ஆயுர்வேத நிவாரணி துளசி

சளி, காய்ச்சல், ஒவ்வாமை போன்றவைகளை நீக்கும் ஆயுர்வேத நிவாரணி துளசி. இதனால்தான் பண்டைய காலங்களில் இருந்து இன்றைக்கும் வீடுகளில் துளசிமாடம் வைத்து வணங்கி வருகின்றனர்.
மலைக்காலம் வந்தாலே சளித் தொந்தரவுகளும், தண்ணீர் ஒவ்வாமையும் அதிகம் ஏற்படும். இதற்கு மருத்துவமனைகளுக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டாலும் நிவாரணம் கிடைப்பதில்லை.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு சளித்தொல்லையானது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும். சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும்.

பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித்தொல்லை மருந்துகளுக்கு சில நேரங்களில் கட்டுப்படாது.

நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காகவே சளியானது இயற்கையாக உடலில் சுரக்கிறது. இது அளவிற்கு மீறி பெருகும் போது அதனை வெளியேற்றி, மீண்டும் ஒவ்வாமையினால் சளி உண்டாகாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

அடிக்கடி தோன்றும் சளித் தொல்லையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, நுரையீரலுக்கு வலுவை தரும் அற்புத மூலிகை கருந்துளசி.

கருந்துளசி செடிகளின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். சளியை கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க, பாலின் ஒவ்வாமையால் ஏற்பட்ட கபம் நீங்கும்.

துளசி இலைகளை நீரில் போட்டு கொதிக்கவைத்து ஆவிபிடிக்க சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.

தினமும் அதிகாலையில் இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லையிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.

மேலும் சளித் தொந்தரவினால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சிறிய வெங்காயம் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இயற்கை உணவுகளை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline