அழிந்து வரும் பாரம்பரிய விதைகள்

அழிந்து வரும் பாரம்பரிய விதைகள்

சென்னை மாநகரில் இருப்பவர்கள் அடிக்கடி எழுப்பிவரும் கேள்விகள் தக்காளியைப் பற்றியவை. “”அங்காடியில் விற்கப்படும் தக்காளிப்பழம் பெரியதாக மைசூர் போண்டாவைப்போல் உள்ளது. தோல் கடினமாக உள்ளது. ருசியும் இல்லை. இது ஏன்?” புளிப்புள்ள சிறிய தக்காளி மிகவும் அரிதாகிவிட்டது.

“”போண்டா தக்காளி” என்றும் “”பங்களூர் தக்காளி” என்றும் விற்கப்படும் இனிப்பற்ற தக்காளியின் தோற்றம், மாற்றம், வடிவமைப்பை ஆராய்ந்தால் நிஜமாக அந்தத் தக்காளி “”அசைவத் தக்காளி” ஆகும். எல்லாம் விபரீத விஞ்ஞான விளைவுதான்.

பங்களூர் இனிப்புத் தக்காளியின் இன்றைய தோற்றம், கனம், எடை, வெளித்தோலின் பரிமாணம் எல்லாம் “ஜீன்’ மாற்றத்தில் “மாலிக்யுலர் பயாலஜி’ – அதாவது பயோநுட்பத்தில் அணுசக்தி நுழைவின் காரணமே.

இப்படி விளைபவை புற்றுநோயை ஏற்படுத்தும், ரத்த அழுத்தத்தை உயர்த்தும் என்றெல்லாம் எச்சரிக்கைகள் இருந்தாலும் அவை புறக்கணிக்கப்பட்டு “புதிய கண்டுபிடிப்புகள்’ என்று கூறி இந்திய விவசாயத்தில் திணிக்கப்படுகிறது.

பாரம்பரியமான விதை உற்பத்தித் தொழில்நுட்பத்தில் தேர்வு விதைகளை விவசாயிகள் தங்கள் மதிநுட்பத்தால் பெருக்கி வந்தனர். ருசி, மணம், அளவு பார்த்து நன்றாக விளைந்த பழங்களைக் கொண்டு விதைத் தேர்வு செய்தனர்.

அடுத்தபடியாக ஒட்டுக்கட்டும் முறையையும் விவசாயிகளே கடைப்பிடித்தனர். வீரிய ஒட்டுக்கட்டும் முறை வந்தது. “ஜீன்’ மாற்ற உத்தி வந்தது. ஒட்டுக்கட்டும்போது எதை எதையெல்லாம் பயன்படுத்தலாம் என்ற ஒழுங்குமுறை, விதியில் மாற்றம் வந்தது.

தாவர அணுக்களை மற்றொரு தாவர அணுவுடன் சேர்க்கும் ஒட்டு முறையை வரவேற்கலாம். ஆனால் நாய்த்தோல், குதிரை முடி, பன்றித்தோல் ஆகியவற்றின் புரத அணுக்களைத் தக்காளிக்குரிய அணுவுடன் சேர்த்தால் அது விபரீத விஞ்ஞானம் அல்லவா? சுத்த சைவர்களுக்கு அசைவத் தக்காளியை வழங்கும் விஞ்ஞானத்தை நாம் போற்றுவதா? தூற்றுவதா? இப்படிப்பட்ட விபரீத விஞ்ஞானத்தில் விளைந்த விதைகளுக்குக் காப்புரிமையும் உண்டு. இப்படிப்பட்ட தக்காளி பறித்துப் பலநாள் ஆனாலும் கெடாது. உண்மைதான். அதை உண்டால் வயிறு கெட்டுப்போகிறதே. இதயம் கெட்டுப் போகிறதே. இதற்கு அந்த விஞ்ஞானத்தில் பதில் உண்டா?

புதிய தொழில்நுட்பத்தில் பிறந்த போண்டாத் தக்காளியுடன் போட்டியிட்டு இன்னமும் புளிப்புத் தக்காளி / நாட்டுத்தக்காளி ரகங்களை திண்டுக்கல், கிருஷ்ணகிரி நகரங்களைச் சுற்றியுள்ள விவசாயிகள் காப்பாற்றி வருவதைப் பாராட்ட வேண்டும். அங்காடி மதிப்பு காரணமாக நாட்டுத் தக்காளி சாகுபடி செய்வோர் தொடர்ந்து பயிரிட்டு வருவதைக் கவனிக்கலாம்.

நோய்பரப்பும் ஜீன் மாற்ற விதைகளைப் பற்றிப் பதறும் நேரத்தில் நமது பாரம்பரிய விதைகளின் கதைகளை அறிவது நன்று. “பல்லுயிர்ப் பெருக்கத்தின் தந்தை’ என்று போற்றப்படும் ரஷிய விஞ்ஞானி நிகோலாய் இவனோவிச் வாவிலோவுடன், வாவிலோவின் மாணவர்களின் துயரக்கதைகளே அவை.

உணவுப் பயிர்களின் தோற்ற மையங்களை வாவிலோவ் கண்டுபிடித்தார். வாவிலோவ், லெனினின் பேராதரவு பெற்ற மாபெரும் விவசாய விஞ்ஞான மேதை. 1929-இல் வாவிலோவுக்கு வேளாண் விஞ்ஞான அகாடமியின் முதல் தலைவர் என்ற பொறுப்பை லெனின் வழங்கினார்.

கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் அல்லாத ஒரு உலக விஞ்ஞானி பெற்ற முதல் மரியாதை. வாவிலோவ் தாவர இயலில் மரபியல் துறை மேதை என்பதால், இவர் புகழ் லண்டன், பாரீஸ், நியூயார்க் வரை பரவியிருந்ததுடன் ஏராளமான வெளிநாட்டு விஞ்ஞானிகளும் இவருக்கு மாணவராயிருந்தனர்.

இவருடைய பல கண்டுபிடிப்புகளில் முதன்மையானது உணவுப் பயிர்களின் தோற்ற மையங்களே. உலகம் சுற்றி இவர் கண்டுபிடித்த தோற்ற மையங்கள் கொலம்பஸ் கண்டுபிடிப்புக்கு இணையானது.

இரண்டாவதாக, மரபியல் துறையில், மென்டலிய விதிகளை மறுத்து, தாவர உயிர்மங்களின் பாரம்பரிய மூலக்கூறு ஒழுங்கற்றும் செயல்படும் என்று நிரூபித்தவர். தாவர மரபியல் துறையில் இவரின் கண்டுபிடிப்புகள் கலிலியோவுக்கு நிகரானவை. கலிலியோவுக்குக் கிடைத்த தண்டனை இவருக்கும் கிடைத்தது. காரணம் விஞ்ஞானமல்ல. டார்வினை விமர்சித்தார் என்று லிசங்கோ குற்றம்சாட்டி, தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு என்றும் கூறப்பட்டாலும்கூட, ஸ்டாலின் பார்வையில் வாவிலோன், லெனின் ஆதரவாளர் என்பதால் ஆள் நடமாட்டமே இல்லாத சைபீரியச் சிறைச்சாலைகளில் ஒன்றில் ஆயுள் தண்டனைக் கைதியாகி மரணமுற்றார். எனினும் இவரது மகத்தான சாதனை உணவுத் தாவரங்களின் 12 தோற்ற மையங்களை அடையாளப்படுத்தியதே.

நெல் என்றால் அதன் தோற்றம் இந்தியா – சீனா, கோதுமை என்றால் மெசபடோமியா, மக்காச்சோளம் ஆப்பிரிக்கா, வேர்க்கடலை பிரேசில், உருளைக்கிழங்கு அன்டஸ் (தென் அமெரிக்கா) என்றெல்லாம் பேசப்படுவதற்கு வாவிலோவ் மூலகர்த்தா. நெல் என்றால் அதன் காட்டு ரகம் பூர்வத்தோற்றத்தை விளக்கும். அப்படிப்பட்ட மூலாதார விதைகளையும், நாட்டு ரகங்களையும், கோதுமை, பார்லி, ரை ஓட்ஸ் ரகங்களின் பூர்வத்தோற்ற விதைகள் – பாரம்பரிய விதைகள் எல்லாவற்றையும் சேகரித்தவர்.

வாவிலோவ் விதை ஆராய்ச்சிப் பண்ணை பீட்டர்ஸ்பர்க்கில் இருந்தபோது, இரண்டாவது உலகப்போரில் ஹிட்லரின் வெற்றிப்படலத்தின் இறுதிக்கட்டமாக சோவியத் ரஷியப் படையெடுப்பு நடந்தது. பீட்டர்ஸ்பர்க் முற்றுகையிடப்பட்டுப் பின்னர் ஜெர்மன் படை பின்வாங்கியபோது வாவிலோவ் விதை வங்கியில், வாவிலோவின் உதவி விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் பட்டினியால் உயிர் துறந்து பிணமாகக் கிடந்த காட்சி ஜெர்மன் ஜெனரலை உலுக்கியதுடன் வியப்படைய வைத்தது.

அங்கு திரிந்து கொண்டிருந்த ருஷியச் சிறுவனைப் பார்த்து இவ்வாறு கேட்டார்: “”இந்த விதை வங்கியில் ஏராளமாக கோதுமை, பார்லி, ஓட்ஸ் ரை உள்ளபோது, இந்த ஊழியர்கள் எப்படிப் பட்டினியால் இறந்தனர்?” அந்த ருஷியச் சிறுவன், “”இவை விதைகள். இந்த விதைகள் சாகாவரம் பெற்றவை. நாங்கள் ஒருநாள் சாகப்போவது நிஜமே. சாகாவரம் பெற்ற இந்த விதைகள் இனி பிறக்கப்போகும் சந்ததிகளுக்கு உதவும் என்று அவற்றை உண்ணாமல் பட்டினியால் இறந்து விட்டனர்…” என்று பதில் கூறியதைத் தன் நாட்குறிப்பில் பதிவு செய்து கொண்டாராம்.

இரண்டாவது உலகப் போரால் அழிக்க முடியாத பாரம்பரிய விதைகளைப் பசுமைப்புரட்சி அழித்த விவரம் இன்னமும் சோகமானது அன்றோ! பாரம்பரிய விதைகளை அப்புறப்படுத்திவிட்டுப் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வீரிய ரக விதைகளினால் குறிப்பிட்ட அளவில் அரிசி உற்பத்தி உயரவும் இல்லை.

பல இடங்களில் பாரம்பரிய விதை விளைச்சலை விட வீரியரக விதை விளைச்சல் குறைவுதான். போதிய வைக்கோலும் அறுவடையாகவில்லை. குறுகியகாலப் பயிர் என்பதால் பாரம்பரிய ரக விதை கொண்டு ஒரு போகம் எடுத்த இடங்களில் 2 போகம் எடுக்கப்பட்டிருக்கலாம்.

நாம் ஆசை ஆசையாய் விரும்பிச் சாப்பிட்ட ஆற்காடு கிச்சடி, வையக்குண்டா, குதிரைவால், தங்கச்சம்பா, டொப்பிச்சம்பா, சீரகச்சம்பா, ஆனைக்கொம்பன், கார்சம்பா, கார்த்திகைச்சம்பா, ஆத்தூர் கிச்சடி, சிறுகமணி, செங்காரி, பூனைக்காரி, கட்டைச்சம்பா, பிசாளம் எல்லாம் அழிந்துவிட்டன. பாரம்பரிய ரகம் என்று எண்ணப்படும் பொன்னி, உண்மையில் தைச்சுங் என்ற ஐ.ஆர். ரகத்துடன் ஆற்காடு கிச்சடி கலப்பான ரகம். பொன்னியில் ஆற்காடு கிச்சடிக்குரிய மணம் காப்பாற்றப்பட்டு பாரம்பரியம் மீட்கப்பட்டது.

ஐ.ஆர்.8 அரிசியுடன் ஆற்காடு கிச்சடி கலந்து உருவான ஐ.ஆர்.20-இல் கிச்சடிச்சம்பாவின் குணம் மீட்கப்பட்டாலும், இன்று ஐ.ஆர்.20 அழிந்துவிட்டது. ஏடிட்டி-36 ரகம் அங்காடியில் ஐ.ஆர்.20 – என்று விற்கப்படுகிறது. இவ்வாறே பாபட்லா என்ற ரகம் பொன்னி என்று விற்கப்படுகிறது. விவரமறிந்தவர்கள் ஏமாறுவதில்லை.

காய்கறிப் பயிர்களில் நிறைய ரகங்கள் உள்ளன. மிகவும் மணம் நிரம்பிய நார் இல்லாத பச்சை அவரைக்காய் உண்டு. வெண்டையில் வெள்ளை ரகம் அழிந்து வருகிறது. வெள்ளைரக வெண்டையில் மெல்லிய ரகம் தடிம ரகம் உண்டு. குறிப்பாக தடிம ரக வெண்டை (நார் இல்லாதது). மோர்க்குழம்புக்கு ஏற்றது. இப்போது சுத்தமாக அற்றுவிட்டது. பச்சை வெண்டை ஹைபிரீட் மட்டுமே உள்ளது.

கத்தரிக்காயிலும் நிறைய ரகங்கள் உள்ளன. சென்னையைச் சுற்றி முன்னொரு காலத்தில் மிகவும் ருசியான ஊதா நிறப் பொடிக் கத்தரிக்காய் சாகுபடியானது. இதைச் சிலர் எண்ணெய்க் கத்தரிக்காய் என்பார்கள். பருப்பு ரசத்திலும் இடப்படும். சிலர் ரசக்கத்தரிக்காய் என்பார்கள். இன்று சற்றுப் பெரிய அளவில் விற்கப்படும் இக் கத்தரிக்காய் சுண்டைக்காய் போல் கசப்பது ஏன்?

கத்தரிக்காயில் மிகவும் ருசியான முள்கத்தரிக்காய் வேலூர், ஆற்காடு அங்காடிகளில் உண்டு. திண்டுக்கல் பச்சைக்கத்தரிக்காய், திருநெல்வேலி வெள்ளைக் கத்தரிக்காய் அலாதியான ருசியுள்ளவை. இவையெல்லாம் அருகி வருகின்றன. இன்று மஹைக்கோ – மான்செண்டோவின் ஹைப்ரீட் நாமக் கத்தரிக்காய்தான் அங்காடியில் அதிகம் விற்பனைக்கு வருகின்றன.

வேர்க்கடலையில் முன்பெல்லாம் கொடி ரகம் சாகுபடியானது. கொடி ரகத்தில் மூன்று பருப்புள்ள கடலை அறுவடையாகும். தமிழ்நாட்டில் அருகிவிட்டது. குஜராத்தில் எஞ்சியுள்ளது. மூன்று விதைப் பருப்புக்கு அமெரிக்காவில் நல்ல விலை உண்டு. கையால் உரிபடும் கடலை என்று ஏற்றுமதியாகும். இந்த ரகத்தின் சிறப்பு குறைந்த எண்ணெய் விகிதம். கடலை மிட்டாய்க்கு ஏற்றது. இந்த மிட்டாய் ரகமும் அருகிவிட்டது.

உலகப்போரால்கூட அழிக்க முடியாத பாரம்பரிய விதைகளைப் பசுமைப்புரட்சி அழித்துள்ள நிகழ்ச்சி வரலாறின் சோகம் என்றுதான் சொல்ல வேண்டும். இதில் இந்தியக் கதை இன்னமும் சோகமானது.

1959-இல் கட்டக்கில் உள்ள மைய அரிசி ஆராய்ச்சி நிறுவன இயக்குநராயிருந்த டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா அதிக விளைச்சல் தரும் பாரம்பரிய விதைகளைச் சேகரித்து வைத்திருந்து இந்தியச் சூழ்நிலைக்கு நோய் பரப்பும் ஐ.ஆர்.ஆர். ரக வீரிய நெல் விதை தேவை இல்லை என்று எடுத்துக்கூறி, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் தர கையெழுத்திட மறுத்தார். இதனால் பதவி மாற்றம் செய்யப்பட்டார். இந்த மாற்றம் செல்லாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவர் சம்பளம் நிறுத்தப்பட்டது. நீதிக்குப் போராடி வறுமையில் வாடி இறுதியில் நெஞ்சுவலியால் இறந்து போனார்.

டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியாவுக்குப் பின் அதே பதவியை டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் பெற்ற பிறகுதான் நெல்லில் பசுமைப்புரட்சி “புதிய வேகம்’ பெற்றது. ஆனால், டாக்டர் ரிச்சாரியா சேகரித்து வைத்திருந்த பாரம்பரிய நெல் விதைகள் மாயமாக மறைந்தது எப்படி என்று இன்றளவும் பின்னர் பதவிக்கு வந்த புதிய இயக்குநர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

எனினும் ஒடிசா மாநிலத்தில் ரிச்சாரியா மறைந்து, பசுமைப் புரட்சியின் கரியவிளைவுக்குப் பின் 2010-ஆம் ஆண்டில் (50 ஆண்டுகளுக்குப்பின்) 77 வயதுள்ள நடாபர் சாரங்கி என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் சுமார் 400 பாரம்பரிய நெல்ரக விதைகளைச் சேகரித்துள்ளார். அவற்றில் காலஜீரா (கருப்பு சீரகச்சம்பா) பிம்புடிபாசா, ரத்ன சூடி முக்கியமானவை. இவர் சேகரித்துள்ள பாரம்பரிய ரகங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலிருந்தும் கேரள மாநிலத்திலிருந்தும் பல விவசாயிகள் சாரங்கியைச் சந்தித்து மருத்துவக் குணமுள்ள நெல் ரகங்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கற்பட்டு முகுந்தன், அரியன்னூர் ஜெயச்சந்திரன், திருவண்ணாமலை கலசப்பாக்கம் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கிச்சலிச்சம்பா, பெருங்கார் சீரகச்சம்பா ஆகியவற்றைக் காப்பாற்றியுள்ளனர்.

மாரியம்மன் கோயில் கோ. சித்தர், ஒடியாவிலிருந்து மருத்துவக் குணமுள்ள நெல் ரகங்களை வாங்கித் தஞ்சையில் விதை வங்கியை உருவாக்கியுள்ளார். சென்னையை மையமாகக் கொண்ட இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஏ. பாலசுப்பிரமணியமும் அவர் மனைவி விஜயலட்சுமியும் பல நூற்றுக்கணக்கான – மிகவும் அரிதான – அழிந்துவிட்ட பாரம்பரிய நெல் ரகங்களைச் சேகரித்து சீர்காழியில் விதை வங்கியை உருவாக்கியுள்ளனர்.

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா? என்று கேட்கத் தோன்றினாலும், ஒரு காலத்திலும் முடியாது என்பதைவிட தாமதமான புதிய தேடலை வாழ்த்தி, இதுநாள்வரை பாதுகாத்துப் பயிரிட்டுப் பாரம்பரிய விதை ரகங்களை பரவச் செய்துவரும் அனைத்து விவசாயிகளுக்கும் “நன்றி’ என்ற மூன்றெழுத்துக்கு மேல், “பரிசு’ என்ற மூன்றெழுத்தை, “அரசு’ என்ற மூன்றெழுத்து வழங்கி கௌரவிக்க வேண்டும். வாழ்க பாரதம்.

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

Thanks : dinamani

4 Comments

  1. கணேஷ் 29/12/2013
    • Pannaiyar 29/12/2013
    • PRAVIN 07/03/2017
  2. சேஷாத்ரி 21/10/2016

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline