பறவைகளை போலே…

 

Felix

குழந்தைகளின் உலகம் மிகவும் உன்னதமானது. அதை கெடுப்பதில் முதல் பங்குவகுப்பது அவர்களை பெற்றவர்கள், அடுத்து பள்ளிக்கூடங்கள் இவை இரண்டும் இல்லையென்றால் “வேலை” என்ற ஒன்று இல்லை. மனித இனம் தனக்காக உழைக்க கற்றிருக்கும். வேலை என்பது ஒரு அவமானமான செயல் என்பதை உணர்ந்திருக்கும். (வேறு எந்த உயிரினமும் தன் இனத்தில் மற்றவைகளுக்காக வேலை செய்வதில்லை) குழந்தையாக இருந்து இந்த சித்ரவதைகளில் சுழன்று இன்று ஓரளவு இந்த (so called) வாழ்க்கையிலிருந்து விடுவித்து எனக்குப் பிடித்தமான “இயன்றளவு இருக்கும்” இயற்கையோடு இயந்த “தற்சார்பு” வாழ்க்கையைப் பல சிரமங்களுக்கிடையே மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறேன்.
நண்பர்களாகிய நீங்கள் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த அவசர வாழ்க்கைக்கு எதிர் திசையில் நிதானமாக நடந்து கொண்டே உங்களை தினம் தினம் கவனித்து கொண்டு தான் இருக்கிறேன்.
உங்களுக்கு ஒரு மலர் மலர்வதை இரசிப்பதற்கும், பறவையின் ஒலிகளை கேட்பதற்கும், விலங்குகளின் சேட்டைகளை பார்ப்பதற்கும், மழையில் நனைவதற்கும், வெயிலில் காய்வதற்கும், காய்கனிகளை பறிப்பதற்கும், தானியங்களை அறுப்பதற்கும், சகதியிலும் புழுதியிலும் உருள்வதற்கும் நேரமில்லை என்று சொல்கிறீர்கள். உங்கள் அவசர வாழ்க்கையில் நின்று அதன் எதிர் திசையை நோக்கி பாருங்கள் அதன் அற்புதமும் அவசியமும் புரியும்.
மனித இனம் மட்டுமே தனது ஆறாம் அறிவால் இந்த இயற்கைக்கு எதிராக தீவிரமாக செயல்படுகிறது. மற்ற எந்த உயிரினமும் இயற்கைக்கு உதவியாக இருந்து தன்னை தற்காத்து கொள்கிறது. எனவே இந்த ஆறாம் அறிவு வேண்டாம் என முடிவு செய்து ஒரு பறவையைப் போல வாழ வேண்டும் என பல சிக்கல்களிலிருந்து இன்றுவரை என்னை விடுவித்து கொண்டிருக்கிறேன்.
ஆனால் நான் பறவையாய் இருப்பதால் இந்த மனிதன் என்னை வீழ்த்துவதிலேயே குறியாய் இருக்கிறான். ஒவ்வொரு நொடியும் வீழ்ந்தாலும் பலம் கொண்டு எழுந்து கொண்டே இருக்கிறேன். மனதளவில் எனக்கு ஊக்கம் கொடுக்க ஒருவராலும் முடியாது ஏனென்றால் பெரும்பான்மையான இந்த மனித சமுதாயம் எனக்கு எதிராக தான் இருக்கிறது.
இதையெல்லாம் உங்களிடம் ஏன் சொல்ல வேண்டும்? யாருக்கும் தெரியாமல் நான் எனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே போகலாம். ஆனால் என்னை போல சில பறவைகள் வாழ்ந்துகொண்டும் வீழ்ந்து கொண்டும் இங்கொன்றும் ஆங்கொன்றுமாக இருக்கின்றன. அவை தரும் ஆதரவும், அனுபவமும் என்னை இன்னும் செம்மைப்படுத்தும் என்ற சுயநலம் தான் இவ்வாறு பேச வைக்கிறது. என்னைப் பற்றி தெரிந்து கொண்டு நேரில் பார்க்கவும், அலைபேசில் தொடர்பு கொண்டும் பல நண்பர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் யாராவது இதுபோன்ற வாழ்க்கை முறைக்கு வந்தால் இந்த இயற்கைக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
இன்றுவரை என்மேல் வரும் வியர்வை நாற்றத்தையும் சாணி வாடையை தாங்கி கொண்டு என்மீது எப்போதும் அன்பைப் பொழியும் என் மனைவி, குழந்தை மற்றும் என் கருத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் ஆதரவாக இருந்து என்னை தினமும் செதுக்கிக்கொண்டிருக்கும் எனது நண்பர் “சட்டையணியா சாமியப்பன்” அவருக்கும் பலவிதங்களில் கடமைப்பட்டுள்ளேன்.
கார்ப்பரேட் நரக வாழ்க்கையிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு இரயிலேறி இன்றோடு 2 ஆண்டுகள் முடிந்துள்ளன. பருவ காலங்கள் இனி வரப்போவதில்லை என்றாலும் காலையில் சூரியன் எழுவதையும் மாலையில் மறைவதையும், எப்போவாவது மழை வருவதையும் எதிர்பார்த்து எனது நாட்கள் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

3 Comments

  1. செல்லப்பான்டி 04/06/2014
  2. jayasathyabalajee 02/12/2014
    • Pannaiyar 06/12/2014

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline