தன்னம்பிக்கையின் பெயர் திம்மராயப்பன்

தன்னம்பிக்கையின் பெயர் திம்மராயப்பன்

1896727_644415488928506_934698779_n

கிருஷ்ணகிரி – ஓசூர் சாலையில் இருக்கும் சூளகிரியில் இருந்து ஆந்திர எல்லையை நோக்கி வடக்கே 15 கிலோமீட்டர் சென்றால் வருகிறது எஸ்.திம்மசந்திரம் என்றொரு குக்கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழை விவசாயி திம்மராயப்பா. 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இவருக்கு பிறவியிலேயே இரண்டு கைகளும் கிடையாது. ஆனாலும், தாழ்வு மனப்பான்மையை தன் நிழலருகில்கூட நெருங்கவிடாத அபூர்வப் பிறவி அவர்.

ஆரோக்கியமான உடலைக்கொண்ட ஒரு விவசாயி என்னென்ன வேலைகளைச் செய்வாரோ, அத்தனை வேலைகளையும் ஒருபடி கூடுதலான நேர்த்தியுடன் செய்கிறார்!

நான்கு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியுடன் பிறந்த கடைக்குட்டி இவர். அப்பாவின் சொத்து அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுக்கப்பட்டதில் திம்மராயப்பாவுக்கு 60 சென்ட் நிலம் கிடைத்திருக்கிறது. அதில் சகோதரர்களுக்கு இணையாக அவர் விவசாயம் செய்ய ஆரம்பிக்க… ஆரம்பத்தில் ஊரே வியந்து நின்றிருக்கிறது.

திம்மராயப்பாவின் உழைப்பால் காலப்போக்கில் அவரது ஊனம் மறைந்தே போய்விட்டது. அவரது உறவுக்காரப் பெண்ணான திம்மக்கா தானாகவே முன்வந்து அவரை மணம் செய்துகொள்ள… இனிமையாகப் போய்க்கொண்டு இருக்கிறது இந்த தம்பதியின் வாழ்க்கை!

நாம் அந்தக் கிராமத்துக்குச் சென்றபோது அவர்களது 12 ஆண்டுகால மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சாட்சியாக மூன்று ஆண் குழந்தைகள் வீட்டருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

”திம்மராயப்பா உண்மையாகவே ஒரு படிக்காத மேதைதான். தன் உடம்புக் குறையை நினைச்சு மருகி வீட்டுல முடங்கிடாம, வாழ்க்கையை தன்வசப்படுத்திக்கிட்டாரு. அதுக்கப்புறம் ராயப்பன் ஒரு யோகஜாதகன் ஆகிட்டாரு. தன் கால்களையே கைகளாக்கி, விவசாய வேலைகள் எல்லாத்தையும் அசத்தலா செய்வாரு. நிலத்துல களையெடுக்கவும் பாத்தி கட்டவும் தனக்காகவே ஸ்பெஷல் கொத்து ஒண்ணு செஞ்சு வெச்சிருக்காரு.

அதேமாதிரி, குடத்தின் கழுத்துப் பகுதியில ஒரு கயித்தைக் கட்டி, அதை பல்லுல கடிச்சுக்கிட்டே தண்ணி எடுத்து செடிகளுக்கு ஊத்துவாரு. ஆடு, மாடுகளை கால் மூலமாவே கட்டுத்தரையில கட்டிடுவாரு. 20 அடி உயர தென்னை மரத்துல இருக்குற தேங்காய், இளநீரை எல்லாம் கால்களால கல்லெறிஞ்சே பறிச்சுடுவாரு. பறிச்ச காய்களை அரிவாளால உரிக்கவும் செய்வாரு.

சோறு, களி எதுவா இருந்தாலும் தட்டில் பிசைஞ்சு வெச்சுட்டா, அவரே சாப்பிட்டுக்குவாரு. அதுமட்டுமில்லாம கிணத்துல நீர் இறைக்க வெச்சிருக்குற ஆயில் இன்ஜினை காலாலேயே ஸ்டார்ட் செஞ்சிடுவாரு.

இளநீர் வெட்டியது, ஆயில் இன்ஜின் ஸ்டார்ட் செய்தது இரண்டும் அவருடைய உச்சகட்ட திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் சான்றாக நம்மை மிரள வைத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline