முருங்கை + மல்லிகை + வெண்தேக்கு
மணக்கிறது மகா கூட்டணி…
ஒரே பயிரை நம்பி உழுதால்.. உலை வைக்க முடியாது… இது கிராமத்தில் இன்றைக்கும் வழக்கில் இருக்கும் சொலவடை அந்தளவிற்கு ஊடுபயிர் விவசாயம் நம் முன்னோர்களுக்குள் ஊறிப்போன ஒன்று. பசுமைப் புரட்சி என்ற மாயையால் காணாமல் போனது, இந்த கலப்புப் பயிர் விவசாயம். ஆனாலும், வழக்கத்தை விடாத விவசாயிகள் சிலர், இன்றும் ஊடுபயிர் சாகுபடியை விடாமல் செய்து வருகிறார்கள். இந்த ராஜேந்திரனைப் போல.தேனி அருகே உள்ள கண்டமனூர் கிராமத்தைச் சேர்ந்தவரான ராஜேந்திரன், கொஞ்சமாகக் கிடைக்கும் கிணற்று நீரை வைத்தே மல்லிகைப் பூ விவசாயத்தை முதலில் துவங்கி, பிறகு படிப்படியாக முருங்கை, வெண்தேக்கு என அதற்குள்ளேயே நடவு செய்து, நல்ல வருமானம் பார்த்து வருகிறார்.
தோட்டத்தில் தனது செல்ல நாய்களை மட்டும் துணைக்கு வைத்துக் கொண்டு தனி ஆளாக, முருங்கைக்கு இடையில் களை எடுத்துக் கொண்டிருந்த ராஜேந்திரனை சந்தித்தபோது, உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
இந்த இரண்டரை ஏக்கர்தான் என்னுடைய பூர்வீகச் சொத்து, கண்டமனூருக்குத் அருகில் வைகை ஓடினாலும், மழைக் காலத்தில்கூட கிணற்றில் கொஞ்சமாகத்தான் தண்ணீர் ஊறும். அதில் அரைக்குழிக்குத்தான் (30 சென்ட் நிலம்) பாயும்… அந்தளவிற்குத் தண்ணீர்க்குத் தட்டுப்பாடான பகுதி. கிணற்றை உற்று உற்றுப் பார்த்துகொண்டே.. பெய்யும் மழையை வைத்து கம்பு, பருத்தி என்று போட்டுக் கொண்டிருந்தேன். இருக்கும் தண்ணீரை வைத்து அரைக்குழியில் 300 மல்லிகை நாற்றை நட்டேன். நானும் என் மனைவியுமாகத்தான் எல்லா வேலையையும் செய்வோம். பூச்செடிக்கு இடையில் 10 அடி இடைவெளி விட்டிருந்தேன்.
அதில், ஆறு வருடத்திற்கு முன் 300 முருங்கையை நட்டேன். அது காய்ப்பிற்கு வந்த சமயத்தில் நல்ல விலை கிடைத்தது. அதனால், அதில் 350 போத்து வெட்டி, மீதி இருந்த இரண்டு ஏக்கரிலும் நட்டு விட்டுட்டேன். அந்த நேரம் நல்ல மழையும் கிடைத்ததால், நல்ல காய்ப்ப, ஒரே வருடத்தில் இரண்டே கால் லட்ச ரூபாய் அளவிற்கு காய் ஓடித்தோம். கூலிக்கு ஆள் கூப்பிடாமல், நாங்களாகவே எல்லா வேலையையும் பார்த்ததால் பணமும் மீதமானது. அதில்தான் இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடித்து வைத்தேன்.
அடுத்த வருடமும் முருங்கையில் நல்ல காய்ப்பு. அதற்கேற்ற மாதிரி விலையும் கிடைத்தது. அதை, எனக்கு யோகம் என்று தான் சொல்ல வேண்டும். அதில் கிடைத்த பணத்தை வைத்து. ஆயிரம் அடிக்கு போர் போட்டதில் தண்ணீர் கிடைத்தது. இப்போது போர் தண்ணீரை கிணற்றில் விட்டு, பயிருக்கு பாய்ச்சுகிறேன். அந்த சமயத்தில் ஃபாரஸ்ட் ரேஞ்சர் கூடல்சாமி என்னிடம், அரசாங்கத்தில் இலவசமாக மரக்கன்னும், வளர்ப்பதற்கு பணமும் தர்றாங்க என்று சொன்னார். அதனுடன் தோட்டத்திற்கு வந்து பார்த்துவிட்டு, முருங்கைக்கும் மல்லிக்கும் இடையிலேயே அழகா வெண்தேக்கு (குமிழ்) மரத்தை நடலாம். முருங்கைக்கு கொடுக்கும் உரம், தண்ணீரே போதும். தனியாக இதற்கு என்று எதையும் செலவழிக்க வேண்டியதில்லை. 18 வருடத்தில் புதையல் எடுத்த மாதிரி பணம் கிடைக்கும் என்று ஆலோசனையும் சொன்னார்.
16 அடிக்கு ஒரு மரம் என்று கணக்குப்போட்டு, இருந்த இடைவெளியில் 800 வெண்தேக்குக் கன்றுகளை வைத்துவிட்டேன். நடவுச் செலவிற்கு 2 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்து, கன்னுகளையும் கொடுத்தாங்க. ஒரு வருடம் கழித்து, கன்னுகள் நன்றாக வளர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, மறுபடியும் 1,500 ரூபாய் கொடுத்தாங்க. நான்கு வருடத்தில் மரம் ஒவ்வொன்றும் தொடை அளவிற்க்கு பெருத்திருக்கிறது என்றார்.
முருங்கைக்கு ரசாயன உரம் கொடுத்து கட்டுபடியாகவில்லை. அதனால் இப்போது தொழுவுரத்தையும், கடைகளில் கிடைக்கும் இயற்கை உரத்தையும்தான் கொடுக்கிறேன். ஆனால், ரசாயனப் பூச்சிக்கொல்லி அடித்தால்தான் முருங்கையில் புழுவை ஒழிக்க முடிகிறது. இப்படி முப்பதாயிரம் ரூபாய் அளவிற்கு செலவு போக, முருங்கையில் வருடத்திற்கு மூன்று லட்சம் லாபமாக கைக்கு கிடைக்கிறது. மல்லி மூலமாக வருடத்திற்கு நாப்பதாயிரம் ரூபாய் கிடைக்கிறது.
இப்போது, கட்டாப்புல (வேலி) இருந்த வேலிக்கருவேலைப் பிடுங்கிவிட்டு அதில் செவ்வரளியை வைத்திருக்கிறேன். அதிலும் கைசெலவிற்கு ஆகும் மாதிரி வருமானம் கிடைக்கிறது. தண்ணீரும் கிடைத்து, சளைக்காமல் பாடுபடுவதற்கும் மனிதன் துணிந்தால் விளையாத பூமியும் விளையுமைய்யா. சம்சாரி கணக்க பார்த்தால் சாட்டைக்குச்சிகூட மிஞ்சாது என்று சொல்வாங்க. அது ஏதோ ஒரு கெட்ட நேரத்தில் சொன்னதாக இருக்கும். இதையே வருடம் முழுவதும் சொல்லிக்கொண்டு இருப்பது நியாயம் கிடையாது என்று தெம்பாகச் சொன்னார் ராஜேந்திரன்.
இஞ்சி – பூண்டு கரைசல்!
முருங்கையில் வரும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை, இயற்கை வழியிலேயே தடுக்கலாம்.. என்று சொல்லும் சின்னதாராபுரம் மணி, தன்னுடைய அனுபவத்திலிருந்து இதற்குச் சொல்லும் வைத்தியம்.
இஞ்சி, பூண்டு, புகையிலைத்தூள் ஆகிய மூன்றையும் தலா 500 கிராம் அளவிற்கு எடுத்து, அரைத்து மண்பானையில் போட்டு. அவை மூழ்கும் அளவிற்கு மாட்டின் சிறுநீர் ஊற்றி, இரண்டு நாட்கள் அப்படியே ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு, 300 மில்லி என்கிற அளவில் இதைக் கலந்து தெளித்தால்… பூச்சி, நோய் எட்டிக்கூட பார்க்காது.
தொடர்புக்கு
ராஜேந்திரன், செல்போன் : 97151 – 30253
மணி, செல்போன் : 94436 -22812 .