வீட்டில் மண் தரையில் காய்கறி தோட்டம் போட்டும் சரியாக வளரவில்லையே என்று வருந்துபவர்கள் உண்டு. வளராததற்கு ஒரு காரணம் அந்த மண் கெட்டித்தன்மையாக இருக்கலாம். இதனால் வேர் நன்கு
பரவிச் செல்லாது. காரணம் இதுதான் என்றால் இந்த முறையை முயற்சித்து பாருங்கள்…
மண் தரை இல்லாதவர்களும் காம்பவுண்ட் சுவர் ஓரமாக சிமென்ட் தளத்தில் இந்த முறையை கையாளலாம்.
இடத்திற்கு தக்கப்படி, மரச்சட்டங்களை (படத்தில் உள்ளபடி) நான்கு புறமும் இணைத்து ஒரு தொட்டி போன்ற அமைப்பில் தயார்படுத்த வேண்டும். முதலில் காய்ந்த இலை,சருகுகள் , காய்கறி கழிவுகள் போன்றவற்றை பரவலாக போட்டு அதன் மீது மண் கலவையை (செம்மண்+மணல்+காய்ந்த சாண உரம்) நிரப்ப வேண்டும்.
பின் உங்கள் விருப்பப்படி விதைகளை ஊன்றியும், தக்காளி, மிளகாய், கத்தரிக்காய் செடி நாற்றுகளை நடலாம். இந்த முறையில் தோட்டம் அமைப்பதால் வேர் வேகமாக மண்ணை ஊடுருவிச் செல்லும். தண்ணீர், காற்று சுலபமாக வேருக்கு கிடைக்கும்.
மரப்பெட்டிகளின் உட்புறம் தண்ணீர் உட்புகாத பாலீத்தீன் விரிப்புகளை பயன் படுத்தவேண்டும். உபயோகப்படுத்திய ஃப்ளெக்ஸ் கிடைத்தாலும் பயன்படுத்தலாம்.