தேங்காய் நாரும் தேங்கும் நீரும்

தேங்காய் நாரும் தேங்கும் நீரும்

பருவமழை மற்றும் காவிரி நீரை நம்பி இனி விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கத் தேவையில்லை” என்கிறார், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி.

தேங்காய் நார்க்கழிவுகள் மூலம் விவசாயம் செய்து, தண்ணீர்ப் பற்றாக்குறையை சரி செய்யலாம் என்கிற புதிய முறையை கண்டுபிடித்துள்ள சுப்பிரமணி, பயிர்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை விட வேண்டிய நீரை 2 வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே பாய்ச்சி, வெற்றிகரமாக விவசாயம் செய்கிறார். இம்முறையைப் பின்பற்றுவதால், சுப்பிரமணிக்கு நல்ல விளைச்சலும் நீர் சேமிப்பும் ஏற்படுவதைப் பார்த்த மற்ற பகுதி விவசாயிகளும் தேங்காய் நார்க்கழிவு விவசாயத்துக்கு மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு 3 ஏக்கர் நிலமும், 120 தென்னை மரங்களும் இருக்கின்றன. விவசாயத்துடன் தேங்காயை நார்ல இருந்து கயிறு திரிக்கும் தொழிலையும் செய்கிறேன். ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலும் பவானி சாகர் அணையிலிருந்து திறந்து விடும் நீரையே நம்பி உள்ளோம். இதனால், பல நேரங்களில் போதுமான நீர் இல்லாமல் பயிர்கள் கருகிப் போய்விடுகின்றன.

விவசாயம் இப்படி இருந்தாலும் தேங்காய் நார் பிரிக்கும் தொழிலை விடாமல் செய்தேன். ஒவ்வொரு முறையும் நார்ல இருந்து கயிறு திரிக்கும்போது, கிடைக்கும் கழிவுகள் அப்படியே மக்கிவிடும்.

ஒருமுறை 2 நாட்கள் விடாது மழை பெய்தபோது, வெளியில் இருந்த தேங்காய் நார்க்கழிவுகள் நனைந்து, 3 வாரம் வரைக்கும் காயாமல் ஈரமாவே இருந்தன. இதைப் பார்த்தபோதுதான் வறண்டு போன வயல்ல, இதைப் போட்டு ஏன் விவசாயம் பண்ணக் கூடாது என்று தோன்றியது. கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு நிலத்தை உழுறதுக்குமுன் ஒரு டன் தேங்காய் நார்க் கழிவுகளை நிலம் முழுக்கத் தூவி, நல்லா உழுது நடவு நட்டேன். நான் எதிர்பார்த்தது போலவே தண்ணீர் அதிகம் தேவைப்படவில்லை. தினமும் தண்ணீர் பாய்ச்சும் வயலுக்கு தேங்காய் நார்க்கழிவைப் போட்டதிலிருந்து 2 வாரத்துக்கு ஒருமுறைதான் நீர் விடுறேன்.

பயிருக்கு அடியில நார்க்கழிவு திரி திரியாக இருக்கிறதால, வயல் முழுக்க எந்நேரமும் ஈரப்பதமாவே இருக்கும். இதில் உரச்செலவு குறைவதோடு தேங்காய் நார்க்கழிவு மக்கிப்போன கழிவு என்பதால், அதுவே மண்ணுக்கு வளம் கொடுத்து சிறந்த இயற்கை உரமாகவும் உள்ளது.

ஆரம்பத்துல நார்க்கழிவு மூலமாக விவசாயம் செய்வதைப் பார்த்துட்டு, பயிர் வீணாகிடப் போகுதுன்னு அறிவுரை சொன்னவங்க எல்லாம், நான் ரெண்டு போகத்துலயும் மகசூல் அதிகமா எடுத்து தண்ணீரை சிக்கனம் பண்ணதால, இப்போ என்னைத் தேடி வந்து தேங்காய் நார்க்கழிவு விவசாய முறையை தெரிஞ்சிக்கிட்டுப் போய் விவசாயம் பண்ணுறாங்க என்பதை நினைக்கும்போது, ரொம்ப பெருமையா இருக்கு” என்று சாதித்து விட்ட மகிழ்ச்சியில் பேசினார் சுப்பிரமணி.

தேங்காய் நார்க்கழிவு முறையில் விவசாயம் செய்வது பற்றி சுப்பிரமணி தரும் டிப்ஸ்:
தேங்காயை உரித்து அதன் நாரை அப்படியே நிலத்தில் போட்டால், பயிர்கள் பாழாகிவிடும். அதனால், தேங்காயிலிருந்து மெஷின் மூலம் நாரை தனியாகப் பிரித்து, அதன்மூலம் வரும் நார்க்கழிவுகளை மக்க வைத்த பிறகே வயலில் போட்டு உழ வேண்டும்.

அனைத்துப் பயிர் சாகுபடிக்குமே இந்த முறையைக் கையாளலாம்.

வட மாவட்டங்களில் தேங்காய் சாகுபடி மிகக் குறைவு என்பதோடு, நார்த் தயாரிப்பு முறைகளும் குறைவு. தமிழகத்தில் கொங்கு மண்டலத்திலும் தென் மாவட்டங்களிலும் நார் தயாரிப்பது அதிகம் என்பதால், மற்ற பகுதி விவசாயிகள் நார்க்கழிவுகளை இந்தப் பகுதிகளில் வாங்கிக்கொள்ளலாம்.

நார்க்கழிவை எடுத்து வந்து, காளான் விதையைக் தூவினால் சீக்கிரம் மக்கிவிடும்.

ஒரு ஏக்கருக்கு அரை அல்லது ஒரு டன் தேங்காய் நார்க்கழிவுகளைப் போடலாம்.

தண்ணீர்ப் பிரச்சினையை சந்தித்து வரும் விவசாயிகள், இம்முறையைப் பின்பற்றினால் நல்ல விளைச்சல் பெறுவதோடு நீர் சிக்கனமும் செய்யலாம்.

கேரளாவில் தென்னை அதிகம் என்பதால், தேங்காய் நார் பிரிப்பதற்கு அங்கு வாரியமே உள்ளது. பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் அதனுடைய கிளையிலும் நார்க்கழிவுகள் தேவைப்படும் விவசாயிகள் வாங்கிக்கொள்ளலாம். ஒரு டன் நார்க்கழிவு 1,000 முதல் 2,000 ருபாய் வரைக்கும் விற்கப்படுகிறது.

இந்த முறையைப் பயன்படுத்தி சொட்டுநீர்ப் பாசனம் மூலம் விவசாயம் செய்தால், மேலும் நல்ல விளைச்சல் கொடுக்கும்

சுப்பிரமணி போன் நம்பர் – 90959 99535

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline