யாருக்குப் பரிசு?

யாருக்குப் பரிசு?

மன அழுத்தம் அதிகம் உள்ள பெரிய அதிகாரிகளுக்கு மகிழ்வுடன் வாழ பயிற்சி முகாம் ஒன்றினைப் பேராசிரியர் ஒருவர் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது பயிற்சியில் கலந்து கொண்ட நாற்பது பேருக்கும் ஒரு ஊதிய பலூனும் ஒரு ஊசியும் கொடுத்துவிட்டு சொன்னார்,”இப்போது ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.இப்போது உங்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பலூனும் ஊசியும் உள்ளது.இருபது நிமிடம் கழித்து யார் கையில் பலூன் உடையாமல் இருக்கிறதோ,அவர்களுக்கு ஒரு பரிசு உண்டு,”அடுத்த நொடியே அனைவரும் குதூகலத்துடன் தங்கள் பலூனை ஒரு கையில் உயரப் பிடித்துக் கொண்டு அடுத்த கையில் ஊசியை வைத்து அடுத்தவர் பலூன்களை உடைக்க முயற்சித்தனர்.

சிறுவர்களைப் போல அவர்கள் ஓடியும்,தாவியும்,நாற்காலிகளின் மேல் ஏறியும் இந்தப் போட்டியைத் தொடர்ந்தனர்.இருபது நிமிடம் ஆயிற்று.அப்போது ஒரே ஒருவரின் பலூன் மட்டும் உடையாதிருந்தது. அவர் குழந்தையைப்போல ஆர்ப்பரித்தார்.

பேராசிரியர் எல்லோரிடமும் கேட்டார்,”பலூன் உடையாது வைத்திருக்கும் இவரை வெற்றியாளராக அறிவித்துப் பரிசினைக் கொடுத்து விடலாமா?”என்று கேட்டார்.

எல்லோரும் சம்மதம் தெரிவித்தனர்.அப்போது அவர்,”பரிசு கொடுக்குமுன் ஒரு கேள்வி. நான் முதலில் என்ன சொன்னேன்?பலூன் உடையாமல் வைத்திருப்பவருக்கு பரிசு என்று தானே சொன்னேன்?ஒவ்வொருவரும் அடுத்தவர் பலூன்களைப் பார்க்காமல்,தன பலூனை மட்டும் உடையாமல் பாதுகாத்திருந்தால் இப்போது அனைவருக்கும் பரிசு கிடைத்திருக்குமே!”என்று சொன்னவுடன் ஒவ்வொருவருக்கும் சிறு குற்றம் செய்த உணர்வு ஏற்பட்டது.பேராசிரியர் தொடர்ந்தார், ”இப்படித்தான் வாழ்விலும்,நாம் நம்மிடம் உள்ளதைக் கவனித்து முறைப்படி வாழ்ந்தாலே நாம் அனைவரும் மகிழ்வுடன் இருக்கலாம்.ஆனால் நாம் அடுத்தவர்களையே கவனித்து அவர்களுடன் நம்மை ஒப்பிட்டு,அவர்களை அழிக்க,ஒடுக்க முயற்சித்து நம் மகிழ்ச்சியைக் காணாமல் போக்கி விடுகிறோம்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.