போன வாரம் சந்தித்தேன் அவனை. நீண்ட நாள் கழித்து.
சிறிய, சற்றே வசதியான குடும்பம். படித்த, ஓரளவுக்கு நாகரீகமான, பண்பான மனைவி. ஒரு மகன், ஒரு மகள். சந்தோஷமான குடும்பம்.
“இவன், என் சிறிய வயது ஃப்ரெண்டு. ரொம்ப வருஷம் ஒண்ணா சுத்தியிருக்கோம்” என்று அடிப்படை அறிமுகம் செய்தபின், அழுத்தம் விடுபட்டு, சற்று சுதந்திரமாக பேசினார் அவன் மனைவி.
ஒப்புக்கான, உப்புசப்பில்லாத, வழக்கமான, விசாரிப்புகள் முடிந்தபின் பேச்சு அவர்கள் மணவாழ்க்கை பற்றி திரும்பியது. “உங்க ஃப்ரெண்டு வீட்ல ஒண்ணும் பண்ண மாட்டார். அவருக்கு எல்லாம் நான்தான் செய்யணும்! இன்னிக்கு தேதி என்னன்னு கூட, நான்தான் காலண்டர் பார்த்து சொல்லணும்”னு, ஒருவித தாய் உணர்வுடன், கம்ப்ளெய்ண்ட் இல்லாத, சந்தோஷத்துடன் சொன்னார்!
“ஆமாண்டா, அவ இல்லேன்னா, நான் காலி,…” என்றான். அதிர்ச்சியாக இருந்தது. காட்டிக் கொள்ளவில்லை.
காரணம், அவன் ஒரு மாஸ்டர் ஆஃப் ஆல் திங்ஸ்! அவனுக்கு யாருமே தேவைஇல்லை, அவன்தான் எல்லோருக்கும் வேண்டும். தனியாக வாழமுடியும் அவனால். எங்கள் எல்லா விஷயத்துக்கும் அவன்தான் ஒற்றை சொலூஷன். சமையலில் இருந்து பாத்ரூம் கழுவுவது வரை – தானே இறங்கி விரும்பி சலிக்காமல் செய்வான். தவறில்லாமல் ஒரு விஷயத்தை செய்வது பற்றி க்ளாஸ் எடுக்கும் அளவு திறமைசாலி. அவனால் தன் வேலைகளை அடுத்தவர் செய்து தரட்டும், என்று விட்டு சும்மா உட்கார்ந்து இருக்க முடியாது.! பின் எப்படி,… ! மண்டை காய்ந்தது!
வழியனுப்ப வந்தவனை, கேள்விக்குறியுடன் பார்த்த என்னிடம், “நீ கேக்க வர்ரது புரியுதுடா. அவ ரொம்ப நல்லவ. எல்லாருக்கும் இருக்கிற மாதிரி அவள் கிட்டயும் திறமை உண்டு. ரொம்ப குறைந்த வருமானம் இருந்தாக்கூட குடும்பத்தை நிர்வாகம் பண்ணி பணம்கூட சேர்த்துடுவா. அது அவள் ஸ்பஷாலிட்டி. என்ன,… சின்ன வயசுல இருந்து அவளை யாரும் பாராட்டி வளர்த்ததில்லை. அதனால ஒரு தீவிர ஏக்கம் உண்டு அவளுக்கு. தன் திறமைக்கு மதிப்பில்லை ன்னு. கல்யாணத்துக்கு அப்புறம், அவளைவிட பல மடங்கு நான் திறமைசாலின்னு உணர்ந்தால், இன்னமும் சுருங்கிப்போய், பெரிய தாழ்வு மனப்பான்மை அவளுக்கு வந்துடும்னு தோணுச்சு.
அதான், வீட்டுக்கு வந்தா, எனக்கு, இது தெரியல, அது முடியல, இதெல்லாம் உன்னாலத்தான் முடியும் ன்னு பலதையும் அவள்கிட்ட விட்டு, ஒவ்வொண்ணுத்தையும், இயற்கையா, பலமா பாராட்டுவேன். வெளி ஆளுங்க கிட்ட அவள் இல்லாம என்னால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு ஒப்புத்துக்குவேன். இப்ப அவளுக்கு தன் மேலயே அசாத்திய நம்பிக்கை உண்டாயிடுச்சு.
வீ போத் ஆர் ஹாப்பி.!
—————–
ஒரு கண்திறப்புடன், வீட்டுக்கு கிளம்பினேன்.