ஆண்மை குறைவை போக்கும் அருகம்புல்

10366031_298017163708635_7152085133724660656_n

இந்தியாவில் பன்னெடுங்காலமாக இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல் சர்வரோக நிவாரணியாக உள்ளது. இதன் தாவரவியல் பெயர் cynodon dactylon என்பதாகும். நீர்க்கசிவு உள்ள இடங்கள், வயல் வரப்புகள் போன்ற இடங்களில் தானாக வளரும். அருகு, பதம், தூர்வை, மோகாரி ஆகிய தமிழ் பெயர்களும் அருகம்புல்லுக்கு உண்டு. பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள் கொண்டவை . தண்டு குட்டையானது. நேரானது, முழுத்தாவரமும் இனிப்பு சுவையுடையது. இந்த தாவரம் ஏராளமான நோய்களை போக்கும் அருமருந்தாக உள்ளது என்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட உளவியல் நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர நடராஜன்.

அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரியை அழிக்க வல்லது.

சிறுநீர்ப்பை கல், நீர்க்கோவை என்ற உடல் வீக்கம், மூக்கில் ரத்தக்கசிவு, குழந்தைகளுக்கான நாட்பட்ட சளித்தொல்லை, ஜலதோஷம், வயிற்று போக்கு, கண்பார்வை கோளாறுகள் மூளையில் ஏற்படும் ரத்த கசிவு போன்ற நோய்களுக்கு இது சால சிறந்தது.

உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, ரத்த புற்றுநோய் குணமடைய, இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி, இருதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற எல்லா நோய்களுக்கும் சிறந்த மருந்து.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் திறமையானது. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு அருகம்புல் ஒரு உலக புகழ்வாய்ந்த டானிக்.

சுத்தம் செய்த அருகம் புல்லை இடித்து பிழிந்து சாற்றை ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வர சிறுநீர் நன்றாக கழியும். உடல் வீக்கம் குறையும். வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீங்குகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.

அருகம் புல் சாறு தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு சேர்த்து தைலமாக காய்ச்சி ஆறாத ரணங்கள், படை ரிங்கு, வறட்டுத்தோல் போன்ற தோல் நோய்களுக்கு தொட்டு போட அவை விரைவில் குணமாகும்.

வேரை நசுக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டி குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் சூதக கசிவு நீங்குகிறது. மனச்சோர்வு, தூக்கமின்மை, வலிப்பு ஆகியவற்றுக்கும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகிறது.

தேவையான அளவு அருகம்புல் சேகரித்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். உடல் அரிப்பு குணமாக இதனை தொடர்ந்து செய்து வரலாம்.

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு அரைத்து 200 மில்லி லிட்டர் காய்க்காத ஆட்டுப்பாலில் கலந்து காலை வேளையில் மட்டும் குடித்து வரவேண்டும். இரண்டு மூன்று வாரங்கள் இவ்வாறு செய்தால் ரத்த மூலம் கட்டுப்படும்.

தொடர்ந்து ஓரிரு மாதங்கள் குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாவதுடன், ஆண்மை உணர்வும் எழுச்சி பெறும். ஆண்மை குறைவிற்கு நிரந்தர தீர்வாக அருகம்புல் உள்ளது. ஹோமியோபதியில் இதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து அமீபியாஸிஸ் மற்றும் சீத பேதிக்கு தலைசிறந்த மருந்தாக பயன்படுகிறது.

எலுமிச்சம் பழ அளவு அருகம்புல் பசையை 1 டம்ளர் பசுந்தயிரில் கலந்து காலை வேளையில் குடிக்க வேண்டும். ஒரு மாதம் வரை இவ்வாறு குடித்தால் வெட்டை நோய் குணமாகும்.

அருகம்புல் சாறு 20 மி.லி., தண்ணீர் 20 மி.லி., அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.

இதன் சாறை கண்ணில் ஊற்றினால் கண்நோய் மற்றும் கண் புகைச்சல் மாறும். இப்புல்லை வெட்டி தலையில் வைத்து கட்டிக்கொண்டால் கபாலச்சூடு தணியும். அருகம்புல், கடுக்காய் தோல், இந்துப்பூ, கிராந்தி தகரம், கஞ்சாங்கோரை போன்றவற்றை சம அளவில் எடுத்து இவற்றோடு மோர் விட்டு அரைத்து பாதித்த இடங்களில் பூசி வர படர்தாமரை மறையும். உடலின் சூட்டை குறைத்து குளிர்ச்சி உண்டாக்கும்.

அருகம்புல், கணுபோக்கி இரண்டையும் பத்து கிராம் அளவு எடுத்து அதோடு வெண்மிளகு இரண்டு கிராம் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி வடிக்க வேண்டும். அந்த நீரோடு 2 கிராம் வெண்ணெய் சேர்த்து உட்கொண்டு வர மருந்துகளின் காரணமாக உண்டாகும் விஷம் முறிந்து விடும். நீரடைப்பு, வெட்டை, நீர்த்தாரை எரிச்சல் இருந்தால் அவை நீங்கும்.

இரவில் ஒரு இளசி இலையுடன் அருகம்புல்லையும் கொதிநீரில் போட்டுவிட வேண்டும். பின்னர் மூடி வைத்து அந்த நீரை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வர சளித்தொல்லை மெதுவாக குறையும். மேலும் சீதள தொல்லையும் நீங்கும். சமீபத்தில் சென்னை கடற்கரையில் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்பவர்கள் அருகம்புல் சாற்றை அருந்த தொடங்கியதில் இருந்து அதன் மகத்துவம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.

காலை உணவாக

அருகம்புல்லை சாற்றை காலையில் 9 மணிக்கு பசி ஆரம்பித்த உடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின் ஒரு பழம் சாப்பிட்டால் போதும். உடலுக்கு தேவையான அனைத்து சத்தும் அதில் கிடைத்துவிடும்.அடுத்து மதிய சாப்பாடு தான்.

புல்லின் தனிமங்கள்

அருகம்புல் ஈரப்பதம் நிறைந்த சாதாரண மண்ணில் தானாக வளருகிறது. இதற்கென எந்த தனி வளர்ப்பு முறைகளும் இல்லை. அருகம்புல்லை பறித்த உடனேயே பயன்படுத்துவதால் அதன் முழு மருத்துவ குணத்தையும் பெறமுடியும். காய்ந்த புல்லில் சத்துகள் குறைந்துவிடுகிறது. இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம் போன்ற தனிமங்களின் ஆக்சைடுகள் மற்றும் சத்துகள் அடங்கியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline