கழிவு நீர் பாய்ந்து எனது நிலம் கெட்டு விட்டது. அதை மீண்டும் வளமாக்க முடியுமா?

”திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் பாய்ந்து எனது நிலம் கெட்டு விட்டது. அதை மீண்டும் வளமாக்க முடியுமா?” – வி. பூபதி, வேலம்பாளையம்.

கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தைச் சேர்ந்த நாராயணசாமி பதில் சொல்கிறார்.

”சாயப்பட்டறை கழிவு நீர் பாய்ந்த பகுதியில் புல், பூண்டுகூட முளைக்காது. அந்த அளவுக்கு கழிவு நீரில் ரசாயனங்கள் கலந்துள்ளன. மண்ணில் கலந்துவிட்ட ரசாயனத்தை அகற்றும் சக்தி… வெட்டிவேர் என்கிற பயிருக்கு உண்டு. வெட்டிவேரை சாகுபடி செய்தால், வயலில் உள்ள ரசாயனங்களை உறிஞ்சிவிடும். கூடவே சூபா புல்லையும் வளர்க்கலாம். வெட்டி வேர்களை விற்பனை செய்வதன் மூலம் வருமானமும் கிடைக்கும். ஒரு முறை பயிர் செய்தால், பத்து ஆண்டுகள் வரை அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். ஏக்கருக்கு ஒரு டன் வெட்டிவேர் மகசூல் கிடைக்கும். இன்றைய சந்தை நிலவரப்படி கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெட்டிவேர் சாகுபடி செய்த இரண்டு ஆண்டுகளில் நிலம் வளமானதாக மாறிவிடும். அதன் பிறகு மரப்பயிர்களை சாகுபடி செய்யலாம். மரப்பயிருடன் ஊடுபயிராக வெட்டிவேரை சாகுபடி செய்வது, மேலும் நிலத்தை வளமாக்குவதற்கு உதவும். ஒரு கட்டத்தில் காய்கறி பயிர்களையும் சாகுபடி செய்யும் அளவுக்கு நிலம் மிகமிக வளமானதாக மாறிவிடும்.”

தொடர்புக்கு, செல்போன்: 94433-84746.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *