பச்சைத் தங்கம் மூங்கில்…

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் பன்னெடுங் காலமாக பயிரிடப்படுகிறது.

bamboo-garden-pannaiyar

இந்தியக் காடுகளின் பரப்பளவில் மூங்கில் 12.8 சதவீதம் காகித ஆலைகள், ரேயான் தொழிற்சாலைகளிலும் மூலப்பொருளாக, பெருமளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

வலுவாகவும், நீண்டகாலம் கெடாமலும் இருப்பதால், வீடு கட்டவும், கால்நடைத் தீவனங்கள் தயாரிக்கவும், விவசாயத் தொழில்களுக்கும், மேஜை, நாற்காலிகள், கலைப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.உலகச் சந்தையில் மூங்கில் பொருள்களின் மதிப்பு ஆண்டுக்கு 10 மில்லியன் டாலராக உள்ளது. 2015-ம் ஆண்டில் 20 மில்லியன் டாலராக உயரும் என்கிறார்கள். இந்தியாவில் மூங்கில் உற்பத்திப் பொருள்களின் மதிப்பு ரூ.6,505 கோடி. மூங்கில் தேவை பெருமளவுக்கு அதிகரித்து வருகிறது.

எனவே மூங்கிலை, தமிழ்நாட்டில் வணிக ரீதியாக சாகுபடி செய்ய தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுத்து வருவது விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது. மூங்கில் உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.

விவசாய வேலைகளுக்கு ஆள்கள் கிடைப்பது இல்லை. தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரத்தில் நிலையற்ற தன்மை காரணமாக விவசாயம் உபதொழிலாக மாற்றப்படுவதால், பலர் தங்கள் நிலங்களில் சவுக்கு மற்றும் தைல மரங்களை பயிரிடுவது அதிகரித்து வருகிறது. சவுக்கு, தைல மரங்களைவிட மூங்கில் அதிக வருவாய் தரக்கூடிய பயிராகவும், 3 மடங்கு வளர்ச்சி விகிதம் அதிகமாகவும் உள்ளது.வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட முள் இல்லாத மூங்கில் வகைகளை, பல்வேறு தட்பவெப்ப நிலங்களில் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, 4 ரகங்களை தமிழ்நாட்டில் பயிரிட ஏற்ற மூங்கில்களாக அறிவித்துள்ளனர். அவை

பேம்பூஸ் நியூட்டன்ஸ்
பேம்பூஸ் பலகுவா
வேம்பூஸ் வல்காரிஸ்
பேம்பூஸ் டுல்டா ரகங்கள்.

தமிழ்நாட்டில் வறண்ட பகுதிகளில் கல் மூங்கில், ஈரச் செழிப்பான பகுதிகளில் பொந்து மூங்கில் அதிகம் பயிரிடப்படுகிறது.

மூங்கிலை நடவு செய்ய, நாற்றுவிட்டு நடுவது, மூங்கில் கிழங்கை வெட்டி எடுத்து நடவு செய்தல், மூங்கில் கழிகளை கிழங்குடன் வெட்டி எடுத்து நடுதல், திசு வளர்ப்பு முறை, மூங்கில் கழிகள் மற்றும் பக்கக் கிளைகளை முளைக்க வைத்து நடுதல் எனப் பல வழிமுறைகள் உள்ளன. நாற்றுவிட்டு நடவு செய்தல் சிறந்த முறையாகக் கருதப்படுகிறது. கோடைகாலங்களில் 10 நாள்களுக்கு ஒருமுறை பாத்திக்கு 25 முதல் 50 லிட்டர் வரை நீர ஊற்றினால் நல்ல பலன் கிடைக்கும். மூங்கிலை 200 வகையான பூச்சிகள் சேதப்படுத்தும். என்றாலும் 10-க்கும் குறைவானவைகளே முக்கியமானவை. எனவே ஒருங்கிணைந்த பூச்சி, நோய்க் கட்டுப்பாடு முறைகள் தேவை.

பராமரிப்புக்கு ஏற்ப நட்ட 4-ம் ஆண்டு முதல் மூங்கில் கழிகளை வெட்டி அறுவடை செய்யலாம். கல் மூங்கில் ஹெக்டேருக்கு 2,400 கழிகளும், பொந்து மூங்கில் ஹெக்டேருக்கு 1,662 கழிகளும் கிடைக்கும். மூங்கில் சாகுபடி மூலம் ஏக்கருக்கு 6-ம் ஆண்டு ரூ. 25,500 ம், 7-ம் ஆண்டு ரூ. 30,800ம், 8-ம் ஆண்டு ரூ. 36,200ம், 9 முதல் 15-ம் ஆண்டு வரை ரூ. 39,600 வருவாய் கிடைக்கும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு மொத்தச் செலவு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம்.

இதுகுறித்து கடலூரை அடுத்த தியாகவல்லி விவசாயி சாமி கச்சிராயர் கூறுகையில், மூங்கில் விவசாயத்துக்கு ஹெக்டேருக்கு 2 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 8 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. தியாகவல்லி, திருச்சோபுரம் பகுதிகளில் 5 ஏக்கரில் கல் மூங்கில் பயிரிட்டுள்ளேன். சவுக்கு மற்றும் தைல மரச் சாகுபடியைவிட மூங்கில் லாபகரமானது. விரைவில் வளரும். 4 ஆண்டுகள் வரை மணிலா, அவரை, முள்ளங்கி, தர்ப்பூசனி போன்றவற்றை ஊடு பயிராகச் சாகுபடி செய்யலாம். 5 ஆண்டுகளுக்குப் பின் ஏக்கருக்கு ரூ. 60 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்

 

Thanks to : Growowngreen

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline