மொபைலை சுத்தமா வச்சிருக்கணும், முறையா பயன்படுத்தணும்… இல்லேன்னா

ன்னதான் நம் மக்கள் நாகரீக உலகில் வாழ்ந்தாலும் சில விஷயங்கள் மட்டும் எப்போதுமே மாறாமல் அப்படியே இருக்கும். அதை மக்களும் விட்டுவிடாமல் கெட்டியாக பிடித்துக் கொள்வார்கள்.

அதிலும் மொபைல் என்ற ஒன்று வந்தவுடன் மக்கள் அதை பயன்படுத்தும் முறைகளைப் பார்க்கும் போது நம்மில் பல பேர்களுக்கு சந்தோஷம் வருவதை விட கோபம்தான் அதிகமாக வரும்.

சிலர் மொபைல்போனின் ரிங்டோன் அளவை அதிகமாக வைத்திருப்பார்கள் , இன்னும் சிலபேர் பக்கத்தில், மற்றவர்கள் இருக்கிறார்களே என்ற இங்கிதம் கொஞ்சமும் இல்லாமல் சத்தமாக பேசுவார்கள். இதனால் பக்கத்தில் இருப்பவர்கள் முகம் சுளிப்பார்கள், அதிலும் சிலபேர் ஒருபடி மேலேபோய் கத்தி பேசுபவரிடம் சண்டை கூட போடுவார்கள்.

இங்கே நாம் மொபைலை எப்படி சிறந்த முறையில் பயன்படுத்தலாம் என்பது பற்றிய சில குறிப்புகளை உங்களுக்கு தருகிறோம்.

+ மொபைல் பயன்படுத்துவதில் மிக முக்கியமான ஒரு விஷயம் அதன் ரிங்டோன் அளவுதான். நம்மில் பலபேர் அதிக சத்தத்துடன் தான் ரிங்டோன் ஒலியின் அளவை மொபைலில் வைத்திருப்பார்கள் அது மிகவும் தவறு. அதிலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற தரமற்ற மொபைல்களில் இதுபோல அதிக சத்தம் வரக்கூடிய ஸ்பீக்கர் உள்ளது.

உங்கள் மொபைல் ரிங்டோன் சத்தம் உங்களுக்கு மட்டும் கேட்பது போல குறைந்த அளவில் வைத்துக் கொள்ளுங்கள். “அங்க பாருங்க ஒரு ஊரே மஞ்சக்கொடியோட ஆராவாரமா வர்றத”ன்னு சொல்ற மாதிரி உங்கள் ரிங்டோன் ஒரு ஊரையே கூப்பிட வேண்டாம்.

+ தேவை என்றால் மட்டுமே உங்கள் மொபைலின் லவுட் ஸ்பீக்கரை ஆன் செய்யுங்கள். தேவை இல்லை என்றால் கண்டிப்பாக வேண்டாம். ஏனென்றால் அது உங்களுக்கும் இடைஞ்சல், உங்களைச் சுத்தி இருப்பவர்களுக்கும் இம்சை தான்.

+ நம்மில் நெறைய பேருக்கு அடுத்தவர்கள் மொபைல் என்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரிதான். அவர்கள் ஏதாவது விலை உயர்ந்த மொபைல் வைத்திருந்தால் உடனே அதை வாங்கி அதை நோண்டி நொங்கெடுப்பதில் அலாதி ஆர்வம். இது மிகவும் தவறு. ஒருவேளை நீங்கள் அதை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது ஏதாவது தொழில்நுட்பக் கோளாறு ஆகி விட்டால் அதனால் ஏற்படுகின்ற மனக்கசப்பும், செலவும் உங்களுக்குத் தான். அதனால் முடிந்தவரை அடுத்தவர்கள் மொபைலை வாங்கி பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

+ ஒருவேளை நீங்கள் அடுத்தவர்களுடைய மொபைலை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தால் அவர் அனுமதி இல்லாமல் மொபைலை பரிசோதிக்கக் கூடாது. குறிப்பாக அதில் இருக்கின்ற CONTACTS, GALLERY, VIDEOS போன்றவற்றை பார்ப்பது மிகவும் தவறான செயலாகும்.

+ உங்களில் நிறைய பேர்கள் ஒருவர் மற்றவர்களுக்கு தெரியாமல் கான்பரன்ஸ் (CONFARENCE CALLING ) காலிங் செய்து பேசுவார்கள். இதுவும் அடிப்படையில் தவறானதுதான். இதை முறைப்படி மற்றவர்கள் எல்லோருக்கும் தெரிவித்து விட்டு பேசுவது தான் உங்களுக்கும் நல்லது, எதிர்முனையில் இருப்பவர்களுக்கும் நல்லது.

+ மொபைலின் திரையில் ஸ்க்ரீன் சேவர் வைப்பதிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதில் எந்த மாதிரியான படங்களை வைக்க வேண்டும், எந்த மாதிரியான படங்களை வைத்திருக்கக் கூடாது என்பது மிக முக்கியம்.

நடிகர், நடிகைகள், சாமியார்கள் போன்றோர்களின் படங்களை வைத்து நீங்கள் இப்படித்தான் என மற்றவர்கள் நினைக்கும்படி வைக்க வேண்டாம். ஏனென்றால் நீங்கள் உங்கள் மொபைல் ஸ்கிரீனில் வைத்திருக்கும் படமே உங்களைப் பற்றிய எண்ணங்களை மற்றவர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக ஆகிவிடும். அது நல்ல விதமாக இருந்து விட்டால் ஓ.கே தான். ஆனால் தவறான எண்ணத்தை உருவாக்கி விட்டால்..?

+ அலுவலகத்துக்கு லீவு போடுவது, யாராவது இறந்து விட்டால் அதை தெரிவிப்பது, விபத்து போன்ற சில சீரியஸான விஷயங்களை எஸ் எம் எஸ் மூலமாக அனுப்ப வேண்டாம். கால் பண்ணி பேசி விடுங்கள் அதுதான் நல்லது. ஏனென்றால் இப்போதெல்லாம் எப்போது எஸ்.எம்.எஸ் சேவைக்கு தடை விதிப்பார்கள்? எப்போது அதை மீண்டும் தருவார்கள் என்பதையே நம்மால் சரியாக கணிக்க முடியவில்லை. அதிலும் சிலபேர் எஸ்.எம்.எஸை கூட பார்ப்பதில்லை.

+ சில பேர் மொபைலை எடுத்தால் ரெண்டு வரி தகவலைச் சொல்ல “வள வள” என்று பேசித் தள்ளுவார்கள். இதுவும் மிகவும் தவறான செயல். அதற்குப் பதில்,  ஒருவருக்கு போன் செய்வதற்கு முன்பே நாம் பேச வேண்டிய விஷயத்தை தெளிவாக சுருக்கமாக, செய்தியின் முக்கியத்துவத்தை தெரிந்து வைத்துக் கொண்டு பேச வேண்டும். அவ்வாறு பேசும்போது நமது பணமும் விரயமாகாமல் இருக்கும்.

+ தேவையான விஷயத்தை  மட்டுமே பேச வேண்டும். தேவையில்லாத அரட்டையை குறைத்துக் கொள்வது ரொம்பவும் நல்லது.

+ ஒருவருக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை தொடர்பு கொண்டும் அவர் மொபைலை எடுக்கவில்லை என்றால் மீண்டும் மீண்டும் அவரை தொடர்பு கொள்ள வேண்டாம். அவர் ஏதாவது முக்கியமான மீட்டிங் அல்லது இடத்தில் இருக்கிறார் என்று நீங்களாகவே அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் நம்மில் பல பேர்  ஒருவர் ஒரு முறை மொபைலை எடுக்கவில்லை என்றால் மீண்டும் மீண்டும் அவரை தொடர்பு கொண்டே இருப்பார்கள். இது ஒரு கெட்ட பழக்கம்.

+ அதேபோல் மொபைலில் பேசும் போது பக்கத்தில் டிவியை ஆன் செய்து சத்தமாக வைத்திருப்பது, அல்லது ரேடியோவை சத்தமாக வைத்திருப்பது போன்ற செயல்களை அறவே தவிருங்கள். இது எதிர்த்தரப்பில் பேசுபவருக்கு தொந்தரவை குறைக்கும்.

+ வெரி லோ பேலன்ஸ், லோ பேட்டரியில் மொபைலை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதை தவிருங்கள். இதனால் சில முக்கிய கால்கள் பேச முடியாமல் போக நேரிடும். அல்லது உங்களுக்கு வரும் வரும் முக்கியமான அழைப்புகளை நீங்கள் இழக்க நேரிடும். இது தவிர்க்க முடியாது என்றால் ஆபரேட்டர் தரும் மிஸ்டு கால் அலெர்ட் சேவையை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் மொபைலுக்கு உள்வரும் முக்கியமான அழைப்புகளை நீங்கள் தவற விடாமல் இருக்கலாம்.

+ என்னதான் உங்கள் மொபைலின் பில்லை உங்கள் அலுவலகம் கட்டினாலும் வரைமுறை தாண்டாமல் அளவோடு பயன்படுத்துங்கள். அப்படிப் பயன்படுத்தும் போது உங்களைப் பற்றி அலுவலகத்தில் ஒரு நல்ல இமேஜ் உருவாவது மட்டுமில்லாமல் அந்த இலவச சேவை தொடர்ந்தும் கிடைக்கும்.

+ ஒருவருக்கு மிஸ்டு கால் கொடுப்பது என்பது மிகவும் மலிவான செயல். ஆனால் இன்று மொபைல் பயன்படுத்துபவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதத்தினர் மிஸ்டு கால் கொடுப்பதைத் தான் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

+ தேவைப்பட்டால் தவிர இன்கமிங் கால்களை ரெகார்ட் ( CALL RECORD ) செய்வது சரியான செயல் இல்லை. பல நாடுகளில் எதிர் முனையில் பேசுபவர்களின் பேச்சை அவருக்கு தெரியாமல் ரெகார்ட் செய்வது சட்டப்படி குற்றமாக உள்ளது. ஆகவே இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

+ ஏதாவது மீட்டிங் அல்லது மருத்துவமனையில் இருந்தால் உங்கள் மொபைலை சைலண்ட் மோடில் வைத்திருங்கள். இதனால் மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லை.

கழிவறையை விட அசுத்தமானது…

+கழிவறையை விட மிக அசுத்தமான ஒன்றாக நீங்கள் உபயோகப்படுத்தும் செல்போன் உள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பல நபர்களால் பல சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும் செல்போன்களை யாருமே எப்போதும் சுத்தப்படுத்துவதில்லை. இதனால் ஏராளமான கிருமிகள் சேர்கின்றன.ய

வயிற்று வலி, வயிற்று உபாதை, தொற்றுநோய் பரவல், அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்பட கழிவறையை விட செல்போன்களே மிக அதிக அளவில் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

ஏராளமான கிருமிகளைக் கொண்டிருக்கும் செல்போன் எப்போதும் நமது கையிலும், வாய்க்கு அருகேவும் இருப்பதால் பல நோய் உபாதைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்று அரிசோனா பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. எனவே மொபைல் போனை முடிந்தவரை சுத்தமாக வைத்திருக்கவும்.

இப்படி அடிப்படையான சில விஷயங்களை நாம் எப்போதுமே மொபைலை பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டும்!

 

envazhi

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.