எலிபொறி எச்சரிக்கை கதை

எலிபொறி கதை

 

அது ஒரு கிராமத்து வீடு. அந்த வீட்டுக்காரன் வாத்து, கோழி, பன்றி, ஆடு, மாடு,இவற்றை வளர்த்து வந்தான். அந்த வீட்டில் எலி ஒன்று ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டுக்காரன் பையில் ஏதோ வாங்கி வந்திருந்தான்.

எலிபொறி கதை

மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த எலி அந்தப் பைக்குள் என்னதான் இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தது.பைக்குள்ளிருந்து அந்தப் பொருளை வெளியே எடுத்தான் வீட்டுக்காரன். அதைப் பார்த்த எலி அதிர்ச்சி அடைந்தது. அது ஒரு எலிப்பொறி. அதை தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான், “இனி நம் வீட்டில் எலித் தொல்லை இருக்காது. இன்று இரவு ஒரு மசால் வடையை உள்ளே வைத்து எலிப்பொறியை மூலையில் வைத்துவிடு. எலி மாட்டிக்கொண்டுவிடும்”


தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய எலி வெளியே ஓடிவந்து அங்கிருந்த கோழியிடம் “இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை” என்றது.


அதைகேட்ட கோழி, “ஏ, எலியே! அது உன் கவலை.எனக்கென்ன? எலிப்பொறியில் நானா மாட்டிக் கொள்ளப் போகிறேன்?.” என்று அலட்சியத்துடன் சொன்னது.
வருத்தமடைந்த எலி அருகில் இருந்த வாத்தைப் பார்த்து,”இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை!” என்று எச்சரித்தது.
“முட்டாள் எலியே! என்னிடம் ஏன் இதைச் சொல்கிறாய்? அது உன் கவலை எனக்கென்ன?என்னால் உனக்கு உதவ முடியாது, போ!போ!” துரத்தியது வாத்து.
வேதனையுடன் ஆட்டிடம் சென்று சொன்னது “இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை”
“ஓ! எலியே! உன் நிலை பரிதாபமாகத்தான் உள்ளது. இருந்தாலுன் அது உன் கவலை. எதற்கும் நீ எச்சரிக்கையாக இரு. மசால் வடை வாசனைக்கு மயங்கி விடாதே!”என்று ஏளனத்துடன் சொல்லி விட்டு தழையைத் தின்ன ஆரம்பித்தது.


வீட்டு வாசலில் நாய் வாலாட்டிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தது.நாயாவது நம் கவலையை உணர்கிறதா என்று ,” நாயாரே! எச்சரிக்கை! எச்சரிக்கை! எலிப்பொறி ஒன்று புதிதாக வந்துள்ளது தெரியுமா” என்று எலி நாயிடம் கேட்டது
“தெரியும்.அதனால் எனக்கு ஒன்றும் ஆபத்து இல்லை. என்னால் இந்த வீட்டுக் காரனுக்கும் கஷ்டமில்லை. மீதி உணவை எனக்குப் போடுகிறான். அதுவே எனக்கு போதும் நான் அவனிடம் நன்றியுடன் இருப்பேன். வீட்டைக் காப்பேன். உனக்காக நன் கவலைப் பாட முடியாது.நீ போய் உன்னை காப்பாற்றிக் கொள்ள வழி தேடு என்றது
என்ன செய்வது என்று புரியாமல் நின்ற எலி அங்கிருந்த பன்றியைப் பார்த்து, “பன்றியே! இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை!” எனக் கூவியது.


“எலியே! எலிப்பொறியால் என்னை என்ன செய்ய இயலும்.?அதனால் எனக்கு கவலையில்லை. நான் வீட்டுக்கு வெளியே இருக்கிறேன். என் உதவியை எதிர்பார்பப்பது வீண்?உன் பிரச்சனையை நீதான் தீர்த்துக் கொள்ளவேண்டும்” என்று சொல்லிவிட்டது பன்றி.
கடைசியாக பசுவிடம் வந்த எலி, “ஓ! பசுவே! இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை” என்றது.


“உன்னை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. உன்னால் அவர்களுக்கு என்ன லாபம்? எங்களைப் போல் அவர்களுக்கு நீ உதவியா செய்கிறாய்? அவர்கள் சேர்த்து வைத்ததை எல்லாம் தின்று விடுகிறாய். அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறாய். உன்னை அவர்கள் கொல்ல நினைப்பது நியாம்தானே! உன் தலைவிதி அவ்வளவுதான்!” என்று கிண்டலடித்து சிரித்தது பசு.


யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில் இரவு தூங்காமல் எச்சரிக்கையுடன் விழித்திருந்தது எலி.


நடு இரவில் திடீரென்று எலிப்பொறி “டப்” என்று ஒரு சத்தம் கேட்டது. எலி பொறியில் மாட்டிக்கொண்டிருக்கும் என்று நினைத்து வீட்டுக்காரனின் மனைவி எலிப்பொறியை எடுக்க சென்றாள். அதில் ஒரு நச்சுப் பாம்பின் வால் பொறியில் மாட்டிகொண்டது. அதை அறியாமல் பொறியைத் தொட, பாம்பு தீண்டிவிட்டது. வீட்டுக்காரனின் மனைவி அலற, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றான் வீட்டுக்காரன். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியபோதும் மனைவிக்கு காய்ச்சல் குறையவில்லை.
கோழி சூப் வைத்து சாப்பிட்டால் காய்ச்சல் நின்றுவிடும் என்று யாரோ சொல்ல, அதைகேட்ட வீட்டுக்காரன் தான் வளர்த்த கோழியைக் கொன்றான் சூப் வைத்து சாப்பிட. ஆனாலும் மனைவியின் நிலையில் முன்னேற்றம் இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர்கள்,நண்பர்கள் என்று தினந்தோறும் ஒரு பெருங்கூட்டம் அவனது மனைவியைப் பார்க்க வந்து கொண்டிருந்தது .
வந்திருப்பவர்களுக்கு உணவளிப்பதற்காக வாத்துகளைக் கொன்றான். அதுவும் போதாமல் ஆட்டையும் இறைச்சிக்காக கொன்றுவிட்டான். தூக்கி எறிந்த ஆட்டின் எலும்புத் துண்டுகளை கடித்து தின்ற நாயின் தொண்டையில் எலும்பு சிக்கிக் கொண்டு விக்கி விக்கி இறந்து போய்விட்டது. மனைவியின் சிகிச்சைக்கு செலவு அதிகமாகிக் கொண்டே போனது . பன்றியை இறைச்சிக் கடைக்கு விற்றுவிட்டான்.

எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் வீட்டுக்காரனின் மனைவி இறந்து போனாள். ஈமச் சடங்கிற்கும் அதன் பின் நிகழ்வுகளுக்கும் பணம் இல்லாதால் வேறு வழியின்றி தான் வளர்த்த மாட்டை மாட்டிறைச்சி வியாபாரியிடம் அடிமாடாக விற்றுவிட்டான்.


இவை அனைத்தையும் வீட்டுக்குள்ளிருந்து வேதனையுடனும் கவலையுடனும் பார்த்துக்கொண்டிருந்த எலி “நான் மட்டும்தான் ஆபத்தில் இருக்கிறேன் என்று நினைத்து எனது எச்சரிக்கையை இவர்கள் அலட்சியப் படுத்தினார்களே! எனக்கு வந்த ஆபத்து இவர்களை அல்லவா பலி கொண்டுவிட்டது.” என்று சொல்லி அழுதது.


“பிறர் ஆபத்தில் இருக்கும்போது துன்பம் அவர்களுக்குத்தானே! அதனால் நமக்கென்ன என்று சுயநலத்துடன் இருக்கிறோம். அத்துன்பம் ஏதேனும் ஒருவகையில் நம்மைத் தாக்கும்போதுதான் உண்மையை உணர்கிறோம்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline