இதுவரை எத்தனையோ கலவை சாதத்தைப் பார்த்திருப்போம். ஆனால் குடைமிளகாய் சாதம் மிகவும் புதிதானது. அதிலும் குடைமிளகாயில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் அதன் விதையில் வைட்டமின் ஏ, சி, கே இருக்கிறது. எனவே இதை சமைத்து சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எளிதில் வயதான தோற்றத்தை தருவதையும் தடுக்கும். இத்தகைய பயன்கள் நிறைந்துள்ள குடைமிளகாயை வைத்து எப்படி ஒரு கலவை சாதத்தை ஈஸியாக செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
சாதம் – 2 கப்
வெங்காயம் – 1
சிறிய குடைமிளகாய் – 3 (சிகப்பு, மஞ்சள், பச்சை)
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
மல்லி – 1 டீஸ்பூன்
வேர்க்கடலை – 3 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் குடை மிளகாயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றாமல், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், மல்லி, வேர்க்கடலை மற்றும் வர மிளகாய் போன்றவற்றை வறுத்து எடுத்து ஒரு தட்டில் போட்டு, ஆற வைத்து மிக்ஸியில் ஓரளவு அரைத்து, கரம் மசாலாவுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பின் குடைமிளகாய் மற்றும் உப்பை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு, 5 நிமிடம் நன்கு வதக்கவும். பின் அதனை இறக்கி, சாதத்துடன் கலந்து, 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
இப்போது சுவையான குடைமிளகாய் சாதம் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம்.
குறிப்பு : வேண்டுமென்றால் இதில் பட்டாணி, பீன்ஸ், கேரட் போன்றவற்றை வேக வைத்து, சேர்த்துக் கொள்ளலாம்.