கொசுவைக் கட்டுப்படுத்தச் சில இயற்கை வழிகள்

கொசுவைக் கட்டுப்படுத்தச் சில இயற்கை வழிகள்

தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை விரட்டும். மாலை நேரத்தில் தேங்காய் நார்களை எரித்து வீடு முழுக்க அதன் புகையைக் காண்பித்தால், ஒரு கொசுகூட இருக்காது. இயற்கை நார்களின் புகையால், உடலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

வீட்டின் ஒரு பக்கத்தில் நெருப்பு வைத்து அதில் மாம்பூக்களைப் போட்டால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை விரட்டிவிடும்.

வேப்பிலை, நொச்சி இலை ஆகியவற்றை உலர்த்தி, நெருப்பில் போட்டுப் புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை இருக்காது.

நாய்த்துளசிப் பூவை உலர்த்தித் தூள் செய்து சாம்பிராணியுடன் சேர்த்துப் புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை தீரும்.

நம்மை இருட்டிலும் அடையாளம் பார்த்துக் கடிக்கும் திறன் கொசுக்களுக்கு உண்டு. எனவே, வேறு வாசனை வரும் திரவியங்களை நம் உடலில் பூசிக்கொண்டாலும் கொசுக்கடியில் இருந்து தப்பலாம்.

பூண்டு வாசனை கொசுவுக்கு ஆகாது. நிறையப் பூண்டு சாப்பிட்டால், அதன் மணத்திலேயே கொசு ஓடிவிடும்.

விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகின்றனர். இதை நாமும் பயன்படுத்தினால் கொசு பக்கத்தில் வரவே பயப்படும்.

கொசுவை ஒழிக்க ஜன்னல்களில் கொசுவலையை மாட்டிவிடலாம். கொசுவலையில் சிறிய துளைகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை உடனே அடைத்துவிடுவது நல்லது.

பிறந்த குழந்தைகள் மேட் புகையைச் சுவாசிக்கும் சூழலுக்கு ஆளானால், வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். நுரையீரல் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்புகள்கூட இருக்கின்றன என்று லக்னோ மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

ஒரு கொசுவத்தி எரியும்போது, அது வெளியிடும் சாம்பலின் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்குச் சமம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *