லெமன் க்ராஸ் ( Lemon Grass)

lemongrass_pannaiyar1
“லெமன் க்ராஸ்” என்பது ஒரு வகை புல் இனத்தைச் சார்ந்த மூலிகை தாவரமாகும். இந்த லெமன் க்ராஸ் தமிழில் “வாசனைப் புல்” , “எலுமிச்சைப் புல்” மற்றும் “இஞ்சிப் புல்” போன்ற பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. சிலர் இதனை காமாட்சிப் புல் என்பார்கள். இதன் தாவரப் பெயர் “CYMBOPOGAN FLEXOSUS” என்றும், GRAMINAE என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த லெமன் க்ராஸ் இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்தைத் தாயகமாகக் கொண்டதாகும். இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் இது அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சீனாவில் அதிகமாக விளையும் பொருளான இது, பராமரிப்புகள் எதுவும் இல்லாமலே காடுகளிலும் மலைகளிலும் தானாக வளர‌க்கூடிய வகையைச் சேர்ந்ததாகும். மேலும் இது எல்லா வகையான‌ மண் வகைகளிலும், சத்துக் குறைவான மண்களிலும், களர் நிலங்களிலும் மற்றும் உவர் மண்களிலும்கூட‌ வளரக்கூடியது! வீட்டிலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளரச் செய்யலாம்.

இது லேசாக லெமனின் நறுமணமும் கொஞ்சம் இஞ்சியின் வாசனையும் கல‌ந்ததுபோல் இருக்கும். அதனால்தான் தமிழகத்தில் நாம் மேலே குறிப்பிட்டது போல் “எலுமிச்சைப் புல்”, “இஞ்சிப் புல்” என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

lemongrass_pannaiyar2 lemongrass_pannaiyar3

மருத்துவ பயன்க‌ள்:

லெமன் க்ராஸ் நல்ல செரிமாணத்தைக் கொடுத்து, பசியின்மையைப் போக்கும். இதில் பல வேதிப் பொருட்கள் உள்ளதால், மனச் சோர்வை நீக்கி உற்சாகம் தரக்கூடியதாகவும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இதன் தண்டுகளிலிருந்தும் மேலுள்ள தோகையிலிருந்தும் எடுக்கப்படும் எண்ணெய், பலவித‌ தோல் வியாதிகளுக்கும்,தாய்ப்பால் சுரக்கவும், வலிகளை நீக்கவும் பயன்படுகிறது. இது கிருமி நாசினியாகவும், வாத நோய்களுக்கு தயாரிக்க‌ப்படும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கேன்சர் செல்களைக்கூட அழிக்கும் தன்மைக் கொண்டது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தயாரிப்புகளும் இதர பயன்க‌ளும்:

இதிலிருந்து எடுக்க‌ப்படும் எண்ணெய் மூலம் சோப்புகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் சமையலில் பயன்படுத்தப்படும் எஸென்ஸ் போன்றவை தயாரிக்கப்படுகிறது. இதன் எஸென்ஸ் மெழுகுவர்த்தி தயாரிப்பிலும் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது கிருமி நாசினியாகவும் பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது. எண்ணெய் பிரித்தெடுத்தப் பின் எஞ்சக்கூடிய அதன் புல் மாட்டுத் தீவனமாகவும், காகிதங்கள், அட்டைப் பெட்டிகள் தயாரிக்கவும், எரி பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இதைக் கொண்டு போடப்படும் டீயும் நல்ல மணமும் சுவையும் கொண்டதாக இருக்கும் . இதை சூப் தயாரிப்பிலும் அசைவ மற்றும் சைவ வகை உணவுகளிலும் உபயோகிக்கலாம். இதனை முறையாக‌ காய வைத்து, பதப்படுத்தப்பட்ட‌ சருகுகளாகவும் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.

வீட்டில் தொட்டியில் வைத்து வளர்க்கலாம், கொசுக்களை விரட்டி அடிக்கும் தன்மை இதற்கு உண்டு என்பதால் அவசியம் வளர்ப்பது நல்லது.

 

2 Comments

  1. JEEVANANDAM K 02/04/2015
    • yogeswaran 10/06/2018

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline