Site icon பண்ணையார் தோட்டம்

உலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தினம் கொண்டாடுவோம்

உலக காடுகள் தினம் மற்றும்  உலக தண்ணீர் தினம்

 

உலகம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது

மொத்த உலக பரப்பில் 70 % தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அதில் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் பயன்படுத்த நிலத்தடி நீர் எனும் நன்னீர் 0 .26 % தான் உள்ளது. நகரமயமாக்கல், பெருகி வரும் மக்கள் தொகை ஆகியவற்றை கணக்கில் கொண்டு வளர்ந்த நாடுகள் அதற்கான முன்னேற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளதை காணமுடியும்.

இந்திய இளமையான நாடு

2020 ல் 50 கோடி இளைஞர்களை கொண்ட உலகிலேயே மிகவும் இளமையான நாடு என மார்தட்டிக்கொள்ளும் நமது அன்னை பூமியின் நிலை என்ன? குறிப்பாக தமிழகத்தின் நிலை என்ன? கடத்த ஐம்பது ஆண்டுகளில் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் பங்களிப்பென்ன? மதுவை ஆறாக தமிழகமெங்கும் ஓடவிட்டது, நீர்நிலைகளையும் ஆறுகளையும் ஆக்கிரமித்து, அழித்து சீரழித்தது, விவசாய விளைநிலங்களை மலடாக்கியது, தேர்தல் நெருங்கும் சமயங்களில் எல்லாம் காவேரி பிரச்சனையை பெரிதாக்கி மக்களின் மனதை திசை திருப்புவது தவிர நீர் மேலாண்மைக்கு என்ன செய்தார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

கன மழையும் தண்ணீர் பஞ்சமும்

 

ஒரு வாரத்திற்கு முன்னாள் கன மழை பெய்த செய்தியும் அடுத்த வாரம் அதே பகுதியில் தண்ணீர் வேண்டி மக்கள் சாலையில் குடங்களை வைத்து மறியல் செய்யும் அவல நிலையில் தான் மாநிலம் உள்ளதை காணமுடிகிறது.நாடும் அங்கு வாழும் மக்களும் பொருளாதார நிலையில் உயர விவசாயமும் தொழிற்ச்சாலைகளும் வளரவேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை ஆனால் அதற்க்காக கொடுத்த விலை இயற்கையாக,இலவசமாக ஊரணிகளிலும், குளங்களிலும் ஆறுகளிலும் கைகளால் அள்ளி பருகிய நிலை மாறி இன்று பாலைவிட அதிக விலை கொடுத்து குடிநீரை வாங்கும் அவல நிலைக்கு ஆளாகியுள்ள நிலை வரும் காலங்களில் தண்ணீருக்காக நாடுகள் மோதும் காட்சிகளையும் காணக்கிடைக்கும் என்பதே நிதர்சனம்.

 

 

உலக வன தினம்  காடு வளர்ப்போம் 

உலக வன தினம் , உலக தண்ணீர் தினம் என ஐநா சபையில் தீர்மானிக்கப்பட்டு அங்கங்கே கூட்டங்கள் நடத்தி, வாட்சப்பில், முகநூலில் பல செய்திகளை பகிர்ந்து நண்பர்கள் மத்தியில் கவலையுடன் உரையாடி அன்றைய வாழ்வியல் நெருக்கடி நினைவுக்கு வர பின்னர் அதில் கவனத்தை செலுத்தி மீண்டும் அடுத்த வருடம் வரும் இதே நாளில் மீண்டும் கவலைப்பட்டு , என்ன செய்ய இங்கு யாரையும் குற்றம் குறை சொல்ல முடியாது ஏனெனில் வாழ்வில் அடுத்தடுத்து நெருக்கடிகள் பல்வேறு வடிவங்களில் அவற்றையெல்லாம் கடந்து இம்மாதிரியான விஷயங்களில் கவனத்தை செலுத்த இயலாமல் ஒரு நாள் என்ன நோய், எதனால் வந்தது, இதற்கு என்ன தீர்வு என தெரியாமல் சிறிதும் பெரிதுமாக சேர்த்து வைத்த சேமிப்புகளையும் சொத்துக்களையும் மருத்துவமனைகளில் இழந்து கடனாளியாகி பின்னர் இயலாமையின் காரணமாக ஒரு ஓரத்தில் முடங்கி அன்று மேலே குறிப்பிட்ட உண்மைகள் எல்லாம் உணரப்பட்டு அன்றைய நிலையில் வாழ்வின் விளிம்பு நிலையில் உள்ள ஒருவனின் இந்த ஞானோதய கருத்துக்கள் அம்பலத்திற்கு வராமல் மண்ணோடு மண்ணாக போகும் காலசூழலில் நாம் வாழ்கிறோம் என்பதையாவது உணரும் நேரமிது.

உறவினர்களோ, தெரிந்தவர்களோ இறந்தபோது அவருக்கு இறுதி மரியாதை செய்து வழியனுப்பும் பொருட்டு மின்மயானத்திற்கு சென்று வந்த அனுபவம் அநேகமாக இங்கே அனைவருக்கும் உண்டு அங்கு இறுதியாக ஒரு பாடல் ஒலிக்கப்படும் அந்த 5 நிமிடங்களில் நமது மனதில் பல்வேறு விஷ்யங்கள் அலைமோதும் , திடமாக நாம் செய்யும் தவறுகளை எல்லாம் இனி திருத்திக்கொள்ளவேண்டும், வாழ்க்கை நிரந்தரமானது அல்ல , ஆகையால் இருக்கும்வரை நல்ல வண்ணம் வாழவேண்டும் என்ற உறுதியுடன் வீடு வந்து சேர்வோம், குளித்து முடித்து குளியலறையை விட்டு வெளியே வரும் முன்னரே தலையில் ஊற்றிய தண்ணீர் எவ்வாறு கால் வழியாக உடலை விட்டு நீங்கியதோ அது போல மயானத்தில் எடுத்த உறுதியும் மனதிலிருந்து நீங்கியிருக்கும். அது போல அல்லாமல் இழந்த இழந்துகொண்டிருக்கும் இயற்கை மீட்டெடுக்க உங்களால் இயன்ற ஏதாவது ஒரு சிறு விஷயத்தை வாழ்க்கையில் கடைபிடிப்பதோடு, உங்கள் குடும்பத்தை, உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என இணைந்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி மரங்கள் நடுதல், நீர்நிலைகளை காத்தல், இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்தல் என இயங்கினால் மட்டுமே நீங்கள் உங்கள் சந்ததியினருக்கு சேர்த்து வைக்கும் சொத்துக்களை, வசதிகளை அவர்கள் அனுபவிக்க இயலும், இல்லையெனில் செவ்வாய்யிலும் நிலவிலும் மனிதர்கள் வாழலாம் என்ற ஆராய்ச்சியில் வெற்றிபெற்று சொற்ப மக்கள் அங்கு சென்று ஒரு நாள் பூமிதினம் என்று கொண்டாடக்கூடிய நிலை வரும்.

– குமார் துரைசாமி

Exit mobile version