மின்னுவது எல்லாம் பொன் அல்ல..!!

மின்னுவது எல்லாம் பொன் அல்ல..!!

சென்ற மார்ச் மாதம் நடவு செய்த
இந்த செவ்வாழைக்கு இப்போது வயது
நூற்று இருபது நாட்கள்..

நடவு செய்த முப்பாதாவது நாள் மினி டிராக்டரில் உழுது கொழுஞ்சி
விதைத்தேன்.

 

1 2 3 6 7

இந்த முறை பலதானியம்
விதைக்கவில்லை காரணம்,
சித்திரையில் பலதானியம் விதைத்தால் வைகாசி அதாவது விதைத்த
நாற்பதாவது நாளில் அக்னிநட்சித்திர வெயிலில்தான் அதை மடக்கி
உழவேண்டும்.

அப்படி செய்தால் வாழையை சூடு தாக்கிவிடும் என்பதால் விதைக்க
வில்லை..

கொழுஞ்சி அப்படி அல்ல..
விதைத்து தொன்னூறு நாட்கள் வரை
விட்டு மடக்கி உழலாம்..

அதனால் கொழிஞ்சி விதைத்தேன்,

ஆனால் கொழிஞ்சிவிதை
முளைப்புத்திறன் குறைந்து இருந்ததால் அங்கொன்றும் இங்கொன்றுமாக
முளைத்து இருந்தது..

அதேபோல இயற்கையும் மாறி,
அக்னி வெயில் என்பது ஒருநாள் கூட இல்லாமல் அத்தனைநாளும் மழை பொழிவதும், வானம் மப்பும்
மந்தாரமாகவே இருந்தது.

இதனால் இந்த வாழைக்காட்டில் இடம் இல்லாமல் சாரனை களைச்செடிகளாகவே
முளைத்து இருந்தது..

சாரனை முற்றி விதையும் இந்த மண்ணில் பரவி இருந்தது,
வழக்கம் போல வாழைகாட்டை
பார்த்தவர்கள் என்னை புகழ ஆரம்பித்து விட்டனர்..!!
“காடு முழுவதும் சாரனை விதையை இயற்கை விவசாயம் செய்கிறேன் என்ற பெயரில் பரப்பி விட்டான்,
இனி இந்த விதையை அழிக்க களைக்கொல்லியை பயன்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை ” என்று..

நானும் “செவிடன் காதில் ஊதிய சங்கு ”
போல காதில் வாங்காமல் சென்று
விட்டேன்..!
மறுபடியும் பலதானியம் விதைக்கலாம்
என்று யோசித்து இனி எதுவும் விதைக்க வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டேன்..

சாரனை முற்றி அழுகும் தறுவாயில் இருந்தது..

மீண்டும் வானம் மிரட்டிக்கொண்டே இருந்தது..

வாழையும் ஒரு அடியே வளர்ந்து
இருந்தது..

டிராக்டரை வரவழைத்து உழுது மட்டும் விட்டுவிட்டேன் எதையும் விதைக்காமல்..

பலதானியம் விதைக்காமல் இருந்தற்கு இன்னும் ஒரு காரணமும் இருந்தது..

மீண்டும் விதையாக விழுந்த சாரனை முளைக்குமா, முளைக்காதா என்று
சோதனை செய்துவிடுலாம் என்று..

என்ன ஆச்சரியம் ..!

சாரனை இருந்த இடத்தில் அத்தனையும்
“வேல பூடு ” ஆகவே முளைத்து இருந்தது..

அப்போ சாரனை விதை என்ன ஆயிற்று?

இங்குதான் இயற்கை நம் பக்கம்
இருக்கிறது என்பதை உணர முடிந்தது..

நம் மண்ணில் என்ன சத்துக்கள் குறைவாக இருக்கிறதோ அதற்கு ஏற்ப மண்ணில் களைசெடிகள் தானாகவே முளைத்துவந்து நம் பயிருக்கு தேவையான சத்துக்களை
அந்த களைச்செடிகள் மூலமாக கொடுத்து விடுகிறது..

அந்த சித்திரை வைகாசியில் சாரனை மூலமாக இந்த வாழைக்கு கிடைத்து சத்துக்கள் போதும் என்பதால் அந்த
விதைகள் மீண்டும் முளைக்கவில்லை..

மாறாக இப்போது புதிதாக “வேலபூடு ” முளைத்து உள்ளது..

சரி இந்த வேல பூடுலிலும் செவ்வாழைக்கு தேவையான சத்துக்களை அறுவடை செய்வேண்டும் என்பதால் அதையும் சோதித்து பார்த்து விடலாம் என்று
அப்படியே விட்டுவிட்டேன்..

வாழைக்கு பக்கத்தில் தேவையில்லாத பால்கொடியையும், பார்த்தீனிய செடியை மட்டும் களை எடுத்துக்கொண்டு உள்ளேன்…

இப்போது வாழை மூன்று அடி வளர்ந்து விட்டதால் இந்த களைகள் ஒன்றும் பாதிக்க போவதில்லை..

வாழையும் ஆரோக்கியமாகத்தான் உள்ளது..

இந்த “வேல பூடு ” மருத்துவகுணம்
வாய்ந்தது என்று நான் கேள்விபட்டேன்..

தினந்தோறும் காலை வேளையில் இந்த வேல தழையுடன் கருவேப்பிலை
சேர்த்து சூப் வைத்து குடித்தால் உடல்
சூடு தனியும் என்று..

களைக்கொல்லி பயன்படுத்துபவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்றால்,

களைக்கொல்லிகாரர்களின் காடு, மேடு, வரப்பு, வாய்க்ககால் எல்லாம்
பொன்நகையை போல் மின்னும்,
ஆனால் அது பொன்நகை அல்ல.!!

நமது வரப்பு வாய்க்கால் எல்லாம்
அதைபோல மின்னவில்லை
என்றாலும்
கீழாநெல்லி, வேல பூடு, கள்ளிபூடு,
அம்மன் பச்சரிசி, பூலைபூ, மனத்தக்காளி,குப்பைமேனி
போன்ற மருத்துவகுணம் வாய்ந்த செடிகளும் வளர்ந்து நம் பயிரையும், நம்மையும் அரண் போல காக்கிறது..

இயற்கை விவசாயத்தில் அழிந்ததை மீட்டு கொண்டுவந்ததும் ஒரு வெற்றிதானு ங்க..!

 

Source : திருமூர்த்தி .சத்தியமங்கலம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline