வேம்பு தோன்றிய கதை தெரியுமா?

10367588_226770494198908_3102498770649510533_n

நம் அன்றாட வாழ்வில் நமக்குப் பயன்படும் தாவர வகைகளில் வேம்பும் ஒன்று. சிறந்து கிருமிநாசினியாக பயன்படுகிறது. இத்தகைய வேம்பு எவ்வாறு தோன்றியது தெரியுமா? பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தத்தை திருமால் மோகினி வடிவம் கொண்டு தேவர்களுக்கு அகப்பையினால் பகிர்ந்து கொண்டு இருக்கும்போது, அசுரர்கள் மோகினியின் அழகில் மயங்கியிருக்கையில், அசுரர்களில் ஒருவன் தேவர்களின் பந்தியில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்து விடுகிறான். திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கு மூன்று அகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார். அமிர்தத்தைக் கொடுத்த திருமாலுக்கு அவன் அசுரன் என்பதை அருகில் இருந்த சூரியனும் சந்திரனும் ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த அசுரனின் தலையை திருமால் அகப்பையால் வெட்டி விடுகிறார். இதனால் தலை (ராகு) வேறு உடல் (கேது) வேறு என வெட்டுண்ட அசுரன், தனது வாயில் மீதமிருந்த அமிர்தத்தைக் கக்கி விடுகிறான். தன்னைக் காட்டிக் கொடுத்ததால் சூரியனும் சந்திரனும் ராகு கேதுவுக்கு பகை கிரகங்களாக ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

கக்கிய அமிர்தமானது பூமியில் விழுந்து வேப்பமரமானது. வேம்புக்கு கசப்புச் சுவை ஏனென்றால், அது அசுரனின் (பாம்பின்) வாயிலிருந்து வெளிப்பட்டதால்தான். இப்படி பாம்பின் நஞ்சும் அமிர்தமும் கலந்து உருவானதே வேம்பு. வேம்பின் இலை, பட்டை, வேர், பிசின், காய், எண்ணெய், முதலியன உண்ணும் மருந்தாகவும், புற மருந்தாகவும் பலவிதமான நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு நோய் என்பதே கிடையாது.

வேம்பின் மருத்துவ குணங்கள்: வேம்பு வீக்கம், கட்டிகளைக் கரைத்தல்,சிறுநீர் பெருக்குதல், வாதம், மஞ்சள் காமாலை, காய்ச்சல், பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது. வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும். வேப்பங்கொழுந்து 20 கிராம், 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும். வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.

வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும். 5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். 3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும். 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline