வாரம் ஒரு மரம் – சந்தனம்

வாரம் ஒரு மரம் – சந்தனம்

12243399_1527598530897395_4331062665505615263_n

தனம் தரும் சந்தன மரங்கள்
ஒரு ஏக்கரில் இருந்து ஒரு கோடி ருபாய் வருமானம் பார்க்க முடியுமா? என்றால் நிச்சயம் முடியும். அதற்காக அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. சந்தன மரங்களை நடவு செய்தாலே போதும்!

மரங்களில் முதன்மையானதும், அதிக வருமானம் தருவதுமாக இருப்பது சந்தன மரம்தான். என்றாலும், மூன்றாண்டுகளில் சவுக்கு, ஐந்தாண்டுகளில் தைல மரம், பத்தாண்டுகளில் கருவேல மரத்தை அறுவடை செய்யலாம் என்று சொல்வது போல, சந்தனத்தை இத்தனை ஆண்டுகளில் அறுவடை செய்ய முடியும் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. முதிர்ந்த மரம் இயற்கையாகவே காய்ந்து இறந்துவிடும். அதன் பிறகுதான் அதை வெட்ட அனுமதிப்பார்கள். இதற்கு 25 வருடங்களும் ஆகலாம், 30 வருடங்களும் ஆகலாம். அதேபோல, எல்லா இடங்களிலும் சந்தன மரம் வளர்ந்தாலும், சில இடங்களில் உள்ளே சந்தனம் இருக்காது. இதுதான் இயற்கையின் வினோதம்!

வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை போன்ற பகுதிகளில் நன்றாக வளரும்.

சரி, சந்தன மரத்தை வணிகரீதியாக எப்படிச் சாகுபடி செய்வது என்பதை பற்றி பார்ப்போமா?

கூட்டணிதான் சிறந்தது

சந்தன மரங்கள், உவர் நிலங்களைத் தவிர, மற்ற அனைத்துப் பகுதியிலும் வளரும். வேப்பமரம் எங்கெல்லாம் நன்றாக வளருமோ அங்கு சந்தனமும் சிறப்பாக வளரும். இதைச் சொல்லும்போது இப்போது ஊர் பூராவும்தான் வேப்ப மரங்கள் இருக்கின்றன. ஆனால், சந்தன மரங்கள் அப்படி இல்லையே..! மலை மற்றும் மலை சார்ந்த இடங்களில் மட்டும்தானே இருக்கிறது. பிறகெப்படி அதை வளர்க்க முடியும்? என்றொரு கேள்வி உங்களுக்கு எழக்கூடும்.

ஒரு காலத்தில் தனியார் நிலங்களில் இருக்கும் சந்தன மரங்கள்கூட அரசாங்கச் சொத்தாகத்தான் இருந்தன. அதன் காரணமாகவே சந்தன மர வளர்ப்பு என்பது பொதுமக்களிடம் அவ்வளவாக பரவாமல் இருந்தது. ஆனால், 2008-ம் ஆண்டு இந்தச் சட்டத்தை தளர்த்தி, தற்போது தனியார் நிலங்களில் சந்தன மரங்களை வளர்க்கும் வகையில் ‘தனியார் நிலங்களில் சந்தன மரங்கள் சட்டம்-2008’ என்பது நடைமுறைக்கு வந்துவிட்டது. இதன்படி அனைவரும் சந்தன மரங்களை வளர்க்கலாம் என்ற நிலை இப்போதுதான் உருவாகியுள்ளது. இனிமேல்தான், எல்லா இடங்களிலும் அது பரவ ஆரம்பிக்க வேண்டும்.

கன்று வளர்ப்பு

மரக்கன்றுகளை பாலிதீன் பைகளில் வளர்த்து நடவு செய்வதுதான் நல்லது. சந்தனம் தனியாக வளராது, என்பதால் உதவிக் கன்றுகளையும் இணைத்தே நட வேண்டும். வேம்பு, சவுக்கு, சவுண்டல், அகத்தி போன்ற கன்றுகளை இதனுடன் இணைத்து நடலாம். இந்த உதவிச் செடிகளின் வேர்களுடன் சேர்ந்து சந்தன மர வேர்களும் சத்துக்களை உறிஞ்சி வளரும்.

சந்தன மரக்கன்றுகளோடு உதவிக்கன்றுகளையும் சேர்த்து 10% பாஸ்போ-பாக்டீரியாக் கரைசலில் நனைத்து, பாலிதீன் பைகளில் வைத்து வளர்க்க வேண்டும். மாதம் இருமுறை தலா 5 கிராம் வேப்பம் பிண்ணாக்கு மற்றும் கடலைப் பிண்ணாக்கை முதல் மூன்று மாதம் வரை இட வேண்டும். சந்தனச் செடியின் உயரத்தைவிட உதவிச்-செடியின் உயரம் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை இப்படி வளர்ந்த பின்பு, நிலத்தில் நடவு செய்யலாம்.

நன்றாக உழவு செய்த நிலத்தில் 15 அடிக்கு 15 இடைவெளியில் இரண்டு அடி நீள, ஆழ, அகலத்தில் குழியெடுத்து நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்தால், ஏக்கருக்கு 200 கன்றுகள் வரை தேவைப்படும். ஒவ்வொரு குழியிலும் 500 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றை தலா 25 கிராம் போட்டு நட வேண்டும். கன்றுகளுக்கு வாரம் ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். நடவுக்குப் பிறகு, பாசனமும் பாதுகாப்பும் மட்டுமே சந்தனத்துக்கான பராமரிப்பு.

மரத்துக்கு 10 கிலோ மகசூல்

சந்தன மரத்தைப் பொறுத்தவரை மற்ற மரங்களைப்போல மொத்த மரத்தையும் கணக்கிட முடியாது. மரத்தின் வைரம் பாய்ந்த பகுதியின் எடைதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதைத் துல்லியமாக சொல்ல முடியாது. என்றாலும், நல்ல வளமான சூழலில் வளரும்போது, சராசரியாக ஒரு மரத்தில் இருந்து சுமார் 10 கிலோ சந்தனம் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது, தமிழ்நாடு அரசு வனத்துறையின் விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சந்தனம் 5,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை ஏலம் போகிறது. இந்தக் கணக்கின்படி பார்த்தால் ஒரு மரம் 50 ஆயிரம் வரை விலை போகும். ஒரு ஏக்கரில் உள்ள 200 மரங்களில் இருந்து, ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

அரசுக்கு 20%, விவசாயிக்கு 80%

சந்தனக் கன்று நடவு செய்த இரண்டாம் ஆண்டுக்குள் கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். 25 ஆண்டுகளுக்கு மேல் முதிர்ந்த பின் வனத்துறை மூலமாகத்தான் விற்க முடியும். மரத்தின் உரிமையாளர், அதற்குரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் இருந்து மரங்கள் உள்ள நிலத்துக்கு சொந்தக்காரர் என்ற சான்றிதழ், சிட்டா, அடங்கல், வரைபடம் போன்றவற்றை இணைத்து, மாவட்ட வன அதிகாரியிடம் மனு செய்ய வேண்டும். அது பரிசீலிக்கப்-பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட பகுதியின் வனச்சரகர் மூலமாக அறுவடை செய்து, அருகில் உள்ள வனத்துறை டெப்போவுக்கு கொண்டு செல்வார்கள். அங்கு, கடந்த முறை விற்பனையான விலைக்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்வார்கள். மொத்தத் தொகையில் அறுவடை, போக்குவரத்து, சுத்தப்படுத்துதல் ஆகியவற்றுக்காக பத்து சதவிகிதம், நிர்வாகச் செலவுகளுக்காக பத்து சதவிகிதம் என 20 சதவிகிதத் தொகையைக் கழித்துக் கொள்வார்கள். மீதம் உள்ள 80 சதவிகிதத் தொகை நிகர விற்பனை விலையாக கிடைக்கும். இந்தப் பணத்தை அறுவடை செய்ததில் இருந்து 30 நாட்களுக்குள் 20 சதவிகிதமும், மீதித்தொகையை 90 நாட்களுக்குள்ளும் கொடுப்பார்கள்.

சந்தன மரம் சாகுபடி செய்வதில் நல்ல வருமானம் இருக்கும். அதே நேரத்தில் இதன் பாதுகாப்பு மிகவும் முக்கியம். முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை-உள்ளவர்கள் தாராளமாக சந்தனத்தை நடலாம்.

மேற்கொண்டும் சந்தேகமா? சந்தனத்தை 40 ஏக்கரில் சாகுபடி செய்துள்ள பல்லடம், முத்தாண்டிபாளையத்தைச் சேர்ந்த துரைசாமி சொல்வதைக் கேட்டுவிட்டு, அதன்பிறகு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

வருமானம் 1,50,00,000!

“நடவு செஞ்சு ஆறு வருசமாச்சு. 12 அடி இடைவெளியில ஏக்கருக்கு 350 செடிக வரைக்கும் நட்டிருக்கேன். இப்ப என்கிட்ட கிட்டத்தட்ட 12 ஆயிரம் மரத்துக்கும் மேல இருக்குது. சந்தனத்தைப் பொறுத்தவரைக்கும் வாரம் ஒரு தண்ணி கொடுக்கணும். முதல் மூணு வருசம் கவாத்து அடிக்கணும். மத்தபடி எந்தப் பராமரிப்பும் தேவையில்ல. ஆனால், பராமரிக்குறதுதான் பெரிய வேலையே! ரெண்டு வேலி போட்டு பாதுகாத்துட்டு வர்றேன். ஒரு மரத்துக்கு அதிகபட்சமா 50 கிலோ வரைக்கும் ‘சேகு’ (வைரம் பாய்ந்த பகுதி) கிடைக்கும்னு சொல்றாங்க. குறைந்தபட்சம்

10 கிலோ கிடைச்சாலும், நல்ல மகசூல்தான். இன்னிக்கு நிலவரப்படி ஒரு கிலோ சேகு 5 ஆயிரத்துக்கு ஏலம் போகுது. அந்த கணக்குப்படி பாத்தால் என்னைப் பொறுத்தவரை ஏக்கருக்கு ஒன்றரைக் கோடிக்கு மேல கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்.

சந்தன மரம் வளர்க்கற விவசாயிகளுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள், துப்பாக்கி வெச்சுக்க அனுமதி இதையெல்லாம அரசாங்கம் செய்து கொடுக்கணும். அப்பத்தான் நிறைய பேர் சந்தன மரம் வளர்க்க ஆர்வமா முன்வருவாங்க.’’

Source: Facebook

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline