புகைப்படத்தில் உள்ளது இன்றைய சில இளைஞர்களுக்கு என்னவென்றே தெரியாது இதுதான் நமது முன்னோர்கள் தோட்டங்களுக்கு தண்ணீர் இறைக்க பயன்படுத்திய “பறி” ஆகும்
இது இரண்டு வகைப்படும் படத்தில் உள்ளது இரும்பு பறி இன்னொரு வகை தோலினால் ஆன பறி இதில் இரும்பு பறி அதிக நாளைக்கு உழைக்கும் தண்ணீர் அதிகம் பிடிக்கும் தோல் பறி ஆனது குறுகிய நாளில் சேதாரம் ஆகி கிழிந்து விடும் தண்ணீர் குறைவாக தான் பிடிக்கும்
இரும்பு பறி வைத்திருக்கும் விவசாயிகள் எருதுகள் பெரியதாக இருக்கும் தோல் பறி வைத்திருக்கும் விவசாயிகள் எருதுகள் சிறியதாக இருந்தாலே போதும்
அந்தக்காலங்களில் தோட்டங்கள் எல்லாம் கிணற்றுப்பாசனம் மூலம் பயிர் செய்யப்பட்டவை. ஆயில் என்ஜின், மின்சாரம் எல்லாம் அப்பொழுது கிடையாது
தண்ணீர் இறைக்க “கவலை”, (சில ஊர்களில் கமலை,ஏற்றம்,ஏத்து என்பார்கள்) உபயோகப்படுத்துவார்கள். ஒரு கிணற்றுக்கு ஒன்று முதல் இரண்டு கவலைகள் இருக்கும். சாதாரணமாக ஒரு கவலைகள்தான் பெரும்பாலான கிணறுகளில் இருக்கும். தண்ணீர் வசதி அதிகம் இருந்தால் நான்கு கவலைகள் கூட இருக்கும்
ஒவ்வொன்றுக்கும் இரண்டு எருதுகள், ஒரு ஆள். இரும்பு பறி அல்லது தோலினால் ஆன “பறி” என்று அழைக்கப்படும் ஒரு விதமான பெரிய பையை, வடக்கயிறு என்று சொல்லப்படும் ஒரு பெரிய கயிறு கட்டி ஏற்று உருளை மூலம் முன்னும் பின்னுமாக எருதுகளை ஓட்டி தண்ணீர் இறைப்பார்கள். ( கிணற்றில் வாளி மூலமாக தண்ணீர் சேந்துகிற மாதிரி)
அந்தப்பறிக்கு ஒரு வால் இருக்கும். அதை வால் கயிறு எனப்படும் ஒரு சிறிய கயிற்றால் கட்டியிருப்பார்கள்.இதுவும் நிலத்து மட்டத்தில் இருந்து அரை அடி உயரத்தில் சிறிய உருளை மூலம் சிறிய வடக்கயிறும் வார் கயிறும் எருதுகளின் நுகத்தடியில் கட்டியிருப்பார்கள். பறி கிணற்றுக்கு மேல் வந்தவுடன் அந்த வால் வழியாக நீர் வாய்க்காலில் விழுவதற்குத் தோதாக வால் கயிற்றை இழுப்பார்கள். தண்ணீர் வால் வழியாக வாய்க்காலில் விழும்.
அந்த கவலை மூலம் நீர் இறைப்பதே, பார்ப்பதற்கு ஒரு வேடிக்கையாக இருக்கும். இதில் மனித உழைப்பிலும் மாட்டின் உழைப்பிலுமே கிணற்று நீர் வெளியே வந்து சேர்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்
ஒரு நாள் முழுவதும் கவலை இறைத்தால் அரை ஏக்கர் நிலம் நீர் பாய்ச்சலாம். பயிர்களுக்கு எப்படியும் எட்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும். ஆக மொத்தம் ஒரு கிணறும் இரண்டு கவலைகளும் இருந்தால் தண்ணீர் வசதி அதிகம் இருக்கும் காலங்களில் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் நிலம் பாசன விவசாயம் செய்யலாம்.
ஆனால் இரண்டு எருதுகளும் திறமைசாலியாக இருக்கவேண்டும்
அப்பொழுது எல்லாம் சிறு தானிய பயிர்களை மட்டுமே சாகுபடி செய்தார்கள் அதுவும் குறுகிய நாளில் வரக்கூடிய கேழ்வரகு, கம்பு, சோளம்,மிளகாய் போன்ற வகைகள்தான் அதிகம் நெல் நடவு செய்யமுடியாது இதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும் தேவையான தண்ணீரை பாய்ச்சமுடியாது
அப்போது கிணறுகளில் நீர் மட்டம் தரை மட்டத்தில் இருந்து கீழே இருபது அடிக்குள் இருந்தது.
ஆனால் இன்று விவசாயிகளுக்கு தண்ணீர் பிரச்சினையினால் ஏத்து கவலை போய் மனக்கவலை வந்து விட்டது
நன்றி :Krishnamurthi AS