வியாபார ரகசியங்கள்

பணக்கார வியாபாரி ஒருவர் இறக்கும் நிலையில் இருந்தார். அவர் தன் மகனுக்கு நான்கு வியாபார ரகசியங்களைச் சொன்னார்: ”வியாபார இடத்திற்கு நிழலில் போ, நிழலில் வா. இரண்டாவது, கடன் கொடு… திருப்பி நீயாகக் கேட்காதே; மூன்றாவது அதிக விலைக்கு வாங்கு, மலிவு விலையில் விற்பனை செய்; நான்காவது ரகசியத்தைச் சொல்லும் முன், வியாபாரியின் மூச்சு நின்றுவிட்டது.

தன் தந்தை சொன்னபடியே செய்தான். வீட்டிலிருந்து கடை வரைக்கு பந்தல் அமைத்து நிழலிலேயே போய் வந்தான். கடன் கொடுத்தான். எவரிடமும் திருப்பிக் கேட்கவில்லை. பொருட்களை அதிக விலைக்கு வாங்கி, குறைந்த விலைக்கு விற்றான். காலம் ஓடிக்கொண்டிருந்தது. பணம் கரைந்து போய்விட்டது. அவன் உறவினர் ஒருவர் அவனை பார்க்க வீட்டுக்கு வந்தார். நிலைமையை அறிந்தார். ஒரு பணக்காரனின் மகன் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை அறிந்து அனுதாபத்துடன் விவரம் கேட்டார். தந்தையின் மூன்று ரகசியங்களை வியாபாரியின் மகன் சொன்னான்.

“அட அப்பாவி, உன் தந்தை சொன்னவற்றை நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே..

”முதல் ரகசியம், நீ நிழலில் போகவேண்டும். அதாவது வியாபார ஸ்தலத்திற்கு அதிகாலையில் போ. மாலைக்குப் பின் திரும்பி வா என்பது பொருள். இரண்டாம் ரகசியம், யோக்கியர்களாகப் பார்த்து கடனைக் கொடு. அவர்களாகத் திருப்பித் தருவார்கள். நீ கேட்டு வசூல் செய்கிற ஆசாமிகளிடம் கடனைக் கொடுக்காதே என்று பொருள்.

“மூன்றாம் ரகசியம், நிரம்பக் கொள்முதல் செய். விலை மலிவாக இருக்கும். அப்படியானால் நிறைய வாடிக்கைக்காரர்கள் ஏற்படுவர். நிறைய வாங்கி, நிறைய பேருக்கு விற்பது என்று பொருள்.

இப்புதிய விளக்கத்தைக் கேட்ட பின்பு வாணிபம் செய்த வியாபாரியின் மகன் விழிப்படைந்தான். இழந்த செல்வத்தைப் பெருக்கும் மார்க்கத்தையும், தந்தையின் சூட்சம சூத்திரங்களையும் கண்டு கொண்டான். அதன்படி செய்து மீண்டும் கோடீஸ்வரனானான்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *