அடமானமாய் என்ன தருவீங்க…?

ராக்கேஷ் ஒரு பேங்க்-கின் கிராமத்து பிராஞ்ச் அதிகாரி.
அவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார்.

ராக்கேஷ் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டான். “எதுக்காகப் பணம் வேணும்…?”

அந்த ஆதிவாசி ஆள் பதில் சொன்னார்.
“கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!”

“அடமானமாய் என்ன தருவீங்க…?”

ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார்.
“அடமானம்னா என்ன..?”.

“நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும்.அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…!”

ஆதிவாசி ஆள் சொன்னார். “கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு குதிரை இருக்கு… எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…!”.

ராக்கேஷ் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தான்.

சில மாதங்கள் கழிந்தது. அந்த ஆதிவாசி மீண்டும் பேங்கிற்கு வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார்.
பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார்.

ராக்கேஷ் ஆச்சர்யத்துடன் கேட்டான்.
“கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா…?”

அந்த ஆதிவாசி உற்சாகமாய்ப் பதில் சொன்னார்.
“லாபம் இல்லாமலா…? அது கிடைச்சது நிறைய…!”.

ராக்கேஷ் ஆர்வத்துடன் கேட்டான்.
“அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?”.

“என்ன செய்யறது… பொட்டில போட்டு வச்சிருக்கேன்…!”.

ராக்கேஷ் யோசித்தான். ‘இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக் கிடைச்சுட்டான்…!’ என்று நினைத்தபடியே,”ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே…?” என்றான்.

ஆதிவாசி கேட்டார். “டெபாசிட்னா என்ன…?”.

ராக்கேஷ் விளக்கமாய்ப் பதில் சொன்னான்.
“நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு… அதில உங்க பணத்தை போட்டு வச்சா… உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்…!”.

கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆதிவாசி நபர் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார்.

“அடமானமாய் என்ன தருவீங்க…?”.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *