தென்னை + சவுக்கு = பாதுகாப்பு

தென்னை + சவுக்கு = பாதுகாப்பு+
கூடுதல் வருவாய்!
ஊடுபயிரில் ஒரு புதுயுக்தி…

savukku_pannaiyar_com

தென்னங்கன்றை நடவு செய்த விவசாயிகள், அது வளர்ந்து வரும் வரை ஆடு, மாடுகளிடமிருந்து கன்றுகளைக் காப்பாற்றுவதற்கு படாதபாடுபட வேண்டியிருக்கும். இவர்களுக்காகவே வருமானத்துடன் கூடிய எளிய வழியை சொல்கிறார் பட்டுக்கோட்டை அருகே உள்ள வெங்கரை கிராமத்தைச் சேர்ந்த தென்னை விவசாயி சுப்ரமணியன்.

‘அது ஒண்ணும் ஏழு மலையக் குடைஞ்சு, நாலு கடலை தாண்டுற வேலையில்ல. தென்னங்கன்னு வைக்கும்போதே இடையில ஊடுபயிரா சவுக்கையும் வெச்சுவிட்டா போதும், வேகமா வளந்து தென்னைக்கு பாதுகாப்பாயிடும். கொட்டுற ஏகப்பட்ட சவுக்கு மிளாரே மண்ணை வளப்படுத்தி, தென்னையை அருமையா வளர்த்தெடுக்கும்… வருமானமும் கிடைக்கும்’’ என்ற முன்னுரையோடு நம்மை தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார் சுப்ரமணியன்.

குளுகுளுவென்றிருந்த அவருடைய ஆறு ஏக்கர் தோப்பில், இரண்டு வயதான தென்னையும் சவுக்கும் செழிப்பாக வளர்ந்து நின்றன. மண்ணே தெரியாத அளவுக்கு உதிர்ந்த சவுக்கு மிளார்கள் மட்கிப்போய், மெத்தை போல காளான்கள் முளைத்திருந்தன. மண்ணின் வளத்தை உணர்த்தும் வகையில் மண்புழுக்கள் தாராளமாக காட்சி அளித்தன. தோட்டத்தில் நடந்து கொண்டே நம்மிடம் பேசினார் சுப்ரமணியன்.

தென்னைக்கு குளிர்ச்சி தரும் சவுக்கு!
‘‘தென்னை, சவுக்கு இரண்டுமே நடவு செஞ்சு ரெண்டு வருஷம்தான் ஆகுது. ஆனா, வளர்ச்சியப் பாருங்க… தென்னையோட மடலே எட்டடிக்கு மேல நீளமா, தடிமனா இருக்கு. இது நெட்டைரகத் தென்னை, ஆறாவது வருஷம்தான் காய்ப்புக்கு வரணும். இப்ப தூர்பிடிச்சு வளந்து நிக்கிறதைப் பாத்தா… அஞ்சு வருஷத்துலேயே காய்ச்சிடும் போல இருக்கு. தென்னையை நடும்போதே சவுக்கையும் நட்டுட்டா, மூணு வருஷத்துல சவுக்கை அறுவடை பண்ணிடலாம். தென்னைக்கு ஆரம்ப காலத்துல தேவையான குளிர்ச்சியை சவுக்கு கொடுத்துடும். முக்கியமா… ஆடு, மாடுக தொந்தரவே இருக்காது.

சவுக்கை நான் பராமரிக்கவேயில்லை. ஒரு ஏக்கர்ல மொத்தம் நாலாயிரம் கன்னுங்க நட்டிருக்கேன். நடவு செஞ்ச ரெண்டு வருஷத்துலயே 20 அடியிலிருந்து 30 அடி வரைக்கும் வளர்ந்துருக்கு. மரத்தோட சுற்றளவும் 9 சென்டி மீட்டரிலிருந்து 16 செ.மீ. வரைக்கும் இருக்கு. அடுத்த வருஷம் அறுவடை செய்ற சமயத்துல இன்னமும் பெருக்கும். எப்படியும் ஏக்கருல 50 முதல் 60 டன் மகசூல் கிடைக்கும். ஒரு டன் மூவாயிரம் ரூபாய்னு வெச்சுகிட்டா… ஏக்கருக்கு குறைஞ்சது ஒன்றரை லட்சம் கிடைக்-கும்னு எதிர்பார்க்கு-றேன். வியாபாரிகள் அவங்களோட செலவுலயே அறுவடை பண்ணிடுவாங்க.

ஒரு லட்சம் நிச்சயம்!
தேவைப்பட்டா காகித ஆலைகளோட ஒப்பந்தமும் போட்டுக்கலாம். ஒப்பந்த முறையில் சாகுபடி செய்யனும்னா, ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வங்கிக் கடன் கிடைக்கும். அறுவடை முடிஞ்சதும் வட்டியோட கடனை அடைச்சுடணும். ஏக்கருக்கு அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல கண்டிப்பா லாபம் கிடைக்கும்.”

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *