வாழையில் இயற்கை அடர் நடவு முறையில் விவசாயம் செய்து புதிய வேளாண் தொழில் நுட்பம் கொண்டு விவசாயி சாதனை!!!
கரூர் அருகே குளித்தலையில் வாழையில் இயற்கை அடர் நடவு முறையில் விவசாயம் செய்து புதிய வேளாண் தொழில் நுட்பம் கொண்டு விவசாயி ஒருவர் சாதனை செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், குளித்தலையில் இயற்கை வேளாண்மைக்கு முன் உதாரணமாக கே.வி.செந்தில் குமார், என்பவர் இயற்கை முறையில் வாழை விவசாயம் செய்ததோடு, அடர்நடவு முறையில் விவசாயம் செய்து சாதனை புரிந்துள்ளார். இவர் தனது வாழைத்தோட்டத்தில் வாழைக்கன்றுகளை, சாதாரண நடவில் 9 அடிக்கு ஒரு கன்று என்ற விகிதத்தில் ஒரு ஏக்கருக்கு 800 கன்றுகளே நட முடியும். ஆனால் அடர் நடவு முறையில் ஒரு ஏக்கருக்கு 1250 கன்றுகள் நடலாம் என நட்டு சாதனை புரிந்துள்ளார். இவரிடம் இந்த விவசாயத்தை பற்றி கேட்ட போது, “கரூர் அறிவியல் வேளாண்மை மையத்தில் தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் தனசேகர் இந்த அடர்நடவு முறையை பற்றி எனக்கு சொன்னார். அடர் நடவு முறையில் 2 கன்றுகளுக்கு இடையே 2 அடி இடைவெளியில் கன்றுக்கு முன் பகுதியில் 7 அடியும், பின் பகுதியில் 7 அடியும், இடது பக்கம், வலது பக்கத்தில் 9 அடி இடைவெளியும் இருக்கும் படி நடவு செய்வது தான் அடர்நடவு முறை, இந்த முறையில் அனைத்து வாழை ரகங்களையும் நட முடியும், ஆனால் ஒவ்வொரு ரகத்திற்கும் அளவு மாறுபடும். இங்கு சொன்ன அளவு கற்பூர வள்ளி ரகத்திற்கு மட்டும் பொருந்தும். அது போல எழரிசி என்ற வாழை ரகத்திற்கு முன் பின் 6 க்கு 6 அடி, இடது வலது 8 க்கு 8 அடி இருக்க வேண்டும். கன்றுகளுக்கு இடையே 2 அடி இருந்தால் போதும். இதே அளவில் பூவம் வாழையும் நடலாம். ஒரு ஏக்கருக்கு 1500 கன்றுகளை நடலாம். ரோப்பாஸ்ட்ரா ஜி 9 போன்ற உயரம் குறைந்த வாழை ரகங்களையும் ஜிக் ஜாக் முறை படி கன்றுகளுக்கு இடையே 1.5 அடி இடைவெளியும், முன் பின் மற்றும் இடது வலது 6 அடி இடைவெளியும் விட்டு நடலாம். இந்த வாழை ரகங்களை ஒரு ஏக்கருக்கு 1600 லிருந்து 1750 வரை நடலாம்.
அடர்நடவில் பயன்கள் ஏராளம், இதன் மூலம் நிழல் பாங்கான அமைப்பு, இயற்கையிலே உருவாகிறது. நிழல் உருவாவதால் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுகிறது. நிழல் பாங்கான சூழ்நிலை எப்போதுமே நிலவுவதால் நுண்ணுயிர்கள் வளர்ச்சி நிலையாக இருக்கிறது.. நுண்ணுயிர்கள் நிறைந்து இருப்பதால் உரப்பயன் பாடு தேவையில்லாத நிலை உருவாகிறது. வாழையில் இருந்து உதிரும் காய்ந்த இலைகள், மட்டைகள் மூடாக்குப் போடப்படுவதாலும், நுண்ணுயிர்களுக்கு அது உணவாக்கப்படுகிறது. மேலும் மண்ணின் பெளதீகத் தன்மை அதிகரித்து அங்ககப் பொருட்கள் அதிகமாகிறது. களைகள் வளர்வதில்லை. அரியதாக வளரும் களைகளும் சூரிய ஒளி கிடைக்காததால் பிழைத்திருக்க முடியாமல் மடிகிறது. மடிந்த களைகள் மண்ணுக்கு உரமாகிறது. மேலும் இம்முறை பின்படுத்தப்படுபதினால் நிலத்தினுடைய கார, அமிலத்தன்மை சமநிலை படுத்தப்படுகிறது.” என்று கூறிய கே.வி.செந்தில்குமார் அவர் அதன் தொழில் நுட்பத்தையும் விளக்கினார்.
விதையே விளைச்சலுக்கு மூலாதாரம், அதனால் வாழையை பொறுத்த வரை கன்று தேர்வே மிக முக்கியமானதாகிறது. வாழையில் நோய்த் தாக்குதல் ஏற்படுவதே கன்றுகளை சரியானதாக தேர்ந்தெடுக்காததால் உண்டாவது தான். வாழைக்கன்றுகளை, தொடர்ச்சியாக வாழையே பயிரிடும் இடத்தில் இருந்து தேர்வு செய்யக்கூடாது. மேலும் தொடர்ச்சியாக வாழை விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து கன்றுகள் வாங்கக் கூடாது. ஏனென்றால் நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்பு இருக்கு. மேலும் நோய் தாக்குதல் உள்ள இடங்களில் இருந்தும், கன்றுகளை எடுக்கக்கூடாது. நடவு செய்யும் இடமும் தொடர்ந்து வாழை சாகுபடி செய்யும் இடமாகவும் இருக்க கூடாது. வாழை கன்றுகளை பயிர் சுழற்சி உள்ள நிலத்தில் தான் நட வேண்டும். கன்றுகளை நட்டபின் தேவைப் பட்டால் நடப்பட்ட 3, 5, 7 மாதங்களில் பொட்டாஷியம் பயன்படுத்தலாம். வாழையில் இருந்து ஒரு அடி தள்ளி பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு குழிகளை எடுத்து ஒன்றில் பொட்டாஷியமும், மற்றொன்றில் ஊட்டமேற்றிய தொழு உரத்தையும் வைக்கலாம். இது போக இலைவழியாக தெளிக்கும் பயிர் ஊக்கியாக பஞ்சகாவியம், பழக்கரைசல் பயன் படுத்தலாம் இவற்றால் பயிர் செழித்து வளரும். அடர்நடவு முறையில் காற்றின் மூலம் சேதம் ஏற்படுத்துவது தடுக்கப்படுகிறது. நெருக்கம் அதிகமாக இருப்பதாலும் காற்று உள்ளே நுழைய முடியாத அளவில் இருப்பதாலும், வாழைக்காய்கள் மிக நன்றாக பெரிதாக வளர்கிறது. நட்ட நாளில் இருந்து 10 வது மாதத்தில் வாழை ஈனத் தொடங்கும். 12 வது மாதத்தில் இருந்து ஒன்றரை மாதத்திற்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். சாதாரண நடவில் ஒரு தாரில் 200 காய்கள் இருக்கும். எடை 30 முதல் 31 கிலோ வரை இருக்கும். அதே வாழை அடர் நடவு முறையில் பயிரிட்டு இருப்பதால் 250 காய்களும், 38 கிலோ எடை இருக்கும். நிழல் பாங்கான சூழல் நிகழ்வதால் காயின் தன்மை மிக நன்றாக இருக்கிறது. மேலும் வாழைத்தார்கள் நிழல் பாங்கான சூழ் நிலையில் இருப்பதால் அதன் குவாலிட்டி கலர் நன்றாக இருக்கும். சாதாரண நடவை விட, அடர் நடவு முறையில் அறுவடை காலம், ஒரு மாதம் கூடுகிறது. காய், மற்றும் இழைகளில் பச்சையம் வியக்கும் வண்ணம் கவர்ச்சியாக இருக்கிறது. அடர் நடவின் மூலம் ஏக்கருக்கு ரூ 2 லட்சம் வரை லாபமாக பெறுவதோடு நிலத்தின் வளமும் கூடுகிறது. உரச்செலவு, பூச்சிக்கொல்லி செலவு இல்லாமல் நல்ல விளைச்சல் கிடைக்கிறது. அதனால் அடர்நடவு முறையில் வாழையை பயிர் செய்து அதிக மகசூல் பெறலாம் என்கிறார்.
No Responses