேவையான பழங்கள் ,சுவாசிக்க காற்று நம்மால் முடிந்த சிறு அளவு சுற்றுப்புற சுழலை காப்பாற்றவும் .மேலும் கோழிகள் தான திரிந்து வர இந்த அமைப்பை பயன் படுத்த உள்ளேன் .இரட்டை பயன்பாடு .
  2. ஏன் சிட்டுகுருவிக்கு இதனை முக்கியத்துவம் ?  பூச்சிகளை  கட்டுபடுத்தவும்  .இந்த இனத்தை  பாதுகாக்கவேண்டும்  என்ற எண்ணத்திலும் .
  3. ஏன் இரண்டு மீன் குளம் தேவை ? ஒன்று உணவு தேவைக்கும் ,மற்றது  மன நிம்மதிக்கும் .சில வகை மீன்களை இனபெருக்கம் செய்து ஒரு சிறிய வருமானமும் பெற வேண்டும்  என்ற நோக்கத்தில் .
  4. பாம்பு வரும் என்ன செய்வது ? பாம்பு வருவதால் எலிகளில் தொல்லை குறையும் .பாம்புகள் நமக்கு தொல்லை தருவது இல்லை .மேலும் பூண்டும் புதினாவும் பாம்புகளுக்கு பிடிக்காத வாசனை .இதனை தெளித்தும் விடலாம் .இது போல ஒரு இயற்கையுடன் இயைந்த வாழ்கையில் பாம்பின் பங்கும் தேவையே .
  5. கொசு தொல்லை அதிகம் இருக்கும் போல உள்ளது ? எப்படி சமாளிப்பது ? . கொசு தொல்லை வருவதற்கு வாய்ப்புகள் நிச்சயம் மிக மிக குறைவே. மேலும் சில வகை செடிகள் வளர்ப்பதால் கட்டு படுத்த முடியும்.
  6. எதற்கு தேவை இல்லாமல் மழை நீர் சேகரிப்பு தொட்டி செலவு செய்யவேண்டும் ? வருங்காலத்தில் தண்ணிர் தட்டுப்பாடு ஏற்படலாம் அப்பொழுது இந்த அமைப்பின் தேவை இருக்கலாம் .மேலும் முடிந்த அளவு நீர் சேகரிப்பு  முறை இருப்பதும்  நல்லது தானே.
  7. இந்த நிலத்திற்கு  தண்ணிர் எங்கயிருந்து எப்படி கிடைகிறது ? கிணறு அல்லது ஆழ்துளை கிணறு உள்ளதா ? .இதற்கு நிலத்திருக்கு ஆற்று  பாசனவசதி உள்ளது . தேவை ஏற்பட்டால் சிறிய கிணறு எடுக்கும்  எண்ணமும் உள்ளது .
  8. ஏன் கிணறு எடுக்க வேண்டும் .ஆழ்துளை கிணறு இடம் சேமிப்பு இருக்குமே ? ஆழ்துளை கிணறு அமைக்க எண்ணம் இப்பொழுது இல்லை.அனுபவத்தில் கிணறு எடுப்பதால் நீர் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் 500 அடி வரை ஆழ்துளை அமைத்து நீர் கிடைக்க வில்லை .அங்கு 50 அடி ஆழம் கிணறு எடுத்ததில் நல்ல வெயில் காலத்திலேயே நீர் கிடைத்தது.
  9. நீர் பாசன முறை திட்டங்கள் உள்ளதா?  .இந்த அமைப்பில் இயன்றவரை ஆட்களில் தேவையை குறைக்க எண்ணம் உள்ளது. ஆரம்ப கட்டத்தில் வெளி ஆட்களின் தேவை இருக்கும் .முடிந்தவரை சொட்டு நீர் அல்லது தெளிப்பு நீர் பாசன அமைக்கும் எண்ணம் .தேவை எனில் பல பயன்பாடு கொண்ட சிறு இயந்திரங்கள் வாங்கலாம் .
  10. எதற்கு வீடு ” mud Block ” வைத்து கட்ட வேண்டும் ? மேற்கூரை எதை வைத்து பண்ணுவதாக உத்தேசம் ?  Vernacular Architecture முறையில் கட்டலாம் என்ற முடிவில் உள்ளேன் . இப்போதைக்கு ஒன்றும் முடிவுகள் இல்லை இன்னும் தேடலில்தான் உள்ளது. மேலும் சமுதாயத்தில் இருக்கும் பழக்கத்தில் இருந்து மாற்றமான ஒரு முறையில் பயணிக்கும் பொழுது இருக்கும் அணைத்தும் எனக்கும் உண்டு . 🙂 
  11. வீட்டின் பிளான் எதாவது உள்ளதா ? வீடுகட்ட என்ன செலவு ஆகும் ?இரண்டு படுக்கை அறை  கொண்டதாக இருக்க வேண்டும், ஒரு படுக்கை அறையில் குளியல்/கழிவு அறை அமைப்பு தேவை. வீட்டின் அனைத்து பகுதிகளையும் சிறப்பாக பயன்படுத்தும் அமைப்பில் இருக்க வேண்டும் .செலவு தொகை முடிந்த அளவு குறைவாகவே இருக்கவேண்டும் என்பதால் மட்டுமே இன்னும் தேடுதல் உள்ளது .சில நல்ல நண்பர்கள் எனக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் சொல்லி உள்ளனர் .
  12. மழை காலத்தில் மின்சாரம் சூரிய ஒளி மூலம் கிடைக்குமா ? தமிழகத்தில் அதிகமான நாட்கள்  சூரியஒளி கிடைக்கும் .மேலும் அரசாங்க மின் இணைப்பும் உள்ளது .
  13. தானியம் சேமிக்க குதிர் தேவையா ? நிறைய இடத்தை அடைக்கும் . விளையும் பயிர்களை நமது நீண்டகால தேவைக்கு சேமித்து வைக்க தேவை .இதற்கு  பயன்படுத்தப்படும் இடம் நிச்சயம் தேவையான ஒன்று தான்
  14.  புறா வளர்க்கும் என்ன உண்டா ?  இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை .அது பற்றி யோசிக்க வேண்டும் .
  15. மொத்தம் என்ன செலவு , எத்தனை நாள் ஆகும் ஆகும் ? . முடிந்தவரை குறைந்த செலவில் செய்ய வேண்டும் . இந்த அமைப்புகள் அனைத்தும்  +  வீடும்  சேர்த்து முடிக்க  மூன்று முதல் நான்கு வருடம் ஆகலாம்  . ஒன்றன் பின் ஒன்றாக செயல் படுத்த வேண்டும் .களத்தில் செயல்படுத்தும் பொழுது நிறைய மாற்றங்களும் இருக்கும் .செலவுகள் என்ன என்பதை பற்றிய சரியான மதிப்பேடு இல்லை . ஒன்றன் பின் ஒன்றாக செய்வதாக உள்ளேன் .முடிந்த அளவு சுயமா கிடைக்கும் பொருளை வைத்து செயல்படுத்துவது .
  16. பாரம்பரிய விதைகள் எங்கு கிடைக்கும் ? இப்பொழுது நிறைய நண்பர்கள் மற்றும் அமைப்புகள் பாரம்பரிய விதைகள் வைத்தும் ,வளர்த்தும்,பகிர்ந்தும்  வருகின்றனர் . ஆரம்பத்தில்  சிறிது முயற்சியுடன் தேடினால் கிடைக்கும்   .கிடைத்த பின்பு நாமே விதைகளை உற்பத்தியும் செய்து கொள்ளலாம் .நானும் பாரம்பரிய விதைகள் வைத்து இருக்கும் சில தொடர்புகளை தொகுத்து உள்ளேன் .
  17. தேவையான தானிய பயிர்களை பயிரிடும் எண்ணம்  உண்டா ?  உண்டு ,பாரம்பரிய நெல் வகைகள்  , கோதுமை , சிறுதானிய பயிர்களை பட்டம் பார்த்து  பயிர் சுழற்சி முறையில் விதைக்க வேண்டும் .விளையும் பொருளை நமது குதிர்க்களில் சேமித்து பயன் படுத்த வேண்டும் என்பதேயாகும்
  18. வருடம் இதில் என்ன வருமானம் வரும் ? எதற்கு இந்த வீண் வேலை பேசாமல் பணம் கொடுத்து கடையில் வாங்குவது எளிமையானது .இதில் நமது சொந்த தேவைகளை 85 % பெறமுடியும் . சுத்தமான  விஷமில்லா உணவு கிடைக்கும் .இதில் குறைந்த அளவு ( பணமாக ) வருமானமும்  பெற வழிகள் உண்டு .நன்கு பரிசிலித்து பார்த்தல் புரியும் .இதனை நான் வீண் வேலை என்று பார்ப்பது இல்லை .காலம் எல்லாம் சம்பாதித்து அதனை மருத்துவமனைகளுக்கு கொடுப்பதை விட , இது sசிறந்தது  என்றே எண்ணுகிறேன் .உடல் உழைப்பும் இருக்கும் .ஆரோகியமான உணவும் கிடைக்கும்.
  19. இப்படி வாழ்ந்தால் சமுதாயத்தில் மரியாதை இருக்குமா ? சொந்தங்கள்  என்ன பேசும் ? சமுதாயத்தை பற்றி கவலையில் இருந்தால் நமக்காக நாம் எப்பொழுது வாழ்வது. நண்பர் சொன்னது போல வாழ்ந்தாலும் , வீழ்ந்தாலும் பேசும் .மேலும் தனித்து வாழ்வது என்பது அல்ல .இதில் நிறைய மக்களுடன் பழகும் வாய்ப்பும் சமுதாயத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.நாமும் புரியவைக்க முடியும்.இந்தனை பார்த்து நிச்சயம் ஒருவர் வந்தது இது போல வாழ வேண்டும் என்று நினைத்தால் போதும் .
  20. திடீர் செலவு வந்தால் என்ன செய்வது ? . இப்படி அனைத்தையும் யோசித்து கொண்டே இருந்தால் நிச்சயம் எதையுமே செயல் படுத்த முடியாது .எனக்கு எனது பெற்றோர் வாழ்க்கை/சமுதாய  பாடத்தை கற்றுகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள் .எல்லோரும் சொல்லும் பணத்தை  கொடுக்கவில்லை .நாமும் நமது எதிர்கால சந்ததிகளுக்கு வாழ்க்கை பாடத்தை சொல்லி கொடுத்துவிட்டால் போதும்  என்பது எனது  பொதுவான எண்ணம்.—இரண்டு தலைமுறைக்கு முன்னால் ஒரு குடும்பதிருக்கு குறைந்தது 3 முதல் 6   குழந்தைகள் வரை பெற்றுக்கொண்டனர் .அப்பொழுதும் வாழ்கை சந்தோசமாக தானே சென்றது. அவர்கள் அவசர தேவை பார்த்து எதுவும் செய்ததாக எனக்கு தெரிய வில்லை .
  21. இந்த குறைந்த இடத்தில இதை செய்வதற்கு பதில் இருக்கும் இடத்தை மாற்றிவிட்டு இன்னும்  பெரிய இடத்தை  பார்த்து 3 முதல்  5 ஏக்கர் நிலத்தில் செய்யலாமே ? தேடினால் கிடைக்குமே ? நிச்சயம் எனக்கும் ஆசை  தான்  . ஆனால் தண்ணிர்  என்பது மிகவும் அவசியமான ஒன்று . மேலும்  , நான் பிறந்து வளர்ந்த  ஊரையும் , தெரிந்த முகங்களையும் விட்டு வர மனது இல்லை .மேலும் பல வருடங்கள் ஊரையும் உறவுகளையும் விட்டே இருந்து வருகிறேன் . சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் முயற்சி செய்ய உள்ளேன் . பார்ப்போம் இதற்கு நான் பட்ட வேதனை சொல்லி மாளாது அதுபோல இன்னொரும் முறையும் வேதனையும்  சோதனையும் வேண்டாம் என்ற எண்ணமும் எழுகிறது .காலம் கைகொடுத்தால் நிச்சயம்  பெரிய அளவில் செய்யும் திட்டமும் உள்ளது .  
  22. உங்கள் மொத்த திட்ட வரைவுகளை கொடுங்கள் ,நாங்கள் சரியான முறையில்  திட்டமிட்டு கொடுக்கிறோம் ?  நாங்கள் இது போல நிறையவே செய்து  நல்ல அனுபவம் உள்ளது .  சொல்ல போனால் என்னிடம் எந்த திட்ட வரைபடமும் இல்லை . நான் சில பண்ணைகளில் வேலை பார்த்த  படித்த , சிறுவயது முதல் தோட்ட வேலைகள் செய்த அனுபவங்களையும் வைத்து எனது நிலத்திற்கு தகுந்தற்போல இங்கு வடிவம் கொடுத்து செயல்படுத்த எண்ணம். அதில் வரும் அத்துனை  நல்லது கெட்டதுகளை  புரிந்து தெளிவு பெற எண்ணம் .நிச்சயம் எனக்கு ஏதும் தேவை எனில் கேட்டு தெரிந்து கொள்ளுகிறேன் .தவறாக எண்ண வேண்டாம் .அனுபவம் மட்டுமே சிறந்த ஆசான்.மேலும் சில உண்மையான பரந்த மனப்பான்மை உள்ள நண்பர்களின் அனுபவங்களும் உதவுகின்றன .
  23. ஆந்தை அல்லது கோட்டான் வருவது /கத்துவது எல்லாம் அபச குணம் .எதற்கு இந்த கோட்டான, ஆந்தை வருவதற்கு வசதி செய்ய வேண்டும் ?  கோட்டான், மற்றும் ஆந்தைகள் கடவுளின் அம்சம் என்று யாரோ ஒரு நண்பர் கூறியதாக நினைவு . சரியான விளக்கம் கிடத்தல் பகிர்த்து விடுகிறேன்
  24. அசாலா வளரக்க வில்லையா ? நிச்சயம் அசோலா வளர்க்கவேண்டும்  .களத்தில் அமைப்புகளை ஏற்படுத்தும் பொழுது இந்த அமைப்பு ஏற்படுத்தும் எண்ணம்  உள்ளது.
  25. உங்கள் கனவு தோட்டத்தில் நீங்கள் இருந்தால் சமுதாயத்தில் இருந்து தனிமை படுத்த படலாம் . நீங்கள் சமுதாயத்தில் இப்படி ஒரு தனிமையான வாழ்கை வாழ முடியுமா ?சமுதாயத்தில் தனிமை படுத்தலாம் என்பது தவறு .நாமும் நமது சமுதாயத்தில் நடக்கும் விழாக்கள் , திருமணம்,போன்ற நிகழ்வுகளில்  பங்கு பெறலாம் . இதில் தனிமை என்பது கிடையாது .
  26. இதில் வருமானம் என்பது மிகவும் குறைவுதான், இதனை ஏன் ஒரு தொழில்ரீதியாக  கொண்டு செல்ல கூடாது ? பள்ளிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த இடம் மிகவும் பயனுள்ளதாக இருக்குமே ? இயற்கையோட ஒரு வாழ்கை அல்லது இப்படியும் வாழ்கை  வாழ முடியும் என்று தெரியபடுத்தலாம் .எதிர்காலத்தில் ஒரு நல்ல மாற்றம் வரலாம் .அன்புக்கு நன்றி , நிச்சயம் நல்ல யோசனை தான் . முயற்சிக்கலாம் .அதற்க்கு முன் நிறையவே வேலைகளை முடிக்க வேண்டும் . குழந்தைகளுக்கு நிச்சயம் இந்த முறைகளை சொல்லி கொடுக்கலாம் .தனக்கான உணவை தானே தயாரித்து கொள்ளுவது மிகவும் நன்று .

 Dream home , Dream Project , Trees , Vegetables , sustainable living ,vernacular architecture,Cows , Goats ,chicken ,eggs ,fencing,Seeds, Natural farming , Natural food , Organic , A2 Milk , Ducks , Duck egg,Food Forest , Urban Gardening , permaculutre .

Exit mobile version