நச்சுப்பாம்புகளுக்கு நல்லுணவு எதற்கு?

நச்சுப்பாம்புகளுக்கு நல்லுணவு எதற்கு?

 

Felix_2

(இயற்கை விவசாய ஆர்வலர்கள் இதனை கண்டிப்பாக படிக்க வேண்டாம்.)

இன்று பலர் தங்கள் அடிமைத்தனமான வேலைகளை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்க வேண்டும் என துடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் இயற்கை விவசாயம் தான் செய்வேன் என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதிக்கிறார்கள். ஏனெனில் இது ஸீரோ பட்ஜெட் விவசாயம், இலாபகரமான விவசாயம், நஞ்சில்லாத விவசாயம், வெளி இடு பொருட்கள் இல்லாமல் செலவுகளை குறைத்துக்கொள்ளும் விவசாயம், உழவில்லா விவசாயம், ஒருங்கிணைந்த பண்ணையம் என பல அறிமுகம் இந்த இயற்கை விவசாயத்திற்கு கொடுக்கப்படுகிறது.

ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது. ஒருவர் புதிதாக நிலம் வாங்க வேண்டுமென்றால் அதற்கான செலவு, அதை சீர்செய்ய ஆகும் செலவு, கட்டமைப்பு செலவு, நாட்டுப் பசுவிற்கான செலவு (ஸீரோ பட்ஜெட் விவசாய புரட்சிக்குப் பின் நாட்டுப் பசுக்களின் விலையுயர்வு) என முதலில் ஒரு பெரிய பட்ஜெட்டை செலவு செய்ய வேண்டியுள்ளது. அடுத்து ஏசி ரூமில் இருந்து கொண்டு இணையத்திலும், பத்திரிக்கையிலும் படித்த அறிவால் முன்னோடி விவசாயிகளின் வரவு செலவு அட்டவணையை பார்த்து இலாபத்தின் கனவுகளை மட்டும் சுமந்து விவசாயத்திற்குள் வந்திருப்பவர்கள், வெற்று நிலத்தில் வெளி இடு பொருட்கள் இல்லாமல் என்ன செய்ய முடியும்? அதை கொண்டு வருவதற்கான செலவு என கடுமையான செலவு போராட்டத்திற்குப் பின், பக்கத்து நிலத்திலுள்ள அனுபவ இரசாயன விவசாயிகளின் இலவச அறிவுரைகள், பொருளாதார ரீதீயில் சமூக அந்தஸ்தில் பின்வாங்காமல் இருக்க பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கு அதை செயல்படுத்த விரைவில் வருமான கொழிக்க வேண்டுமே என்ற அவசர நிலை என பல சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது. கனவு மெய்பட வேண்டும் அதுவும் உடனடியாக, அதாவது கம்ப்யூட்டர் அனிமேஷனில் சில விநாடிகளில் விதைபோட்டு, தண்ணீர் விட்டு, செடி வளர்ந்து, பூத்து, காய்ப்பது போல.

சிலர் கூலி ஆட்களை நம்பியும் தம்மிடம் இருக்கும் பணத்தை நம்பியும் ஏமாந்து போகிறார்கள், இனி எப்போதுமே பொய்த்தே போகும் பருவகாலங்களும் என உண்மைநிலை அவர்களுக்கு எல்லாவகையிலும் எதிராக இருக்க, அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாய் இங்கு பெரிய வருமானம் இல்லாமல் மீண்டும் அடிமைகளாய் ஏற்றுமதியாகிறார்கள். இவர்களை பொருத்தவரை வேலையின் ஒரு மாற்றாக தான் இந்த விவசாயத்தைப் பார்க்கிறார்கள். வேலை பார்க்கும்போது அடிமையாய் தங்கள் முதலாளிகள் போடும் ஆணைக்கு ஏற்றவாறு நாடகம் ஆடுகிறோமே என்ற ஒரே மன உளச்சலுக்காக வேலை விட்டுவிட்டு வந்தால், இங்கே இந்த சமூகத்தின் பல திசைகளிலிருந்து வரும் குடைச்சலுக்குப் பலவகையில் மன உளச்சலும் போராட்டமுமே வாழ்க்கையாய் அமையும்போது நிம்மதியின்றி தவிக்கிறார்கள். விவசாயத்தை ஒரு வாழ்க்கைமுறையாக பார்க்க தவறி, தவறான வழிகாட்டுதலால் இயற்கையின் அடிப்படையை மறந்து மீண்டும் வருமானம் என்ற இலக்கை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் சில இயற்கை ஆர்வலர்கள் நாட்டில் புற்றுநோய் கட்டிகளாய் வீக்கம் கண்டு வானுயர்ந்து நிற்கும் (அரசின் கூற்றின்படி இது வளர்ச்சி) இந்த நகரத்து மற்றும் மாநகரத்து மக்களுக்கு நல்ல சத்தான, நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்து விற்று கொடுக்க பல இயற்கை, பசுமை அங்காடிகளை (இங்கே விற்கப்படும் காய்கறி பழங்கள் உண்மையிலேயே இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது தானா அல்லது யூரியா போட்டு விளைவிக்கப்பட்டதா என்ற கேள்வி இருந்தாலும்) திறந்து இந்த நகரத்து மக்களின் உடல் நலத்தைப் பேணும் சேவையை செய்வதாக எண்ணிக்கொண்டு இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்கிறார்கள். நகரத்தில் தானே பணப்புழுக்கமும் அதிகமாக இருக்கிறது, எனவே நன்றாக கல்லாவும் கட்ட முடியும் என நம்புகிறார்கள். அதையும் தாண்டி வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி வேறு நடக்கிறது.

இந்த இயற்கைக்கு எந்த வகையிலும் பயனில்லாமல் அதை மேலும் மேலும் சீரழித்துக்கொண்டிருக்கும் இந்த நகரத்து நவீன மனிதனுக்காக இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்ய நகரத்திலிருந்து தங்கள் வேலைகளை உதறிவிட்டு இயற்கை விவசாயம் செய்ய வந்திருக்கும் இந்த நவீன இயற்கை விவசாயிகளும், இயற்கை விவசாய பயிற்சியாளர்களும், இயற்கை வேளாண் விஞ்ஞானிகளும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

“நகரத்தில் வாழும் நச்சுப்பாம்புகளுக்கு நல்லுணவு எதற்கு?” என் ஆருயிர் நண்பர் அடிக்கடி சொல்லும் இந்த வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது.

(முதலில் நானும் ஒரு காலத்தில் நச்சுபாம்பாக இருந்து நாசப்படுத்தி கொண்டிருந்ததை நினைக்கையில் இந்த வரிகள் என்னை செருப்பால் அடித்ததின் விளைவாக இதை பற்றி எழுத வேண்டியதாக போயிற்று.)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline