பலி கொடுத்தால் விசேஷம்

 

10730933_795608863865768_1085044773504539158_n

“தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்து ஆடு கோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச் சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே.”
-ஆசான் சிவவாக்கியார்-

துறவி உணர்த்திய உண்மை :

சீன கிராமத்தில் ஒரு பண்டிகை வந்தது . அந்த கிராமத்தில் வசிக்கும் ஒரு குயவன் பண்டிகைக்காக பொருட்கள் வாங்க சந்தைக்கு சென்றான் . அப்போது ஒரு ஆட்டையும் வாங்கி வந்து கொண்டு இருந்தான்.வழியில் குயவனை பார்த்த துறவி . எதற்காக இந்த ஆட்டை கொண்டு செல்கிறாய் என்று கேட்டார் . அதற்கு அவன் பண்டிகை வரப்போகிறது. அதற்கு தெய்வத்துக்கு பலி கொடுப்பதற்கு தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்” என்று ஒரு கூயவன் துறவியிடம் சொன்னான்.
“பலியா?” துறவி வியப்புடன் கேட்டார்.

“ஆமாம் சாமி. தெய்வத்துக்கு திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்”
இதைக்கேட்ட துறவி எழுந்தார். அந்த குயவனின் மண் பானையை எடுத்து ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.
குயவன் கோபத்துடன் துறவியைப் பார்த்தான்.
துறவி நிதானமாகக் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.
“என்ன இது?” என்றான் குயவன் கோபமாக.
“உனக்குப் பிடிக்குமே, அப்பா?” என்றார் துறவி.
“என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த பானையை உடைத்து விட்டு அது எனக்கு பிடிக்கும் என்று என்னிடமே நீட்டுகிறீர்கள். கேலியா? கிண்டலா? உங்களுக்கு பித்தா?” என்று ஆத்திரப்பட்டான் குயவன்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன்.” என்று துறவி சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.
“நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?”
“நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்?” என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.
குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

 

Source : Facebook

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline